உங்களையும் என்னையும் போலவே அவர்களும் மனிதர்கள் தான். பசித்தால் சாப்பிடுகிறார்கள். ருசியாக இருந்தால் நிறையவே சாப்பிடுகிறார்கள். வயிற்றைக் கலக்கினால் கழிவறைக்குச் செல்கிறார்கள். களைப்பு ஏற்பட்டால் படுக்கைக்குப் போகிறார்கள். ஆனால், அவர்கள் தெய்வங்களாக மதிக்கப்படுகிறார்கள். உங்களையும் என்னையும் சீந்துவாரில்லை. ஏனெனில், நீங்களும் நானும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. அதனால் தான் உங்களுக்கும் எனக்கும் செருப்படியும் கூட விழவில்லை.

இந்தியாவின் ஒட்டுமொத்த தேசபக்தியும் கிரிக்கெட் விளையாட்டுக்குள் தான் புதைக்கப்பட்டிருப்பது போலவும், அந்த விளையாட்டை அறியாதவர்களோ அல்லது கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணிக்கு ஏற்படும் வெற்றி தோல்விகளால் உணர்வுப் பூர்வமாக பாதிக்கப்படாதவர்களோ தேசபக்தியே இல்லாதவர்கள் என்பது போலவும் இங்கே ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்ததும் தற்பொழுது இலங்கையிடம் தோற்று இந்தியா உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியவுடன் நாட்டுக்குள் சுனாமியும், பூகம்பமும் ஒரு சேரத் தாக்கியது போல உணர்வலைகள் ஏற்பட்டுள்ளன. அணியின் படுதோல்விக்கு காரணமான வீரர்களெல்லாம் தெய்வ நிலையிலிருந்து பிசாசு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேசபக்தி இல்லாதவர்கள் என்றும், பணத்திற்காக விளையாடுபவர்கள் என்றும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள், விளையாட்டு வீரர்களின் வீடுகளை இடிப்பது போன்ற வன்முறைகள் தொடர்கின்றன.

கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்ததும் தெய்வங்கள் பிசாசுகளாவதும், கொண்டாடப் பட்டவர்கள் கொடும்பாவிகளாகி கொளுத்தப் படுவதும், தேசவிரோதம் போன்ற பேச்சுக்கள் எழுவதும் இந்தியர்களிடம் உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு வகையான மூட நம்பிக்கை தான். விளையாட்டுப் போட்டிகளையும் அதன் நோக்கங்களையும் சராசரி ரசிகன் புரிந்து கொள்ளாதபடி ஊடகங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மாயைதான் இதற்கு அடிப்படைக் காரணம். அனுபவமற்ற பெர்முடாவை இந்திய வீரர்கள் முதல் தோல்விக்குப் பின் கும்மியெடுத்ததும் பிசாசுகள் மீண்டும் தெய்வங்களாயின. இப்பொழுது தெய்வங்கள் மீண்டும் பிசாசுகளாகிவிட்டன.

இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்துவதன் தொடக்கமாக இருக்க வேண்டியவை விளையாட்டுப் போட்டிகள். ஆனால் இங்கோ, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றால் அதனை கார்கில் யுத்தம் போல சித்தரிக்கிறார்கள். (கார்கில் போரே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சித்தரிப்புதான் என்பது தனிக்கதை) பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்துவிட்டால் போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் போல இந்திய கிரிக்கெட் வீரர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். நல்லுறவுக்குப் பதில் எதிர்ப்புணர்வைத்தான் அதிகப்படுத்துகிறது கிரிக்கெட் விளையாட்டு. வெற்றியையும், தோல்வியையும் சமமாகக் கருத வேண்டும் என்ற பண்பை வளர்ப்பதில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், கிரிக்கெட்டை தேசத்தின் அடையாளமாக வளர்த்து வைத்திருப்பதால் வெற்றியை அளவுக்கு மீறிக் கொண்டாடுவதையும், தோல்வி ஏற்பட்டால் அளவுக்கு மீறி வன்முறையில் இறங்குவதையும் தான் இங்கே வளர்த்து வைத்திருக்கிறோம். உலகக் கோப்பையை இந்தியா தான் வென்று வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கி அதற்காக ஊர் ஊருக்கும் யாகங்கள், சிறப்பு பூஜைகள், கிரிக்கெட் பிள்ளையார்கள் என ஒரு ரன்னுக்கும் உதவாத அக்கப்போர்களிலும் அறியாமைகளிலும் மூழ்கினார்கள் இந்திய ரசிகர்கள். இதனை ஊடகங்கள் பெரிதுப்படுத்தி வெளியிட்டன.

