நூல் மதிப்புரை: விடுதலைப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி எழுதிய படுகளத்தில் பாரததேவி 

இதந்தரு மனையினீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்... என்று மகாகவி பாரதி உரைத்தானே அத்தகைய இடர்களை ஏற்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தேச விடுதலைக்காக நடத்திய போராட்டங் களும் போர்க்களங்களும் தியாகம் நிறைந்தவை. பிரிட்டிஷ் போலிஸின் சித்திரவதைத் தாக்குதல், கொடுஞ் சிறைவாசம், உயிர்த்தியாகம் என்று எண்ணிலடங்கா கொடுமைகள்...

ஐயா என்றும் தோழர் ஐ.மா.பா. என்றும் அன்புடனும் மரியாதையுடனும் அனைவராலும் அழைக்கப்படும் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள் தமது 15 வயது சிறார்ப் பருவத்திலேயே இத்தகைய வெங் கொடுமைக்கிடையே தேச சுதந்திரப் போராட்டக் களத்தில் தீரமுடன் குதித்தவர். வீர சுதந்திரம் வேண்டி அவர் அனுபவித்த சிறைவாசம் மொத்தம் 13 ஆண்டுகள்!

“படுகளத்தில் பாரததேவி” எனும் இந்நூல் அவர் 1939-ஆம் ஆண்டில் தமது 22 -ஆம் வயதில் எழுதியது. விடுதலை வேட்கை கொண்ட ஓர் இளைஞனின் ஆவேசமிக்க வீர உரையாக இந்நூலின் எழுத்து நடை அமைந்துள்ளது.

“அதோ! மேலே பாருங்கள் ! ஆகா! அதென்ன அவ்வளவு அற்புதம்!” என்ற முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை படிப்பதற்கு அவ்வளவு வேகம், விறுவிறுப்பு! அழகான, ஆற்றல்மிக்க வார்த்தைகளின் அணிவகுப்பாக உள்ளது நூல்.

பிரிட்டிஷ் ஆட்சியையும், அதன் வஞ்சகத் தனத்தையும், அதற்கு எதிரான இந்திய சுதந்திர எழுச்சியை யும் பலவிதமான படிமச் சித்தரிப்புகளோடு படைத்திருக் கிறார் ஐ.மா.பா.

வருகிறாள் அகிலலோக அதிகாரிணி, ஏகாதி பத்திய வெறிகொண்ட இங்கிலாந்திணி, பேராசை  பிடித்த பிரெஞ்சு தேவி, ஆணவக்குள்ளி அமெரிக்க அரசி, ஜனசத்துரு ஜப்பானியக்குள்ளி, ஜெர்மானிய ஹிட்லர் ஒரு பேய், ரோமானிய முசோலினி ஒரு பிசாசு, மாதாவைக் கொன்ற மாபாதகி ஸ்பெயின், ஜெகஜோதி சமதர்ம ரஷ்யராணி, அடிமை ஒழித்த ஐரிஷ்ராணி, சீன மூதாட்டியின் கண்ணீர், ஏ! புத்த தேவா!, அபிசீனிய அபலையின் அலறல், சீரழிந்த செக்கோ நங்கை, துருக்கி, ஆப்கான், பர்மா, மலேயா, இலங்கை நங்கைகள், தேவி பாரதியின் திவ்ய தரிசனம், சத்தியப் போருக்குத் தமிழ்த் தாயும் புறப்படுகிறாள்- என்று நூலுக்குள் சிறு தலைப் புகளிட்டு தேசியப் பார்வையோடும், உலகப் பார்வை யோடும் எழுதப்பட்டுள்ள உரைகள் இந்திய சுதந்திர எழுச்சியையும், 1939-45 இரண்டாம் உலக யுத்தக் காலத்திய நிலைமைகளையும் தம் கற்பனாலங்காரம் கொண்ட உணர்ச்சி வரிகளால் சித்தரிக்கிறார் நூலாசிரியர் ஐ.மா.பா. இது அன்றைய நிலைமையை இன்றைய தலைமுறை யினர்க்கு இவர் அறிமுகம் செய்து வைப்பதாகவும் உள்ளது.

71 ஆண்டுகளுக்கு முன் 22-வது வயதிலேயே இவர் அறிவுத் திறத்தோடும், எங்கும் குறையா வேகத் துடன் விறுவிறுப்பான தமிழ் நடையிலும் இந்நூலைப் படைத்திருப்பது வியப்பாக உள்ளது.

அன்று சுதந்திர வேட்கை கொண்ட இளைஞர் களின் இதயங்களில் சுதந்திரக் கனலை மூட்டியது இந்நூல். இதுபற்றி அவர் இவ்வாறு கூறுகிறார்- “அன்று நாங்கள் வாலிபர்கள். எனக்கு வயது 22. நான் எழுதுகின்ற போதும், பேசுகின்ற போதும் என் கண் முன்னே 15-30 வயதுக்கு இடைப்பட்ட மாணவமணிகளும் வாலிபச் சிங்கங் களுமே காட்சியளித்தார்கள்.அவர்களுடைய பால்ய பருவத்தையும் உத்வேக உணர்வையும் மனதிற் கொண்டுதான் எழுதினேன்; பேசினேன். ஏனென்றால், நானும் அவ்வாறு தான் இருந்தேன்.”

1939-இல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்நூல் பிறகு இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. மூன்றாம் பதிப்பாக  2009 டிசம்பரில் வந்துள்ளது.

இன்று படிக்க வேண்டிய நூல் இது.

-தி.வ 

வெயியீடு:

ஜெயம் பிரிண்ட்,

9/5 வடக்குக் கோபுர வீதி,

மதுரை-625001.

விலை: ரூ.40

Pin It