அப்பாடா! இது வரை உலகமே தடுமாறி ‘மூச்சுத் திணறி’ நின்ற ஒரு கேள்விக்கு இப்போது விடை கிடைத்து விட்டது. ‘அப்படியா, கொரனா எங்கிருந்து எப்படி தோன்றியது? அது எப்படி பரவுகிறது? முழுமையாக ஒழித்துவிட முடியுமா என்பதற்கெல்லாம் விடை கண்டுபிடித்து விட்டார்களா?” என்று கேட்டு விடாதீர்கள். அது தான் இல்லை. இது அதைவிட முக்கியமானது.

இராமாயணத்தில் வரும் அனுமான் (ஆஞ்சநேயன் என்ற பெயரும் உண்டு) எங்கே பிறந்தான் என்பதற்கு விடை கிடைத்து விட்டது. ‘பிறந்த இடத்தை கண்டுபிடித்து விட்டோம்; சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் ஆய்வுக் குழு போட்டு, 21 இதிகாசப் புராணங்களை ‘அக்குவேறு ஆணி வேறு’ என்று அலசி ஆராய்ந்து முடிவு செய்துட்டோம்.

இதோ ஆய்வு நூலாகவே வந்து விட்டது. தமிழக கவர்னர் வெளியிட்டு விட்டார். ஆந்திராவில் சேஷாசல மலை என்று ஒன்று இருக்கிறது. அதிலே அஞ்ச நாத்திரி என்ற இடத்தில் தான் ‘சாட்சாத்’ அனுமான் பிறந்தார்” என்று மகிழ்ச்சி கூத்தாடுகிறது திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்! “அப்பாடா; இனி நிம்மதியாகத் தூங்குவேன்; சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம்” என்று ஆக்சிஜன் சிலிண்டர் கிடைத்ததைப் போல நிம்மதி பெருமூச்சு விடுகிறார் தமிழக ஆளுநர் புரோகித்.

ஒரு வழியாக ‘இராமன்’ ‘பிறந்த’ இடம் உறுதியாகி விட்டது. அதற்காக உச்சநீதிமன்றமே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், சர்வதேச சட்டங்களை எல்லாம் புரட்டிப் புரட்டிப் படித்து. அயோத்தியில் பாபர் மசூதிக்குள் தான் இராமன் இருட்டில் பிறந்திருக்கிறான் என்பதை உறுதி செய்து விட்டது.

இன்னும் நிறைய ஆராய்ச்சிகளை நாம் செய்தாக வேண்டும்! இந்தியா வல்லரசாக வேண்டுமானால் எப்படி எல்லாம் உழைக்க வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா? இராமபிரான் கட்டளையை ஏற்று சீதை தீயில் இறங்கிய இடம் எது? இராமன் வனவாசம் இருந்தபோது, அரச சிம்மாசனத்தில் ‘அமர்ந்து’ நாட்டையே ஆட்சி செய்த செருப்புகள் எந்த கம்பெனியில் தயாரிக்கப்பட்டன? அந்த செருப்பை தைத்துக் கொடுத்த வேதப் பண்டிதர் பெயர் என்ன? எல்லைக் கடந்து இலங்கைக்குப் பறந்து சென்ற இராமராஜ்ய தூதன் அனுமான் எந்த தூதரகத்தில் ‘விசா’ வாங்கினான்? பறந்து செல்லும்போது ‘பிராண வாயு’க்கு தேவையான ‘ஆக்சிஜன் சிலிண்டர்கள்’ அப்போது ‘வாலில்’ இருந்ததா? இப்படி ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய பல பிரச்சினைகள் அணி வகுத்து நிற்கின்றன! இதை எல்லாம்விட மற்றொரு முக்கிய ஆராய்ச்சியையும் உடனடியாக செய்து முடிக்க வேண்டியிருக்கிறது!

அந்தக் காலத்திலேயே ஸ்ரீராமபிரான், தன்னுடைய தம்பி இலட்சுமணன், பரதனிடம் ஒரு மிக முக்கிய செய்தியை அருளிச் சென்றிருக்கலாம். அதாவது பாரத தேசத்தில் தனக்குப் பிறகு தனது ஒரே வாரிசாக சிம்மாசனத்தில் ஒருவர் உட்காரப் போகிறார்; அவருக்கு நரேந்திர மோடி என்பது பெயர்.

அந்த ஒருவரால் மட்டுமே தர்ம ராஜ்யம் நடத்த முடியும்” இப்படி இராமபிரான் தனக்கு கோயில் கட்டியவரைப் பாராட்டாமல் இருந்திருக்கவே மாட்டான். இதை எப்படியாவது ஆராய்ந்து வெளியே கொண்டு வந்தாக வேண்டும்; அதை ஊர் தோறும் பேச வேண்டும்.

இதற்காக இதிகாசம், புராணம், வேதம், உபநிடதம் உள்பட அனைத்து நூல்களையும் ஆய்வு செய்ய மோடி ஆட்சியே ஒரு குழுவைப் போடலாம். பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் தயாராக இருக்கிறார்கள். அல்லது சுப்ரமணியசாமியை வைத்து நீதிமன்றம் வழியாக ஒரு வழக்குக்கு போட்டு தீர்ப்பையே கூட வாங்கி வைத்துக் கொள்ளலாம். நீதிமன்றமும் அதை அவசர வழக்காக உடனே எடுத்துக் கொள்ளத் தயங்காது.

இந்த ஆராய்ச்சிகளை முடித்தால் தான் நாடு வல்லரசு ஆகும்; ‘கொரானா’ அலறிக் கொண்டு பாரத தேசத்திலிருந்து ஓட்டம் பிடிக்கும்!

ஆமாம்! கொரானாவ ஒழிக்க வேறு வழியே இல்லை. ஜெய் ஹனுமான்!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It