உங்கள் இளமைக் காலங்களோடு பொருத்திப் பார்க்கையில் ஈழத்தில் இன்றிருக்கும் இளைய தலைமுறையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு வேண்டியது என்னுடைய மண்ணின் விடுதலை.. எனக்கு உயிர் கொடுத்த என்னுடைய ஊர்.. எனக்கு உடல் தந்த என்னுடைய ஊர். நான் ஓடி விளையாடி தவழ்ந்து கிடந்த என்னுடைய ஊரில்.. நாவல் பழம் பொறுக்கி.. அதை பாவாடையில் கட்டி அடிவாங்கிய என்னுடைய இடம்.. வீட்டில் கொய்யாப்பழம் பிடுங்கி, பன மட்டையில் விளையாடி அதற்கும் அடி வாங்கிய அந்த சுகமான நினைவுகள்.. சின்ன மேளம் என்று சொல்வார்கள்.. அதாவது நடனம் ஆட தெரியாதவர்கள். திருவிழாவில்.. ஓ ரசிக சீமானே வா என்று அந்த பாட்டுகளுக்கு எல்லாம்.. புழுதியை தட்டி தட்டி அப்படி காலை ஆட்டி ஆடுவார்கள்.. அதை பார்த்து இரசித்தது.. நாங்கள் திரிந்த வீதிகள்.. ஒவ்வொரு ஊரிலும் அப்படித்தான்.. சுற்றி இருக்கிறதெல்லாம் சொந்த பந்தங்கள்தான்.. ஆச்சி.. பெரியம்மா.. பெரியப்பா.. அப்படித்தான். எல்லாரும் இருப்போம்.. அவர்கள் வீட்டில் எல்லாம் இளவட்டங்கள்.. என்னுடைய தம்பி.. சக இளவட்டங்கள்.. சாயந்திரம் என்றால்.. குளிச்சு பவுடர் பூசி.. சைக்கிளில் ஊர் சுத்தறது அதெல்லாம் சுகமான நினைவுகள்.. 

இப்போது எனக்கு ஒரே கவலை.. இந்த தலைமுறைக்கு அந்த சுகங்கள் தெரியாது.. நாங்கள் இருந்த வீட்டில் 13 மாமரம்.. அந்த மாமரத்தில் காயைப் பிடுங்கி.. கல்லிலே போட்டு குத்தி.. சாப்பிட்டு.. வயிற்று வலி வந்தும்.. எங்களுடைய சாவகச்சேரியில் தேவேந்திரா தியேட்டர் என்று ஒன்று இருந்தது.. அதுவும் எங்கள் சொந்தக்காரருடையதுதான்.. அந்த தியேட்டரில் கதிரையில்.. முட்டைப் பூச்சி இருக்கும்.. நாங்கள் எங்களுடைய சகோதரர்கள் எல்லாம் போய்.. மச்சான் மச்சாள்.. எல்லாம் போய்.. ஆண்கள் காலடியில் கீழே இருந்து பார்ப்பார்கள்.. நாங்கள் பின்னால்.. உடைஞ்ச கதிரையில.. மூட்டைப் பூச்சி.. நிறைய மூட்டைப் பூச்சி கடிக்க கடிக்க.. அதை சொறிந்து சொறிந்து கொண்டே படம் பார்க்கிறது.. அதெல்லாம் நினைச்சு பார்ப்பது எவ்வளவு சுகம்.. அந்த சுகங்கள்.. அந்த ஊரில் திரியறது.. கட்டி விளையாடினது.. எங்களுக்கு அந்த காலத்தில பொம்மைகள் என்று இப்போ இருப்பது போல் ஒன்றுமே இல்லை.. எங்களுக்குத் தெரிந்தது சின்ன சட்டிப் பானையில் சோறு வைச்சு விளையாடுறது.. டீச்சர் விளையாட்டு.. இதுகளை தவிர வேறு இல்லை.. ஆனால் அதிலேயே.. எத்தனை சுகங்கள்.. கெந்தி விளையாடுறது.. பாண்டி விளையாடுறது.. அதுகளை எல்லாம்.. நாங்கள் அனுபவித்தது. அதை இப்போ நினைச்சால்..

