ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று டெல்லியிலே பேரணி நடத்துகிறார்களாம்! இதற்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்றும் தன்னைக் கூறிக் கொள்கிறார், இந்தப் பார்ப்பன அம்மையார்.

அதே டெல்லியில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரை - ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத் கூட்டம், சூழ்ந்துக் கொண்டு தாக்க முயன்றது. மறந்துவிட்டதா? அந்தக் கும்பலுக்கு ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்புவது எம்.ஜி.ஆருக்கு செய்யும் மரியாதையா? துரோகமா?

எம்.ஜி.ஆரை மதிக்கிற, நேசிக்கிற, லட்சோப லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்காகவே இன்னும் அந்த பார்ப்பன அம்மையார் கட்சியில் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் பார்த்து கேட்கிறோம், தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது குமரி மாவட்டம் மண்டைக் காட்டில் ஆர்.எஸ்.எஸ். - இந்து முன்னணியினர் மதக் கலவரத்தை உருவாக்கியது நினைவிருக்கி றதா? அப்போது தமிழக சட்டமன்றத்திலே முதல்வர் எம்.ஜி.ஆர். என்ன கூறினார்?

“இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும். இந்து முன்னணிகாரர்களுக்கு யோசனை சொல்லும் மடாதிபதிகளுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது போன்ற செயல்களை அரசு அனுமதிக்காது. குன்றக்குடி அடிகளார் நடந்து கொள்வதுபோல மற்ற மடாதிபதிகள் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்ற வழிமுறைகளில் இறங்கக் கூடாது. அச்சுறுத்தல் பயிற்சிகளை அரசு ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக சொல்கிறேன், ஆர்.எஸ்.எஸ்.. தனது பயிற்சிகளை நிறுத்தியாக வேண்டும். ஏற்கனவே என்.சி.சி. சாரணர் பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளே போதும். ஆர்.எஸ்.எஸ்.. பயிற்சிகள் தேவை இல்லை.

(29.3.82 இல் சட்டமன்றத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர். பேசியது.)

இப்படிப் பேசிவிட்டு டெல்லிக்குப் போன போதுதான், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ்..காரர்கள் முதல்வர் எம்.ஜி.ஆரை சூழ்ந்துக் கொண்டு தாக்க முயன்றார்கள்.

மண்டைக்காடு கலவரத் துக்குப் பிறகு அரசு - மாநகராட்சி, நகராட்சிகளுக்கு சொந்தமான பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது உங்கள் மதம் இந்து தானே என்று, கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்டபோது, இல்லை, நான் இந்து இல்லை; எனது மதம் திராவிட மதம். அப்படியே பதிவு செய்யுங்கள் என்று கூறியவர் எம்.ஜி.ஆர்.

அந்த எம்.ஜி.ஆர். பெயரைக் கூறிக் கொண்டு, கட்சி நடத்திக் கொண்டு இருக்கும் ஜெயலலிதா, ராம பக்தி பேசிக் கொண்டு ‘இந்து’ மத வெறி சக்திகளுக்கு பாராட்டு வழங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பன சக்தியாக செயல்படும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வாரிசா? பார்ப்பனர்களின் வாரிசா? உண்மை எம்.ஜி.ஆர். தொண்டர்களே, சிந்தித்துப் பாருங்கள்.

- நெல்லை மனித நீதிப் பாசறைக் கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் (டிச.30)

Pin It