வங்கதேசத்திடம் இந்தியா தோல்வியடைந்ததால் வேதனையில் இருந்த தேசபக்தர்கள், அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இலங்கையிடம் இந்தியா தோல்வியடைந்து விட்டது என்றதும், அதே ரசிகர்கள் தான் கிரிக்கெட் வீரர்களின் கொடும்பாவிகளைக் கொளுத்துவது, அவர்களின் வீட்டை இடிப்பது, வீரர்களின் படங்களை செருப்பால் அடிப்பது, துடைப்பம் ஏந்திப் போராட்டம் நடத்துவது என்று ஆர்ப்பாட்டங்களிலும் அதையும் வன்முறையிலும் ஈடுபட்டார்கள். அதையும் ஊடகங்கள் பெரிதுபடுத்தியே வெளியிட்டன. வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு என்கிற விளையாட்டின் இலக்கணத்தை சொல்லித் தராமல் கிரிக்கெட் போட்டியை தேசபக்தியின் அடையாளமாகவும், கிரிக்கெட் வீரர்களை தெய்வங்களாகவும் சித்தரித்ததன் மோசமான விளைவுகள் தான் இவை.

விளையாட்டுகளின் சிறப்புத் தன்மை என்னவென்றால், ஒரு நாடு படைபலம்பணபலம் அதிகார பல கொண்டவையாக இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் அந்த பலம் எடுபடாது. திறமையான ஆட்டக்காரர்களை கொண்ட நாடு சிறியதாக இருந்தாலும் பெரிய நாடுகளை வீழ்த்திவிடும். கிரிக்கெட்டிலும் அதுதான் வழக்கம். உலகத்தையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த நாடான இங்கிலாந்து தான் கிரிக்கெட் விளையாட்டைக் கண்டுபிடித்தது. ஆனால், இதுவரை ஒரு முறை கூட அது உலகக் கோப்பையை வென்தில்லை. அதுபோல, ஒரே நாடே விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவதுமில்லை.

முதலிரண்டு உலகக் கோப்பை போட்டிகளை (1975, 1979) மேற்கிந்தியத் தீவுகள் அணி தான் வென்றது. அதனை எந்த நாடும் வெல்ல முடியாது என நம்பப்பட்டது. ஆனால், 1983ல் வலுவான மேற்கிந்தியத் தீவுகளை இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா எதிர்கொள்கிறது என்று முடிவானதும் போட்டி நடந்த லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் டிக்கெட்டுகள் சரியாக விற்கவில்லை. ஒரு நாள் போட்டிகளை எப்படி ஆடுவது என்பதை அறியாத இந்தியாவா மேற்கிந்தியத் தீவுகளை வெல்லப்போகிறது என்றே பலரும் நினைத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் மிக எளிதாக மூன்றாம் முறையும் கோப்பையை வெல்லப் போகிறது என்ற கணிப்பே நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி இந்திய அணியினர் வெற்றிக் கோப்பையை ஏந்தினர். விளையாட்டுப் போட்டிகள் என்றால் இப்படிப்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் இருக்கத் தான் செய்யும்.