அப்புறம்.. சாப்பாடு.. புட்டு இடியப்பம்.. பழஞ்சோறில.. மீன் குழம்பும்.. அம்மா பழஞ்சோறில் மீன் குழம்பை குழைச்சு தந்தார் என்றால்.. ஆகா.. அந்த ருசி.. அது நல்ல சுகம்.. காலையில் தேங்காய் குழல் புட்டு அவிச்சு.. அதோடு.. கத்த.. மாம்பழம்.. நான் சொல்வேன்.. உலகிலேயே மிக ருசியான மாம்பழம் என்றால் அந்த மாம்பழம் தான்.. அதை புட்டோட குழைச்சு சாப்பிட்டா அந்த ருசி இருக்குதே.. ஆகா... அதெல்லாம் இப்ப நினைக்க நினைக்க.. அது சுகமான நினைவுகள்.. சொந்த பந்தங்கள் தர்ற துன்பங்கள் கூட சுகமான சுமைகள்.. இப்போ நினைச்சால் அதுகளுக்காக.. அந்த சுமைகளுக்காக இப்போ மனசு ஏங்குது.. அதெல்லாம் போயிட்டுது.. இனியது திரும்பி வரவே வராது.. எங்களுடைய இளைய சந்ததிக்கு அது என்னவென்று தெரியாது.. ஒரு சந்ததி.. ..முற்றாக கல்வியை இழந்து விட்டது.. முற்றாக தனது பண்பாட்டை, தனது கலையை ,வளத்தை இழந்து தவிக்கிறது.. அதை மீட்கத்தான் போராட்டம் நடக்கிறது..

ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்கெடுக்கிறார்கள் என்ற செய்தி முதன் முதலில் கேள்விப்பட்ட போது உங்கள் உணர்வு என்னவாக இருந்தது?

எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஒரு பெண்.. அப்பா செல்லம். அது ஒரு சரியான அப்பாவிப் பெண்.. வீடு பள்ளிக்கூடம் வீடு.. அப்பா அம்மா.. வீட்டிற்கு வந்து அம்மாவிற்கு சமையலில் உதவி செய்வாள்.. அவ்வளவுதான்.. ஆனால் அவளுக்கு அப்பா என்றால் உயிர்.. ஒரு முறை இராணுவம் வந்து.. இந்த தகப்பனை கூட்டிட்டு போய்.. ஏதோ யாரைப் பற்றியோ கேட்டு விசாரிச்சு அடிச்சுட்டு அனுப்பிட்டார்கள்.. நல்ல காயத்துடன் திரும்பி இருக்கிறார்.. இந்த பெண் கேட்டிருக்கு.. என்னப்பா இராணுவம் உங்களை அடிச்சிட்டுதா என்று அந்த பிள்ளை அன்றைக்கு இரவு முழுக்க நித்திரை இல்லை.. அது சரியான அப்பா செல்லம்.. அதற்கு அப்புறம் நான்கு, ஆறு மாதங்களுக்கு பிறகு.. இராணுவம் திரும்ப வந்து இவரைக் கூட்டிக் கொண்டு போய் அடிஅடியென்று அடித்திருக்கிறார்கள். கேட்டது யாரோ அடுத்த வீட்டு பையனைப் பற்றி.. இவருக்கு உண்மையில் ஒன்றுமே தெரியாது.. இவரை அடிஅடியென்று அடித்து.. சரியான காயத்தோடு வீட்டுக்கு வந்திருக்கிறார்.. இந்த பிள்ளை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது.. ஏனப்பா திரும்ப அடிச்சாங்களா என்று கேட்டிருக்குது.. பின்னர் அழுதுட்டு போயிட்டுது..

அடுத்த நாள் பிள்ளை வீட்டில இல்லை.. கடிதம் எழுதி வைச்சிருக்குது.. அப்பா.. என்னைத் தேடாதீர்கள்.. நான் அண்ணன் அவர்களுடன் சேர்ந்து போராட போகிறேன்.. அண்ணன் என்றால் இயக்கம்.. போராளிகள்.. அப்புறம் ஆறு மாதத்திற்கு பிறகு இந்த பிள்ளை வீட்டிற்கு வந்திருக்கிறது.. தாய் தகப்பனை காண.. தாய் சொன்னாள்.. மகளே நீ எங்கேயிருந்தாலும் சுகமாய் இரு.. இங்கே வராதே.. ஏனென்றால்.. நீ இங்கே வந்தால் உன்னுடைய அடுத்த சகோதரர்களுக்கு ஆபத்து.. ஆன படியால் நீ இங்கே வராதே.. ஆனால் நீ எங்கே இருந்தாலும் சுகமாய் இரு..

நான் உங்களுக்கு சொல்றது ஒன்று தான்... எங்கள் பெண்களுக்குள் உறங்கிக் கிடந்த அந்த வீரம்.. சிலிர்த்து எழுந்துட்டுது.. ஏனென்றால்.. தன்னுடைய தந்தை.. தன்னுடைய சகோதரன்.. தன்னுடைய அண்ணா தம்பி.. தன்னுடைய கணவன்.. தன்னுடைய மகன் என்று வரும்போது.. அவர்களுக்கு இன்னல் என்று வரும்போது... பெண்களுக்குள்ளே இயல்பிலேயே வீரம் உண்டு.. அது உறங்கிக் கிடந்தது.. இப்போ சிலிர்த்து எழுந்திருந்திருக்கிறது..

