பெரியாரின் சிந்தனைகளை பெரியார் திடலுக்குள் முடக்கிப் போட்டுக் கொண்டு பெரியாரியலுக்கு துரோகம் செய்யத் துடித்த தி.க. தலைவர் கி.வீரமணியின், பெரியாரிய துரோகத்தை, பெரியார் திராவிடர் கழகம் முறியடித்து, ‘குடிஅரசு’ தொகுப்புகளை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தன்னைத் தவிர பெரியாருக்கு, எவருமே உரிமை கோர முடியாது என்று கற்பனைக் கனவில் மிதந்து கொண்டிருந்த கி. வீரமணிக்கு, உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு பலத்த அடியைத் தந்தது. ‘குடிஅரசு’ உரிமை, தனது கரங்களைவிட்டுப் போய் விட்டதால் பதறிப்போன வீரமணி, அடுத்து, சொத்துகளும் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் நிலை தடுமாறி நிற்கிறார். இது வரை ‘பெரியார் திராவிடர் கழகம்‘ என்ற அமைப்பை முற்றிலுமாக புறக்கணித்து, கழகத்தின் பெயரைக்கூட குறிப்பிடாமல் பாசாங்கு செய்தவர்கள், இப்போது பெரியார் திராவிடர் கழகத்தை எதிர்த்து ஊர் ஊராகப் பொதுக் கூட்டங்களை நடத்துகிற நிலைக்கு வந்து விட்டனர்.
மக்கள் மன்றத்தில் தனிமைப்பட்டுக் கிடக்கும் அவர்கள், பெரியார் திராவிடர் கழகத் தலைவர், பொதுச் செய லாளர்களை கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் நரகல் நடையில் பேசுவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடி வருகிறார்கள். பொது மக்களே, இல்லாமல், தாங்களே வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்து கூட்டத்தில் உட்கார வைத்து, ‘நரகல் நடை’ பேச்சுகள் முடிந்த பிறகு “கூட்டத்”தினரை யும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு போய் விடுகிறார்கள். பெரியார் திராவிடர் கழகத்தை ‘போலிகள்’ என்றும், அவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவே பொதுக் கூட்டம் என்றும் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள். ‘குடிஅரசு’ தொகுப்புகளை மக்கள் உரிமையாக்கிய பெரியார் திராவிடர் கழகத்துக்கு எதிராக களமிறங்கியுள்ள “திருவாளர் 15 லட்சம்” குழுவினரின் (கழகம் ‘குடிஅரசு’தொகுப்புகளை வெளியிட்டதற்காக வீரமணி கழகத்திடம் கேட்ட தொகை ரூ.15 லட்சம்) பொய் வாதங்களை அவர்களின் கொள்கை துரோகங்களை மக்கள் மன்றத்தில் அம்பலமாக்குவோம் என்று கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழாவில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களும், பொறுப்பாளர்களும் உறுதி ஏற்றனர்.
பெரியாரியத்தையும் ‘குடிஅரசு’ சிந்தனைகளை யும் மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்ட பெரியார் திராவிடர் கழகத்திடம் “எங்கள் துரோகத்தையும் விட்டு விடாதீர்கள். அதை யும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று ‘திருவாளர் ரூ.15 லட்சம் குழு’ தாமாகவே முன் வந்துள்ள நிலையில், அதைச் சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் தயார் என்று கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழாவில் உரையாற்றிய பலரும் குறிப் பிட்டனர்.
ஆழமாக பெரியாரின் ‘குடிஅரசு’ சிந்தனைகளை எடுத்துரைத்து ‘திருவாளர் 15 லட்சத்தின்’ துரோகங்களையும் அக்குவேறு ஆணிவேராக கிழித்தெறிந்தது கோவை ‘குடிஅரசு’ அறிமுக விழா. நிகழ்ச்சி விவரம்
குடிஅரசு அறிமுக விழா பொதுக்கூட்டம் 8.8.2010 ஞாயிறு மாலை 6 மணியளவில் கோவை சத்ய நாராயண அரங்கில் எழுச்சியுடன் நடை பெற்றது. கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவுக்கு வே. கோபால் தலைமை தாங்கினார். நிகழ்வில் சூலூர் வீரமணி, பொள்ளாச்சி கி.விசய ராகவன், கா.சு. நாகராசன், பொள்ளாச்சி இரா. மனோகரன், சி.கே.எம். தமிழ்ச்செல்வி, ந. பன்னீர் செல்வம், திருவரங்கம் சீனி. விடுதலை அரசு, வெ.ஆறுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். கோவை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் அணி சார்பாக குடிஅரசு வழக்கில் நீதிபதிகள் சந்துரு, எம்.ஜெயபால் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா, கிருபாநிதி அமர்வு வழங்கிய தீர்ப்புகள் தமிழாக்கம் செய்யப்பட்டு ‘பெரியாருக்கு விடுதலை’ எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. 48 பக்கங்கள் கொண்ட இந்நூலை பேராசிரியர் கனல் மைந்தன் வெளியிட, வழக்கறிஞர் துரைசாமி பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து - பேராசிரியர் கனல் மைந்தன், பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட் டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் துரைசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.
‘குடிஅரசு’ இதழ்களில் புதைந்துள்ள பெரியாரின் ஆழமான சமூக சிந்தனைகள் மற்றும் வீரமணியின் கொள்கை துரோகங்களை விரிவாக விளக்கி, அனைவரும் பேசினர். விழா மேடையில் 15 தோழர்கள் ‘குடிஅரசு’ தொகுப்புகளைப் பெற்றனர். வழக்கில், கடுமையாக உழைத்து வாதாடிய கழக மூத்த வழக்கறிஞர் துரைசாமி மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய வழக்கறிஞர்களின் தொண்டினைப் பலரும் பாராட்டினர். தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்த வழக்கறிஞர்கள் சி. லெனின், ப. ஜீவா, ரகு, லூயிஸ் , இ.மு. சாஜித் ஆகியோருக்கு கழகத் தலைவர் துண்டு அணிவித்து பாராட்டினார். கோவை மாவட்டம் முழுவதிலிருந்தும் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். மாவட்ட மாநாடு போல் நடந்த நிகழ்ச்சி 11 மணி வரை நீடித்தது. இறுதி வரை தோழர்கள் உரைகளைக் கேட்டனர். ம.ரே. ராசக்குமார் நன்றி கூறினார்.
- நமது செய்தியாளர்