அன்று பலவீனமாகக் கருதப்பட்ட இந்திய அணியினர் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது போலத்தான், இன்று வங்கதேச அணியினர் இந்தியாவை வென்றிருக்கிறார்கள். ஒரு காலத்தில் திறமையற்று இருந்த இலங்கை இந்தியாவை வென்றிருக்கிறது. இந்தியாவும் ஊருக்கு நடையைக் கட்டியிருக்கிறது. இது விளையாட்டுப் போட்டிகளில் நிகழக்கூடிய ஒன்று தான். உண்மையாகவே கிரிக்கெட்டை ரசிக்கின்ற மனநிலை இங்கே உருவாக்கப்பட்டிருந்தால், வங்கதேச இளம் வீரர்களின் ஆட்ட நேர்த்தியையும், அனுபவமிக்க இந்திய அணியினரிடம் ஏற்பட்டிருந்த பதற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து வெற்றிதோல்விக்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படியெல்லாம் சிந்திக்கின்ற தன்மையை நமது ரசிகர்களிடம் ஊடகங்கள் உருவாக்கவில்லை.

தேசப்பற்று என்ற மாயையை மட்டுமே ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. இந்திய அணியினர் கோப்பையை வெல்ல வாழ்த்து தெரிவித்தும், பிரார்த்தனை செய்தும் குறுஞ்செய்திகளை அனுப்பும் படி அகில இந்திய ஊடகங்கள் அழைப்பு விடுத்தன.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள் தியாகிகளல்லர். தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருமானம் பார்க்கின்றவர்கள் தான். அதனை ரசிகர்கள் இப்போது தான் தாமதமாக அறிந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சந்தையை நன்றாகவே புரிந்திருக்கும் பன்னாட்டு நிறுவனத்தினர் தான் முன் கூட்டியே அறிந்து கொண்டவர்கள். அதனால் தான், டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய வீரர்களை பெப்சி குடிக்க வைத்து விளம்பரப் படமாக்கினார்கள். தெய்வங்களே பெப்சியும், கோக்கும் குடிக்கும் போது, அதில் எவ்வளவுதான் பூச்சிக் கொல்லி மருந்து இருந்தாலும் பக்தர்களும் குடிக்கத்தானே செய்வார்கள்.

விளம்பரங்களில் நடிப்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சில நூறு கோடிகள் லாபம். பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் பெருகி பல ஆயிரம் கோடிகள் லாபம். ரசிகனாக இருக்கும் இந்தியக் குடிமகன்களுக்கு பணமிழப்பும் உடல் உபாதைகளும் தான் மிச்சம். இதனை இந்திய ரசிகர்களுக்குப் புரிய வைப்பதற்கு வங்கதேச, இலங்கை விளையாட்டு வீரர்கள் தேவைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் போட்ட போடில்தான் இந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது. தெய்வங்கள், பிசாசுகளாயின. சரியான கோணத்தில் விளையாட்டுப் போட்டிகளைக் காட்டுவதற்கும் அது பற்றிய கருத்துக்களை உருவாக்குவதற்கும் தவறியதன் விளைவு தான் தெய்வம்பிசாசு என்கிற இருவகையான தவறான பார்வைகளும்.

இத்தகைய தவறான பார்வைகளை வளர்த்து வருவதால் தான், விலைவாசி உயர்வு பன்னாட்டு படையெடுப்பு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுகல்விக் கடைகளின் பகல் கொள்ளை மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் சார்ந்த போராட்டங்கள் என்றால் களத்திற்கு வராமல் ஒளிந்து கொள்பவர்கள் கூட கிரிக்கெட் சம்பந்தமான போராட்டங்கள் என்றால் வீதிக்கு வருகிறார்கள்.

மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை ‘இயல்பு வாழ்க்கை பாதிப்பு' என சித்தரிக்கும் ஊடகங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான போராட்டத்தை ‘தேசபக்தியின் அடையாளம்' என முன்னிறுத்துகின்றன. தவறுகளை சரியாகவும், தொடர்ச்சியாகவும் செய்து கொண்டிருப்பதால் தெய்வங்களும், பிசாசுகளும் மாறி மாறி உருவாகிக் கொண்டிருக்கின்றன
Pin It