நான் என்னுடைய தமிழக நண்பர்களுக்குச் சொல்வேன்.. புறநானூற்றில் தந்தை களத்தில் இறந்தான்.. சகோதரன் களத்தில் இறந்தான்.. உடனே அவள்.. தன்னுடைய சிறு மகனை.. தயாரித்து.. மகனே சென்று வா, வென்று வா என்று அனுப்பினாள்.. இன்னொரு பெண்.. களத்திற்கு போராடச் சென்ற மகன்.. திரும்ப வரும் நேரத்தில்.. வாசலில் நின்று கொண்டு என் மகனை பார்த்தீர்களா என்று வருபவர்களிடம் கேட்க.. அவர்களும்.. ம்... பார்த்தோம்.. அவன் போரில் இறந்து விட்டான் என்று. உடனே அவள் கேட்கிறாள்.. மார்பில் அடிபட்டு இறந்தானா? முதுகிலா என்று.. அவன் பார்த்தானோ பார்க்கவில்லையோ.. முதுகில் என்று விடுகிறான்.. அவள் உடனே வீரம் பேசிக்கொண்டு போய்ச் சொன்னாள்.. நீ கோழையின் மகனாகப் பிறக்கவில்லை.. கோழையின் வயிற்றிலும் பிறக்கவில்லை.. அப்படி நீ முதுகில் அடிபட்டிருந்தால்.. உனக்கு பால் கொடுத்த என் கொங்கைகளை அறுத்து எறிவேன் என்று உறுதி கூறுகிறாள்.. எந்த வீரப் பெண்ணாவது.. நீயும் போய்விட்டாயா..இதோ நான் இருக்கிறேன்.. என்று சிலிர்த்தெழுந்து போர்க் களத்திற்கு போகவில்லை.. ஆனால் நண்பர்களே அந்த வீரத்தை நீங்கள் தமிழீழத்தில் தான் காண இயலும்.. தமிழீழத்தில் மட்டுமே காண முடியும்.

களத்தில் பெண்கள் இறங்கியிருப்பது சமூகத்தில் என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

சமூகத்தில் என்றால்.. 1995இல் போர் நிறுத்தம் முடிந்த போது.. இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டது.. உடனே நான் அங்கு போயிட்டேன்.. தம்பி பிரபாகரனை நேர்காணல் செய்தேன்.. அடுத்த நாள் விழா நடக்கிறது.. கரும்புலிகளை கௌரவிக்க.. இரு பெண் போராளிகளும் இரு ஆண் போராளிகளும் சென்றுதான் இதனை செய்தனர்.. ஒரு பெண் போராளியின் தாய்.. அவளுக்கும் மிக இள வயது.. அவள் கையில் சிறு குழந்தை.. என்னுடைய கண்களில் கண்ணீர்.. ஆனால் அந்த தாய் சும்மா தில்லாக ஜம்மென்று நிற்கிறாள். நான் அவள் அருகில் சென்று கேட்டேன்.. ஏனம்மா உனக்கு கஷ்டம் இல்லையா என்று..? என்னத்தை சொல்றீங்க அம்மா என்றாள்..? உன் மகள் போயிட்டாளே.. என்று? இதிலென்ன அம்மா.. மண்ணுக்காக சாகாவிட்டால்.. என்றாவது குண்டடிப்பட்டு குண்டுவீச்சில் சாகப் போகிறாள்.. அதிலும் பார்க்க மண்ணுக்காக செத்ததில் எனக்கு எந்த துக்கமும் இல்லை என்று. சாதாரண ஒரு கிராமத்து பெண்.. படிப்பறிவு இல்லாத ஒரு பெண்.. அவளுடைய உள்ளத்தில் எழுந்த வீரத்தைப் பார்க்கும் போது.. எனக்குப் பெருமையாக இருந்தது.

அப்புறம் இன்னொரு பெண்.. அவள் ஒரு இளம்பெண்.. ஒரு போராளி.. நான் எனக்கு சாவதென்றால் பயமடி.. உடனே அவள் சொன்னாள்.. நீங்கள் சாகாமல் இருக்கப் போகிறீர்களா? நீங்களும்தான் சாகப் போறீங்க.. அது வாழ்க்கையின் நியதி.. நீங்கள் செத்தால் யார் உங்களுக்கு அழப் போகிறார்?.. உங்கள் பிள்ளைகள்.. இல்ல சொந்தங்கள்.. அழுதுபோட்டு மறந்து விடுவிணம்.. ஆனால் நான் மண்ணுக்காக இறந்தால்.. எத்தனை தாய்மார்கள் எனக்காக கண்ணீர் விடுவார்கள் தெரியுமா?

