கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அக்டோபர் முதல் தேதி மாலை 5.30 மணிக்கு துவங்கி அக்டோபர் 2-ம் தேதி நள்ளிரவு வரை ‘தமிழர் எழுச்சி விழா’ நிகழ்ச்சிகள் - 20 மணி நேரம் நடந்தன.

இளைஞர்கள் கூட்டமாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், திகழுவதைப் பார்த்த பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

நகர் மன்ற அரங்குக்குள்ளும், அரங்குக்கு வெளியே பொது வெளியிலும் நடந்த நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடாக எந்த சலசலப்புமின்றி, கூட்டத்தினர் கருத்துகளைக் கேட்டனர். ஊசி போட்டால் சத்தம் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. ஆழமான சிந்தனைகள் வெளிப்படும் போது, கரவொலிகள் எழுந்தன.

பேரணியில் பெரியார் வேடமிட்டு குழந்தைகள், சிறுவர்கள், கழகத்தினர் வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. ‘சன்’ தொலைக்காட்சி செய்திப் பிரிவு, ஊர்வலக் காட்சியை செய்திகளில் தொடர்ந்து ஒளிபரப்பியது.

பேரணி முடிந்து  திறந்தவெளி மைதானத்துக்குள் குத்தூசி குருசாமி நூற்றாண்டு நிகழ்வுகள் துவங்கும் முன் கூட்டத்தின் நடுவே ஒரு கம்பத்தில், ‘பறவைக்காவடி’ போல் அந்தரத்தில் தொங்கி, கழகத் தோழர் மின்விசிறி போல் சுழன்றார். அப்போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஒலிபெருக்கி வழியாக, தந்தை பெரியாரை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பிய காட்சி, உணர்ச்சிகரமாக இருந்தது.

திருச்சி கழகக் குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் ஆழிவேந்தன், நிகழ்ச்சியில் தந்தை பெரியார் பற்றி உரையாற்றி அனைவரையும் கவர்ந்தார்.

திண்டுக்கல் சக்தி மகளிர் கலைக் குழுவினரின் பறையாட்டத்தைப் பாராட்டிப் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “நலிந்து வரும் தமிழர் கிராமியக் கலைகளுக்கு மீண்டும் உயிரூட்டி, பெண்கள் பறையடிக்கக் கூடாது என்ற மரபுகளைத் தகர்த்து எறிந்துள்ளது இந்தக் குழு” என்று குறிப்பிட்டு சக்தி கலைக் குழுவினருக்கும் அதை இயக்கி வரும் அருட் சகோதரி சந்திராவுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

மகளிர் கலைக் குழுவினரின் நிகழ்ச்சிக்கு நடுவே திண்டுக்கல் மாவட்ட கழகச் செயலாளர் துரை. சம்பத், கிராமியப் பாடலைப் பாடி, தோழர்களின் கைதட்டல்களைப் பெற்றார்.

தலித் சுப்பையா, நடத்திய ‘விடுதலைக்குரல்’ எழுச்சி இசை நிகழ்ச்சியில் பாடல்களுக்கு நடுவே, நல்ல சிந்தனைகளை முன் வைத்தார். ‘பெரியார் தலித் மக்களின் விரோதி’ என்று சிலர் செய்து வரும் பிரச்சாரத்தை அழுத்தமாகக் கண்டித்தார். “பெரியார் தலித் மக்களுக்கு பட்டா வாங்கித் தந்தாரா? ரேஷன் கார்டு வாங்கித் தந்தாரா? என்றெல்லாம் கேட்பது அபத்தம். காரல் மார்க்ஸ் பாட்டாளி மக்களுக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தாரா என்று கேட்பது போல் இருக்கிறது. பெரியாரும், மார்க்சும் வரலாற்றுப் போக்கை மாற்றி அமைத்த வரலாற்று நாயகர்கள்” என்று தலித் சுப்பையா கூறிய போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் தோழர் நல்லக்கண்ணு, மாலை நிகழ்ச்சியில் தான் பேச இருந்தார் என்றாலும், காலை முதலே, விழா மேடைக்கு வந்து அமர்ந்து, புலவர் குழந்தை பற்றி சிந்தனையாளர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டார்.

புலவர் குழந்தை அவர்களின் மகள் சமதர்மத்துக்கு கழக சார்பில் ஆடை போர்த்தி பாராட்டிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “தோழர் சமதர்மம் அவர்கள், வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண்மணி. அதிலும், முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றவர்” என்று குறிப்பிட்டார்.

பாராட்டுப் பெற்ற தோழர் சமதர்மம், தான் கொண்டு வந்திருந்த சால்வையை கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு போர்த்தி, “எங்கள் குடும்பத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர் கொளத்தூர் மணி. எனது கணவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்” என்று பாராட்டினார்.

