சட்டம் ஒழுங்கை பராமரிப்பது தான் காவல் துறையின் வேலை. ரவுடிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும். அவ்வாறு காவல் துறை பராமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).

அப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில் மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமிப்ப‌து, தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, பணத்திற்காக கொலை செய்வது, திருட்டு, கொள்ளை, பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.

ஆனால் அவ்வாறு காவல் துறை நேர்மையாக செயல்பட சட்டத்தின் அனைத்து பொந்துகளிலும் புகுந்து வந்து பல கிரிமினல் வேலை செய்து சொத்து சேர்க்கும் பண முதலைகளும், அதில் கூட்டுவாங்கிக் கொள்வதோடு லஞ்சம், கட்டப்பஞ்சாயத்து செய்வது, நில ஆக்கிரமிப்பு செய்வது, ஊழல் செய்து பெரும் பொருளீட்டுவது போன்றவற்றை செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் எவ்விதம் இவ்வாறு காவல் துறை நேர்மையாக செயல்பட அனுமதிப்பார்கள்? தப்பித் தவறி ஏதாவது ஒரு அதிகாரி நேர்மையானவராக வந்து விட்டால் அவரை தங்களது சகல செல்வாக்கையும், அதிகாரங்களையும் பிரயோகித்து பந்தாடிவிடுவார்கள் இந்த ஊழல் அரசியல்வாதிகள்.

ஆதிகால சமுதாயத்தில் பெண்கள் சமஉரிமையுடன் வாழ்ந்தார்கள். அதற்குப் பிறகு பெண்கள் படிப்படியாக சமூக உற்பத்தியில் நேரடியாக பங்குபெற விடாமல் வீட்டுவேலை செய்யும் அடிமையாக்கப்பட்டு சம உரிமை மறுக்கப்பட்டு போகப்போருளாக மாற்றப்பட்டார்கள். இன்று அந்த நிலை இல்லை என்றாலும் அதன் மிச்ச சொச்சம் இருக்கவே செய்கிறது. இன்று பாதிக்கு மேற்பட்ட பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தொழிலாளர்களானாலும், அதிக நேரம் வேலை செய்தபோதும், அவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் என்பது இன்னும் கானல் நீராகவே உள்ளது. வேலைக்கு செல்லும் ஆண்களை விட பெண்களுக்கு பல இன்னல்கள் இழைக்கப்படுகின்றன. மேலதிகாரிகள் பெண்களை ஒரு போகப் பொருளாகவே நினைத்து அவர்களை பலவாறு தொல்லைகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அதை சகித்துக் கொள்ளாது எதிர்த்து கேட்கும் மகளிரை பல கடினமான வேலை கொடுத்து தங்களின் கோபத்தைக் காட்டுகின்றனர்.

காவல் துறையில் கீழ்நிலையில் உள்ள காவலர்களை மேலதிகாரிகள் மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தபோதும் ஒருமையில் அழைப்பதும், சுடுசொற்களால் திட்டுவதும்,அவர்களை மேலதிகாரிகளின் வீட்டில் வீட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்துவதும், அதற்கு பணியாதவர்களை சிறு சிறு குற்றங்கள் கண்டுபிடித்து அதற்கு கடினமான தண்டனை தருவதும், பணி மாற்றம் செய்வதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. கீழ்நிலையில் பணி செய்யும் காவலர்களுக்கு பணி நேரம் என்ற ஒன்று இருப்பதில்லை, அநீதிகளை தட்டி கேட்க முடியாது என்பது போன்ற மோசமான சூழ்நிலையில் அவர்கள் மேலதிகாரிகளுக்கு சலாம் போடுவதும், முடிந்த அளவு மாமுல் வசூல் செய்வதும், ரவுடிகளோடு கூட்டுசேர்ந்து கொண்டு அவர்களுக்கு இன்பார்மராக செயல்படுவதும் இவர்கள் வாங்கும் லஞ்சத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு பகுதியை கொடுப்பதும், உரிமைகளுக்காக போராடுபவர்களை எந்த வித சட்ட விதிகளையும் பார்க்காமல் எங்கெல்லாம் அடிக்க கூடாது என்று விதிகள் இருக்கின்றதோ அங்கு தான் முதலில் அடிப்பதும், விபசாரம், கள்ளசாராயம் காய்ச்சுபவர்களுக்கு துணைபோவதுமான மோசமான ஒட்டுமொத்த சமுக அக்கறையற்றவர்களாக ஆக்கும் பணியை காவல் துறை மேலதிகாரிகளே உருவாக்குகிறார்கள். அப்படியும் சில நல்ல காவலர்கள் இருப்பார்களேயானால் அவர்களுக்கு மேற்சொன்னபடியே கடினமான வேலைகள் தருவதும், இடமாற்றல் செய்வதும் தான் நடைபெறும் என்பது எழுதப்படாத விதியாகும்.