நான் எவ்வளவு.. பெரிய இலட்சியத்திற்காக சாகப் போகிறேன் தெரியுமா.. உங்களைப் போல நோய் கண்டு படுக்கையில படுத்து சாக மாட்டேன்.. என்று.

நான் அவளுக்கு முன்னால் ஒன்றுமே இல்லாதவள்.. அந்த பாதிப்பு என்பது.. உண்மையில் அந்த பெண்களுக்கு.. நாங்கள் அடுக்களைக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல.. அடுக்களை ராணிகள் அல்ல.. ஈழத்துப் பெண்கள் இந்திய பெண்களை விடவும் துணிவுடையவர்கள்.. அங்கு இந்த ஆண்கள் ஆதிக்கம் அவ்வளவாக இருக்க முடியாது.. ஆண்கள் கொடுமைப் படுத்தறது.. சித்ரவதை செய்யறது.. அதெல்லாம் இருக்கலாம்.. ஆனால் இங்கிலும் குறைவு.. ஒன்றிரண்டு இருக்கலாமே ஒழிய.. நாங்கள் கொஞ்சம் கையோங்கிய பெண்கள்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களை மூன்று முறை நேர்காணல் செய்துள்ளீர்கள்.. தனிப்பட்ட முறையில் ஒரு மனிதராக அவரைப் பற்றிய உங்கள் பார்வை என்ன..?

நான் சொன்னால் பலர் ஏற்றுக் கொள்ள மறுக்கக் கூடும்.. என்னைப் பொறுத்த வரையில்.. அவர் ஒரு மென்மையான மனிதர்.. உண்மையில் பார்த்தால்.. இவரா இவ்வளவு இராணுவ நுணுக்கங்களும் அறிவும் கொண்டவர் என்று வியக்கத் தோன்றும்.. வெள்ளை மனம் படைத்தவர்.. கள்ளம் கபடமற்ற சிரிப்பு.. உண்மையாகப் பேசுவார்.. உதட்டளவில் பேசவே மாட்டார்.. மிகுந்த மரியாதையுடன் பேசுவார். எல்லோரையும் அய்யா அம்மா என்றுதான் விளிப்பார்.. வெள்ளை மனம் என்றுதான் எனக்குத் தோன்றியது.. ஒரு நல்ல மனிதர்.. மனித நேயம் மிக்கவர்.. மனித நேயம் மிக்கவர் எப்படி இத்தனை வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார் என்று ஒரு சிலர் கேட்பதுண்டு.. என்னைப் பொறுத்த வரையில்.. அவரது வன்முறைக்கு பின்னால் ஒரு தார்மீக காரணம் உண்டு.

நான் மட்டுமல்ல மக்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஏனெனில்.. ஒரு அமைப்பு என்பது மக்களின் பரவலான ஆதரவு இல்லாவிட்டால் இயங்க முடியாது. ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.. மக்களின் ஆதரவில்லாவிட்டால், தி.மு.க ஆட்சியில் இருக்க முடியாது.. காங்கிரஸ் ஆட்சியில் இருக்க முடியாது.. மக்கள் தான் அவர்களை தேர்ந்தெடுத்தவர்கள். எதற்கும் இறுதியில் மக்கள் தான் நீதிபதிகள்.. அது ஜனநாயகம் என்றாலும் சரி.. சர்வாதிகாரம் என்றாலும் சரி.. சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதும் மக்கள் தானே.. எனவே மக்களுடைய ஆதரவின்றி எந்த இயக்கமும் செயல்பட முடியாது..

இந்த போர் நிறுத்த காலத்தில் அங்கு சென்றிருந்தீர்களா? அங்கு ஒரு தனி அரசு நடப்பதாகச் சொல்லப்படுகிறது.. அந்த அரசின் செயல்பாடுகள்.. புனரமைப்பு பணிகள் எப்படி இருக்கின்றன?