சட்ட எரிப்பில் சிறை சென்று 9 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற சாதி ஒழிப்பு வீரர்களுக்கு, கழகத் தலைவர் ஆடை போர்த்தி சிறப்பு செய்த காட்சி உணர்ச்சி மயமாக இருந்தது. ஏற்புரை வழங்கிய சாதி ஒழிப்பு வீரர் திருமூர்த்தி, பெரியார் அறிவித்த எல்லா போராட்டங்களிலும், மறைந்த ஆனைமலை நரசிம்மன் தலைமையில் பங்கேற்றதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். ஆனைமலை நரசிம்மன் இருந்த போது மாதம் தோறும் ஒரு சிறு வெளியீட்டைக் கொண்டு வந்து, தங்களது பகுதியில் பெரியார் கருத்துகளை பரப்பியதைக் குறிப்பிட்டார். சாதி ஒழிப்புப் போராட்டத்துக்குப் பிறகு ஆனைமலை பஞ்சாயத்துத் தலைவராக - ஒரு தாழ்த்தப்பட்டவரைக் கொண்டு வரவேண்டும் என்று, ஆனைமலை நரசிம்மனும் தோழர்களும் கூடி முடி வெடுத்தது, அருந்ததி சமூகத்தில் பிறந்த ஒரு தோழரை, பஞ்சாயத்துத் தலைவராக்கினோம் என்று அவர் குறிப்பிட்டபோது, அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

சூலூர் அறிவுநெறி பதிப்பகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பற்றி ஒரு நூலும், இந்தி எதிர்ப்புப் போரில் கோவை மாவட்டத்தில் பங்கேற்றவர்கள் பற்றிய ஒரு நூலும் வெளியிடப்பட்டது. நூலாசிரியர், வெளியிட்டாளர், அச்சிட்டோருக்கு ஆடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது.

பெண்கள் நீதிமன்றத்தில், அரசியல்வாதியாகக் கூண்டில் ஏற்றப்பட்ட தோழர் ஆத்தூர் சண்முகம், வழக்கறிஞராக பெங்களூர் கலைச்செல்வி கேட்ட கேள்விக்கு, அரசியல்வாதியாகவே பதிலளித்தது, கூட்டத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சங்கராச்சாரி வேடத்தில் - மதவாதியாக வந்தவர் கூண்டில் ஏறி, கையில் தடியுடன் நீதிபதிகள் உட்பட அனைவருக்கும் ஆசி வழங்கிய போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி! பெண் வழக்கறிஞர்களின் வாதங்களும், நீதிபதியின் தீர்ப்பும் பலத்த வரவேற்பைப் பெற்றன.

இயக்குனர் மணிவண்ணன், கருப்புச்சட்டை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்தார். இயக்குனர்-நடிகர் என்ற பிம்பங்களை உடைத்து, உணர்ச்சியுள்ள ஒரு கொள்கைக்காரராக அவர் பேசினார். “பெரியாரைப் பார்த்து இயக்கத்துக்கு வருவதைவிட பெரியார் கருத்துகளைப் பார்த்து இயக்கத்துக்கு வருவதே முக்கியம்” என்றார் மணிவண்ணன்.

வழக்கம் போல, இயக்குனர் சீமானின் உரை கூட்டத்தினரை “வசியப்”படுத்தியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் உணர்ச்சிகளைக் கொட்டினார்.

சீமான் பேசத் துவங்குவதற்கு முன்பு, பொதுச்செயலாளர் கோவை இராம.கிருட்டிணன் ஒலி பெருக்கி முன் வந்து, “சீமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் இருக்கிறீர்கள். இப்போது விழாச் செலவுக்காக தோழர்கள் உங்களிடம் துண்டேந்தி வருகிறார்கள். அப்போது நீங்கள், சீமான் பேச்சுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, சில்லறைக் காசுகளைப் போட்டு சத்தத்தை எழுப்பாமல், நோட்டுகளாகப் போடுங்கள்” என்றார். கூட்டத்தில் துண்டேந்தியதன் மூலம் வசூலான தொகை ரூ.7877.

‘தமிழர் எழுச்சி விழா’ விளம்பரம் 2 நாட்கள் தொடர்ந்து ‘சூரியன் எப்.எம்.’ வானொலியில் விளம்பரம் செய்யப்பட்டது. விளம்பரத்துக்கான செலவை ஒரு கோவை தோழர் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டார்.

எழுச்சி விழாவையொட்டி கோவை தெற்கு மாவட்டக் கழகத் தோழர்கள், அய்ந்து சிறு வெளியீடுகளை வெளியிட்டிருந்தனர். புலவர் குழந்தை, கோயில் நுழைவுப் போராட்ட முன்னோடி வைத்தியா, குத்தூசியா?, ‘தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும்’, ‘இடஒதுக்கீடு எதற்கு? யாருக்கு? எது வரை? ‘அவங்க மாறமாட்டாங்க...!’ என்ற தலைப்புகளில் - ஆகிய 5 சிறு வெளியீடுகளை வெளியிட்டனர்.

இரண்டு நாள் விழாக்களிலும் விருந்தினருக்கு மூன்று வேளை உணவையும், தனது இல்லத்தில் ஏற்பாடு செய்து வழங்கினார், மாவட்டக் கழகத் தலைவர் சு.துரைசாமி.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையைத் தொடங்கிய சில நிமிடங்களில், கடும் மழை பெய்தது. திறந்தவெளி மேடையில், மழையில் நனைந்து கொண்டே தோழர் கொளத்தூர் மணி பேச, இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் சீமான், 75 வயது நிறைந்த குருவிக்கரம்பை வேலு, அதியமான் உட்பட அனைவரும் மேடையில் கொட்டும் மழையில் நனைந்தபடியே மேடையில் அமர்ந்து, தோழர் கொளத்தூர் மணியின் உரையைக் கேட்டனர்.