ஆண் காவலர்களின் நிலையே இப்படி இருக்கும் போது பெண்காவலர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக புகார் கொடுக்க பெண்கள் காவல் நிலையம் வரத் தயங்குவார்கள் என்பதால் தான் மகளிருக்கு என்று தனி காவல் நிலையம் உருவாக்கப்பட்டு பெண்காவலர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டார்கள். இருந்தபோதும் மேலதிகாரிகளாக இருப்பவர்கள் பெருமளவில் ஆண்களாகவே இருக்கின்றனர். அதுவும் காவல் துறையில் கீழ்படிதல் என்பது மிகமுக்கியமான கடமையாக இருப்பதாலும், இரவு நேர ட்யூட்டி, முகாமில் பயிற்சி போன்ற அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். அதுவும் இது போன்ற வேலைக்கு வரும் பெண்கள் அனைவரும் வறுமையான சூழ்நிலையில் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும் என்றே வருகின்றனர். அவர்களின் வருவாயை நம்பித்தான் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் இருக்கும் என்ற சூழ்நிலையில் இது போன்ற தொந்தரவுகளை அவர்கள் சகித்துக் கொள்ளவே செய்கின்றனர். வேலைநீக்கம் செய்யப்பட்டால் உடனடியாக நீதிமன்றம் சென்று வேலைக்கு சேர்வது என்பதுவும் குதிரைக்கொம்பே. பணம் செலவு செய்து நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வசதியும் இருக்காது என்பது போன்ற அனைத்து சாதகமான சூழ்நிலைகளும் பெண் காவலர்களுக்கு எதிராக அவர்களைத் தொடர்ந்து இது போல செயல்பட வைக்கிறது.

தங்களுக்கு பணிந்து போகும் பெண்காவலர்களுக்கு சலுகைகள் கொடுப்பதும், உடன்பட மறுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதும் என்ற சூழ்நிலையில் அவர்களுக்கு மாறாத மன உளைச்சலை தருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலைகளில் இருந்து வெளி வரும் காவலர்கள் சமுக பிரக்ஞை அற்றவர்களாக மாறிப் போய் விடுகின்றனர். அதனால் அவர்கள் உயர்பதவிக்கு வரும்போதும் இது போன்ற இளநிலை காவலர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டும் காணாததும் போல இருந்து விடுகின்றனர். இந்த சமுகமே பணத்தால் தான் இயங்கிறது என்பதால் பணம் படைத்தவர்களுக்கு உடனடியாக ஒடி சென்று உதவிகள் செய்வதும் ஏழைகளைக் கண்டாலே வெறுத்து ஒதுக்குவதுமான நிலைக்கு வந்துவிடுகிறார்கள். மேலும் காவல்துறை என்பதே இப்படித் தான் இருக்கும், இங்கு இவ்வாறு நடந்து கொண்டால் தான் நீடிக்க முடியும் என்ற மனநிலை அனைத்து காவல் துறையினரிடத்திலும் ஆழமாக பதிந்து விடுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது என்று பார்க்காமல் அரசு என்ன சொல்கிறதோ அதை ஏவல் நாய்களைப் போல ஏற்று செயல்படுகின்றார்கள். சமூக அநீதிகளை எதிர்த்து போராடுபவர்களை ஒடுக்குவதோடு அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பாய்ச்சி சிறையில் தள்ளுகின்றனர். யார் நியாயவான் என்று பார்க்காமல் யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு சாதகமாக எப்.ஐ.ஆர்கள் போடப்படுகிறது. கொலைவழக்குகளில் இருந்து பணம் படைத்தவர்களை தப்பிக்க வைக்கின்றனர். அனைத்து விதமான தீமைகளின் ஒதுங்கிடமாகவும், அரசின் ஒடுக்குமுறைக் கருவியாகவும் காவல் துறை திகழ்கிறது.

இது போன்ற கையறுநிலையில் பென்காவலர்களில் ஒருவர் 1997ல் விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவான வட்ட, சரக, மாவட்ட மற்றும் உயர்மட்ட அளவில் பாலியல் குற்றசாட்டுக்கு எதிராக குற்ற முறையீட்டு குழு அமைக்கப்படவேண்டும் என்ற உத்தரவை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கோரி ஒரு பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தைரியமாக தாக்கல் செய்துள்ளார். அத்தோடு தனக்கு தனிப்பட்ட முறையில் இழைக்கப்பட்டுள்ள துன்புறுத்தல்களை சீலிட்ட உரையில் வைத்து தாக்கல் செய்துள்ளார். இவ்வாறு குடும்ப வறுமையை காரணம் காட்டி பெண்காவலர்கள் மீது இழைக்கபட்டு வந்த கொடுமைகளை எதிர்த்து ஒரு பெண்காவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் போரட்டத்தை துவங்கி உள்ளார். அவருக்கும், அவரைப் போன்ற பெண்காவலர்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டியதும், அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள, தொடர்ந்து இழைக்கப்பட்டு கொண்டிருக்கின்ற வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதும் அவர்களின் நியாயமான உரிமைகள் மேலதிகாரிகளால் வரைமுறை இல்லாமல் பறிக்கப்படுவதை எதிர்த்து போராட வேண்டியதும் நமது வரலாற்றுக் கடமையாகும்.

Pin It