ஆம் அங்கு எல்லாம் நடக்கிறது.. மருத்துவ பணிகள்.. புனரமைப்பு பணிகள்.. பல இல்லங்கள்.. நீங்கள் செஞ்சோலைக்குச் சென்று பார்க்க வேண்டும்.. அங்கு குழந்தைகளுக்கு ஒரு அட்டவணை உள்ளது.. காலையில் என்ன சாப்பாடு.. என்ன பணிகள்.. செஞ்சோலையை பொறுப்பேற்று நடத்துபவர் ஜனனி என்ற ஒரு போராளி.. அவர் அக்குழந்தைகளுக்கு பெரியம்மா... அங்கிருக்கும் உறவுகள் எல்லாம் அப்படித்தான்.. பெரியம்மா.. சின்னம்மா.. அம்மா.. தாய் தந்தை இழந்த உணர்வே அவர்களுக்கு வராதவாறு அவர்களை வளர்க்கிறார்கள்.. புலம் பெயர் வாழ் தமிழர்கள் நிறைய பேர்.. குழந்தைகள் இல்லங்கள் அமைத்து அங்கிருந்து செய்கிறார்கள்.. குழந்தைகளை தத்து எடுக்கிற மாதிரி.. அதாவது ஒரு மூன்று பிள்ளைகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டு.. அப்படி..

அது மட்டுமல்ல.. சாதிப் பூசல்கள் அங்கு இல்லை இப்போ.. இங்கே இருப்பது போல் உயர்சாதி.. கீழ் சாதி என்றெல்லாம் இல்லாமல்.. சாதியைப் பற்றி பேசுவதே அசிங்கம் என்ற நிலை வந்துவிட்டது இப்போ.. நான் சிறு வயதாக வாழ்ந்த காலத்திலிருந்த நிலைமைகள் இப்போ பெரிதும் மாறுபட்டிருக்கிறது.. சீதனம் எல்லாம் எவ்வளவோ குறைஞ்சிட்டுது.. அந்த சாதி கட்டுப்பாடெல்லாம் எவ்வளவோ குறைஞ்சிட்டுது..

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது ஒரு அரசியல்வாதி உண்டு.. சுந்தரலிங்கம் என்று.. அது ஒரு பெரிய குடும்பம்.. எல்லோரும் உயர் பதவிகளில் இருந்த குடும்பம்.. சுந்தரலிங்கம் என்றவர் நாடாளுமன்ற உறுப்பினர்.. கோயில்களில் உயர் சாதியினரைத் தவிர யாரும் போகக் கூடாதென்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.. கோயில்களில்.. வெள்ளாளர்கள்.. மற்ற உயர் சாதியினராகக் கருதப்பட்டவர்கள் தவிர வேறு ஒருவரும் போகக் கூடாதென்று கோயிலுக்கு வெளியே நின்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.. இப்போ அப்படி இல்லையே. நிறைய மாறியிருக்கிறது. இங்கே புத்த சமயம் ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.. ஏனென்றால் பெண்களுக்கு முதன் முதலில் உரிமை கொடுத்தவர் புத்தர் தான்.. பெண் துறவிகள் வந்ததும் புத்த மதத்தில் தான்.. புத்தமதம் ஒரு உயர்வான மதம்.. அதை பின்பற்றுபவர்கள்.. அதை சரியாகப் பின்பற்றுவதில்லை.. அது ஒரு வேதனையான விசயம்..

என்னைப் பொறுத்த வரையில் இன்று ஈழத்தில் நல்ல வளர்ச்சி.. உணவு விடுதிகள்.. வசதிகள்.. அருமையான கட்டமைப்புகள்.. திறமையான நிருவாகம்.. திறமையான காவல்துறை.. மிக நன்றாக வந்துக் கொண்டிருக்கிறது..

ஆனால் அமைதிதான் இல்லை..

புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறார்கள்?

1983 இனக்கலவரத்துக்குப் பின் அகதிகளாக வந்தவர்கள் படிப்பில் அவ்வளவு உயர்ந்தவர்கள் அல்லர். படிக்காதவர்கள். கிராமத்தைச் சேர்ந்தவர்கள். உயிர் தப்ப இருக்கிற காணி சொத்து எல்லாத்தையும் விற்று புள்ள உயிரோடு இருந்தாப்போதுமென்று அப்பா அம்மா அனுப்பிவச்சதால் வந்தவர்கள்.

வெளிநாடுகளில் தமிழ்க் கலாச்சாரத்தை..தமிழ் பண்பாட்டை வளர்ப்பதே இலங்கைத் தமிழர்கள்தான். இந்தியத் தமிழர்கள் அல்ல. இந்தியத் தமிழர்கள் அங்கே எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அங்கே பள்ளிக்கூடங்கள் வரவில்லை. ஒன்றும் வரவில்லை. நாங்கள் சென்றுதான் அனைத்தும் வந்தது. லண்டன் நகரில் எத்தனை தமிழ்க் கடைகள்? இறைச்சிக் கடையிலிருந்து சவரக் கடைவரை... என்ன வேண்டுமோ சொல்லுங்கள்.. அது அங்கே இருக்கும்.. வந்தவர்கள் மேல்படிப்பு படிக்காதவர்களாக இருந்தாலும் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் அகதிகளாக வந்து இன்று கோடீசுவரர்களாகி இருக்கின்றனர். எத்தனையோ வெற்றிகள். தோல்விகள்.. சோதனைகள்... தோல்விகளை துன்பங்களைப் பார்க்கையில் வெற்றிகள் ஏராளம்.

