வியட்நாம் போரில் பெரும் சரிவைச் சந்தித்த அமெரிக்கா, அந்தப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த போராடி வருகிறது. சீனாவின் ஆதரவுடன் வேகமாக வளரும் வடகொரியாவின் வளர்ச்சி அமெரிக்காவின் கண்களை உறுத்திய வண்ணம் உள்ளது. வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது என அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்தது. அமெரிக்காவின் எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டது.

பொருளாதாரத் தடை உள்ளிட்ட அமெரிக்காவின் மிரட்டல்கள் வியட்நாம் விஷயத்திலும் பயனில்லாமல் போயின. இதனால் வெறுப்பின் உச்சத்திற்குச் சென்ற அமெரிக்கா, தன்னுடைய ஆதரவு நாடான தென் கொரியா மூலமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பத்தில் தென்கொரியா கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இந்த ராணுவப் பயிற்சி கடந்த புதன்கிழமையன்று நிறைவு பெற்றது.

அமெரிக்காவின் ராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் மஞ்சள் கடலில் ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளது. இனான் ராணுவத் தலைமைக் கவுன்சிலின் பயிற்சி மையத்தைச் சேர்ந்த அதிரடிப் படையினர் மற்றும் ராணுவத்தினர் பயிற்சியை மேற்கொண்டனர்.

ஷாண்டாங் பிராந்தியத்தில் உள்ள கடற்கரை நகரம் அருகில் பிரம்மாண்டமான பயிற்சி மேற்கொண்டதாக சீனாவின் இன்குவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சீனாவின் நாஞ்சின் ராணுவத் தலைமையகம் புதிதாக நீண்ட தூர ஏவுகணை ஒன்றை மஞ்சள் கடலை நோக்கி செலுத்தி சோதனை செய்துள்ளது. சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மேற்கண்ட செய்திகள் அமெரிக்காவின் எரிச்சலை அதிகப்படுத்தியுள்ளது.

- அபு லியாகத்

Pin It