இந்து மதத்தைப் பரப்ப - தனித் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று வருகிறதாம்! காஞ்சி ஜெயேந்திரன் அடுத்த இரண்டு வாரத்தில் தொடங்கப் போகிறாராம்! காஞ்சிபுரம் மடத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் ‘தெய்வவாக்கு’ கூறும் நிலையில் இருந்த ஜெயேந்திரன் பிறகு, “குற்றம் நடந்தது என்ன?” என்ற நிகழ்ச்சியில் இடம் பெறும் நிலைக்கு வந்தார். இப்போது, தானே தொலைக்காட்சியைத் தொடங்கி தூள் கிளப்பப் போகிறாராம்! ராமகோபாலனும், ஜெயேந்திரரும் தமிழ்நாட்டில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதாகக் கூறி மிகவும் கவலைப்படுவதாக தெரிகிறது.

சென்னையில் ‘வணக்கம் அம்மா’ என்ற திரைப்படத் தொடக்க விழா சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. அதில் - பகவான் ராமபிரானும், அவனது சக தோழர் அனுமானும் வீதியில் சிறுநீர் கழிப்பதுபோல படங்கள் இடம் பெற்றனவாம். உடனே இராம கோபாலன் - பூணூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடக் கிளம்பி விட்டார். “பகவான் - சிறுநீர் கழிப்பது - பாவமா? சிறுநீர் கழித்தார் என்றால், சிறுநீரகம் நன்றாக இயங்கி, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதுதானே அர்த்தம்? அதற்காக ராமகோபாலனும், ஜெயேந்திரனும் ஏன் சங்கடப்பட வேண்டும்?

ராமாயணப்படியே பகவான் காட்டுக்குப் போகிறார். வால்மீகி ராமாயணப்படி, மாட்டுக்கறி சாப்பிடுகிறார்; சோம பானம் - சுராபானம் என்ற அந்தக் காலத்து ‘டாஸ்மார்க்’ சரக்குகளை குடிக்கிறார். இதை எல்லாம் ஏற்றுக்கொண்டால், சிறுநீர் போவதையும், மலம் கழிப்பதையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்? என்று, நண்பர் ஒருவர் கேட்கிறார். அவர் கேட்பது நியாயமான கேள்வி என்றே நமக்கும் தோன்றுகிறது. பகவானை பாலம் கட்டுகிறவன்; சாலை போடுகிறவன் என்ற நிலைக்கு மனிதர்களாக மாற்றிடத் துடிக்கிறவர்கள், சிறுநீர் கழிப்பதை மட்டும் ஏன் புண்படுத்துவதாகக் கருத வேண்டும்? சரி; சிறுநீர் ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொண்டு, அடுத்தப் பிரச்சினைக்கு வருவோம்.

ராமன் வேடம், அனுமான் வேடம் போட்டுக் கொண்டு தெருத் தெருவாக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்களே; அந்தப் பிச்சைக்கார சிறுவர்களிடம், “இப்படி எல்லாம் பகவான் வேடம் தரித்து பிச்சை எடுக்கக்கூடாது; இது எங்களை புண்படுத்துகிறது” என்று ராமகோபாலன் வேண்டுகோள் வைத்துள்ளாரா? அல்லது பகவான் வேடத்தில் எவர் பிச்சை எடுத்தாலும், அந்தப் பிச்சைக்காரர்களை எதிர்த்து, இந்துக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்திருக்கிறாரா? ராமகோபாலன் ஆனாலும், ஜெயேந்திரன் ஆனாலும் ‘அவாள்’ அகராதியின் ‘மனம் புண்படுகிறது’ என்பதற்கான அர்த்தமே அலாதி தான்!

ஆனாலும்கூட, உண்மையிலே பகவானைப் புண்படுத்தக்கூடிய எவ்வளவோ நிகழ்ச்சிகள் நாட்டில் நடந்து கொண்டேயிருப்பது, ‘இவாளுக்கு’ தெரியாதா? அவைகளை எல்லாம் தட்டிக் கேட்க முன்வரவேண்டும் என்று ‘இவாள்களை’ நாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாட்டுக் கோயில்களில், திருட்டு, கொள்ளைகள் நிகழாமல் தடுப்பதற்காக கோயில் பாதுகாப்புப் படை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அதில் காவல்துறையைச் சேர்ந்த 904 காவலர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள் 1933 பேரும் பணியாற்றுகிறார்களாம். இது என்ன அநியாயம்? முன்னாள் ராணுவத்தினரும், போலீசாரும் சேர்ந்து படை அமைத்துதான் கோயிலையும், கோயிலுக்குள் இருக்கும் பகவானையும் காப்பாற்ற வேண்டும் என்றால், இதைவிட பகவான் சக்தியை கேலி செய்யும் செயல் வேறு உண்டா?

கோயில் மற்றும் கடவுள் பாதுகாப்புப் படையை உடனடியாகக் கலைத்து, பகவானின் சக்திக்குள் வரம்பு மீறி தலையிடும், அரசை எதிர்த்து, உடனே போராட்டத்தை ராமகோபாலன் அறிவிக்க வேண்டும் என்பது அடியேனின் விண்ணப்பம். இதைவிட மற்றொரு ‘புண்படுத்தும்’ அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார். கோயில் உண்டியல்களையும், தெய்வத் திருமேனிகளையும் பாதுகாக்க கள்வர் எச்சரிக்கை மணி பொருத்தப் போகிறார்களாம். இதற்கு 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாம். கடவுள் மீது கை வைத்தால், உடனே மின்சார சக்தியால் இயங்கும் எச்சரிக்கை மணி ஒலிக்கும் என்றார். கடவுள் சக்தியை இப்படி நக்கலடிப்பது தர்மம் தானா?

கடவுள் சக்தி செயலிழந்து அவர் மின்சார சக்தியைத் தான் நம்பியிருக்க வேண்டுமா? “பாதுகாப்புப் படை ஒழிக; எச்சரிக்கை மணி ஒழிக; காப்போம் காப்போம்; கடவுள் சக்தியைக் காப்போம்;” என்ற முழக்கத்தோடு, உடனே படை திரட்டுங்கள்! நீங்கள் தானே கடவுள் சக்தியை காப்பாற்றியாக வேண்டும்!

ஜெயேந்திரர் தொடங்கும் தொலைக்காட்சியில் இதுபோன்ற இந்து தர்மம் காக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் நடத்தி, பக்தி தர்மத்தை வளர்க்க வேண்டும் என்பது அடியேனின் விண்ணப்பம். சங்கர்ராமன் உயிரோடு இருந்திருந்தால், அவர்கூட இந்த யோசனையை ஏற்று, பாராட்டுவாராக்கும்!

Pin It