உண்மையில் ஈழத்தில் இன்று தீர்வு என்று ஒன்று வந்தால் யாருமே எங்களுக்கு உதவத் தேவையில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்களால் எங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப ¬முடியும். எங்களால் எங்கள் நாட்டையும் மண்ணையும் நிமிர்த்த முடியும். பள்ளிக்கூடங்களைக் கட்ட முடியும். மருத்துவமனைகளை கட்டி எழுப்புவோம்.. வீடு வாசல் எல்லாவற்றையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

பட்டினி கிடந்து வந்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். எத்தனையோ கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள்... என்னுடைய தம்பி மகள்.. அவளுக்கு ஆங்கிலம் கூட வடிவாகத் தெரியாது.. அவள் சாதாரணமான ஒரு பாக்டரியில் வேலை செய்யும் ஒரு பையனை திருமணம் முடித்தாள்.. அவள் வேலைப் பார்த்தது பெட்ரோல் ஸ்டேஷனில்.. இன்று அவள் கோடீசுவரி.. இது ஒரு சான்று.. இப்படி எத்தனை பேர்.. எங்கள் மக்கள்.. எத்தனை சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.. காரணம் கடும் உழைப்பு.. எங்கள் மண்ணை மீட்க வேண்டும். என்ற ஒரே இலட்சியத்துடன் உழைக்கிறார்கள்.. எங்களால் கட்டியெழுப்ப முடியும் எங்கள் நாட்டை.. வேறு ஒருத்தருடைய உதவியும் தேவையே இல்லை.. நாங்கள் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமே இல்லை..

ஆனால் எங்களுடைய தேவை.. எங்கள் நாட்டிற்கு.. எங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு.. தமிழன் தன்னுடைய மண்ணில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.. தமிழனுக்கு அவனுடைய நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.. அதற்கு இந்தியாவைத் தவிர வேறு நாதியே இல்லை.. ஏனென்றால் நாங்கள் இன்னமும் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.. பிரச்சினை என்னவென்றால் அதை ஏன் இங்குள்ள தலைவர்கள் உணரவில்லை. இல்லை என்பது தான்.. பலருக்கு உணர்வு இருக்கிறது.. அதையும் நான் மறுப்பதற்கு இல்லை.. எத்தனையோ இளைஞர்களுக்கு எங்களுடைய பிரச்னைகள் புரிகிறது.. ஆனால் அது அடி மட்டத்திற்கு செல்லவில்லை..

இந்தியாவில் நிலவுவது போலான ஒரு தீர்வை ¬வைக்கிறார்களே.. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதென நினைக்கிறீர்களா?

இல்லை...நான் பலரைக் கண்டு எங்களது துன்பத் துயரங்களைச் சொல்லியிருக்கிறேன்.

நான் சொன்னேன்... நான் புலிகளுக்காக வாதாட வரவே இல்லை. அவர்களை விடுங்கள்.. அது இவர்களுக்குள் உள்ள பிரச்னை.. அது இருதரப்பு.. புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை.

பல இந்தியத் தமிழர்கள் கூறும் விவாதம் என்னெவெனில் நாங்கள் இங்கே சிறுபான்மையினர். இங்கே நாங்கள் ஒற்றுமையாகஇருக்கிறோம் என்கின்றனர்..

இந்தியா தனது பல்வேறு தேசிய மொழி பேசும் மக்களை நடத்தும் விதத்தில் இலங்கை தனது சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்களை நடத்தியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது.

இந்திய அரசு மாதிரி இலங்கை அரசு இல்லை. மிக கொடுங்கோன்மையான இலங்கை அரசை ஒப்பிடும் போது இந்தியா பரவாயில்லை.

இப்ப...கடைசி முறைக்கு முன்ன நடந்த ஜெனீவா பேச்சுவார்த்தையில் சில விசயங்களுக்கு உடன்பாட்டுக்கு வந்தார்கள். ஆனால் திரும்பியதும் அந்த உடன்பாட்டை நிறைவேற்றவேயில்லை. சாஸ்திரீபண்டாரிநாயக்க ஒப்பந்தம், செல்வா பண்டரிநாயக்க ஒப்பந்தம் என எல்லாவற்றையும் கிழித்தெறிந்தவர்கள்தானே.

இவர்களிடம் உடன்படிக்கை எனறு ஏற்பட்டால் அது நிறைவேறப் போவது இல்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை கேட்டால் ஏனைய மேற்குலக நாடுகளை விட இந்தியா உண்மையான ஈடுபாட்டுடன், ஆத்மபூர்வமாக இலங்கையில் அமைதி வரவேண்டும் என்று விரும்பினால் அது சாத்தியமாகும். அமைதி முயற்சியைக் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தி. ஒரே அரசு இந்தியாதான். அதைத்தான் இலங்கைத் தமிழர்களும் விரும்புகிறார்கள்.

இங்கே வருவதற்கு ஒருவாரத்துக்கு முன்னால் இந்தியத் தூதரகத்துக்கு முன்னர் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோம். எங்களைக் காப்பாற்று! என்று. சரி.. ஒரு சில தவறுகள் கடந்த காலங்களில் இழைக்கப்பட்டிருக்கலாம். கடந்த காலத்திலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்க மு¬டியாது. தவறுகள் திருத்தப்படலாம் அல்லவா. சரி தவறுகள் செய்துவிட்டோம். அதற்காக எங்களை மீண்டும் மீண்டும் தண்டித்துக் கொண்டிருப்பீர்களா? தண்டிக்காதீர்கள். எங்களுக்கு ஓடுவதற்கு இடமில்லை.

எங்கள் தலையைச் சாய்த்துக் கொள்வதற்கு இந்தியாவைத் தவிர எங்களுக்கு வேறு மண் இல்லை.

1983இல் இனக்கலவரம் நடந்த போது இந்தியர்கள் அனைவருமே. அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல.. டில்லியில் பம்பாயில் எல்லா இடங்களிலுமே ஆர்ப்பாட்டம் நடந்தது எங்களுக்காக. அதை நாங்கள் மறக்கவில்லை. மறக்கவும்மாட்டோம். அதற்காக நாங்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். அதே உணர்வை அதே பெருந்தன் மையைத்தான் நாங்கள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் இருந்து, தமிழக மக்கள், அரசியல் தலைவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்..?

எங்களுடைய குழந்தைகள் மீது குண்டுமழை பொழிந்தார்கள். 60 குழந்தைகள். குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தே குண்டு போட்டார்கள்..12, 13 வயசு பிள்ளைகள். அல்லைப்பட்டி என்ற இடத்தில் கடற்படையினர் ஒரு வீட்டுக்குச் சென்று 4 மாத குழந்தை, 4 வயசு குழந்தை, அப்பா, அம்மா, அதனது தாத்தா பாட்டி அனைவரையும் சுட்டுக் கொன்றார்கள், 11 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குட்படுத்தி தூக்கிலிட்டார்கள். அரசு சார்பற்ற பிரெஞ்சு நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்த ஊழியர்களை பட்டப் பகலில் சென்று 11 பேரை படபடபடபடவென சுட்டுக் கொன்றார்கள்.

இதெல்லாம் நடக்கும்போது 7 கோடி தமிழர்கள் வாழும்..எங்களது தமிழகத்தில்..... இந்த தமிழகத்தை எங்களது தாய்வீடு என்று கருதுகிறோம். அந்தத் தமிழகத்தில் வாழும் 70 மில்லியன் மக்களில் ஒரு மில்லியன் மக்களாவது வீதிகளில் வந்து எங்களுக்காக கண்ணீர் சிந்தவில்லை.

எங்களுக்காக ஒரு துளி கண்ணீர்விட்டிருந்தீர்களேயானால் எங்களுக்கும் அங்கே ஒரு தெம்பு வந்திருக்கும். எங்கள் துயரங்களைச் சொல்லி தேம்ப அழுவதற்கு ஒரு தோள் இருக்கிறது என்ற தைரியம் வந்திருக்கும். அய்யோ நாங்கள் துன்பப்படுகிறோம். எங்கள் கண்ணீரைத் துடையுங்கள் என்று சொல்லி சாய்வதற்கு ஒரு மடி இருக்கிறது என்று நாங்கள் நினைத்திருப்போம். இல்லையா? அந்தத் தைரியத்தை எங்களுக்குத் தர வேண்டும்.

உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். எங்களால் உங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் உங்களுக்காக நாங்கள் கண்ணீர் சிந்துவதற்கு இருக்கிறோம், என்று சொல்ல தமிழக மக்கள் முன் வந்திருக்க வேண்டும். ஆனால் முன்வரவில்லை. அது ஏனென்றுதான் எனக்குத் தெரியவில்லை.

உங்கள் வாழ்நாள் சாதனையாக எதை கருதுகிறீர்கள்?

இத்தனை கஷ்டங்களுக்கு ஊடாக.. ஆபத்துகளுக்கு ஊடாக.. நான் சென்று என் மக்களை சந்தித்து அவர்களின் கதைகளை கேட்டு.. அவலங்களை வெளிக் கொணர்ந்தது.. அதோடு. 93, 94, 95இல் அதை எனக்கு பெருமை தரும் விசயம் என்று நான் நினைக்கிறேன்.. நான் பேட்டி கேட்டால் கண்டிப்பாகத் தருவார்.. அவர் தரும் வரையில் நான் அங்கிருந்து நகர மாட்டேன்..

பிபிசியிலிருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டீர்கள்.. இனி அடுத்து உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

சமுதாயப் பணி நிறைய இருக்கிறது.. நான் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவள்.. சாவகச்சேரி எனது ஊர்.. முற்றிலுமாக அது இன்று அழிக்கப்பட்டது.. இந்தப் போரில் மிக மோசமாக அழிக்கப்பட்ட இடம் சாவகச்சேரி., அது இன்று தரைமட்டம்.. சந்தை.. நான் படித்த அரிவரி (பாலர் பாடச்சாலை) நான் பிறந்த மருத்துவமனை எல்லாம் தரை மட்டம்.. ஜப்பான் நாட்டிலிருந்து வந்த குழுவினர் சாவகச்சேரியைக் கண்டுவிட்டு.. ஹிரோஷிமாவை காட்டிலும் மோசமாக உள்ளதென வருத்தப்பட்டனர்.. ஊரே இல்லை இப்போது.. நாங்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.. ஊரை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.. எங்கள் சொந்த செலவிலே.. எங்கள் பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் அங்கு சென்று கிளினிக் வைத்து மருத்துவம் செய்தனர்.. ஆனால் இப்போது போர் மீண்டும் தொடங்கியபடியால்.. எல்லாம் நிறுத்தப்பட்டிருக்கிறது.. ஆனால் நாங்கள் எல்லாம் தயார் நிலையில் உள்ளோம்.. தீர்வு வரவேண்டியதுதான்.. அந்தக் குழுவில் பொருளாதார அபிவிருத்திக்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்.. அதோடு நாங்கள் இலண்டனில் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம்.. எல்லா தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து மனித நேய அமைப்பு ஒன்று..

இங்கு நடக்கு மனித நேய அவலங்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.. அனைத்துலக தமிழ் ஊடக அமைப்பில் இருக்கிறேன்..

எங்கள் ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் மிக மிகக் குறைவாக இருப்பது ஊடகவியலாளர்கள் தான்.. மருத்துவர்கள், பொறியாளர்கள் இன்னும் பல்வேறு துறையினர் உள்ளார்கள்.. ஆனால் ஊடகத்துறையில் மிக மிகக் குறைவு.. அதனால் அதற்காக நாங்கள் பயிற்சி பட்டறைகள் நடத்தி உருப்படியாக சில பத்திரிகையாளர்களை உருவாக்கலாமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.. எமது இளைஞர்கள் யாரைக் கேட்டாலும் மருத்துவம், பொறியியல் என்று ஆர்வம் காட்டுகிறார்களே ஒழிய.. ஊடகத்துறையில் நாட்டம்இல்லை.. குரல் இல்லாதவனுக்கு குரல் கொடுப்பவன்தான் பத்திரிகையாளன்.. அந்த உணர்வு இல்லை.. அந்த உணர்வை ஊட்டவே நாங்கள் பாடுபடுகிறோம்.. அய்ரோப்பிய நாடுகளெங்கும் கருத்தரங்குகள் நடத்துகிறோம்.. நல்ல பத்திரிகையாளர்களை உருவாக்கினால் நமது நாட்டிற்கு நல்லது.. அதனால் அந்த பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்..

இறுதியாக.. நீங்கள் சமூக விழிப்புணர்வு இதழ் மூலம் இங்குள்ள தமிழர்களுக்கும், வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

எங்களை வாழ வைப்பது உங்கள் கையில்தான்.. தமிழக மக்கள் கையில்தான்.. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னீர்களானால் அதுவே எங்களுக்கு போதுமானது.. எங்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள்.. எங்கள் அவலங்களைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்காதீர்கள்.. புலிகளுக்காக நான் வாதாட வரவில்லை.. ஆனால் உங்களின் அன்புக் கரங்கள் தேவை எங்களை அணைப்பதற்கு.
.

 

 

நேர்காணல்: பூங்குழலி
நேர்காணல் உதவி: அமரன்

 

Pin It