காவிரி என்ற பெயரே காவியமாகும் காவிரி என்றாலேயே புனல் பரப்பில் பொன் கொழிப்பது எனப் பொருள்.

- டாக்டர் கே.எல்.இராவ்

காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தில் தற்போது நடுவர்மன்ற உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்த வேறுபாடுகளில் நடுவர் மன்றம் முடக்கப்பட்டுள்ளது. தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளையே தீர்த்துக் கொள்ள முடியாத மன்ற உறுப்பினர்கள் மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள நதிநீர் தாவை எவ்வாறு தீர்வுகாணப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கிடையே காவிரி நீர் பிரச்சனையை தீர்க்க உச்சநீதிமன்ற ஆணையையொட்டி 1990. ஜூன் மாதம் 2ஆம் தேதி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளில் நடுவர்மன்றம் 570 நாட்களுக்கு மேல் நீண்ட வழக்குகள் விசாரணை நடந்துள்ளது. ஏராளமான ஆவணங்கள், அரசுகளின் பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள், புள்ளி விவரங்கள், வரலாற்று ஆவணங்கள் என மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நடுவர்மன்றத்தின் அனைத்துக்கட்ட விசாரணைகளும் முடிந்து நடுவர்மன்றம் இந்த ஆண்டு ஆகஸ்டு 6ஆம் தேதிக்குள் தனது இறுதி உத்தரவை வழங்க வேண்டும்.

காவிரி பிரச்சனையில் பல ஆண்டுகளாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்த இறுதி உத்தரவு காலதாமதமாவதை அறிந்து மிகவும் கவலை அடைந்துள்ளார்கள்.

நடுவர்மன்ற உறுப்பினர் சுதிர்நாராயணன், என்.எல்.ராவ் சில மாதங்களுக்கு முன்பு காவிரி பாசனப்பகுதிகளையும், அணைக்கட்டுக்களையும் நடுவர் மன்றம் பார்வையிட வேண்டுமெனக் கூறினார்கள். நடுமன்றத் தலைவர் திரு.என்.பி.சிங் காவிரி பாசனப் பகுதிகளை நடுவர்மன்ற நீதிபதிகள் பார்வையிட்டு விட்டதால் மீண்டும் பார்வையிடுவது தேவையற்றது என்ற கூற்றை மற்ற உறுப்பினர்கள் ஏற்கவில்லை. இதனால் பிரச்சனைகள் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நதிநீர் பிரச்சனையில், நடுவர்மன்றத்துக்கு உதவிட மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டுமென நடுவர்மன்றம் கோரியது. இதை அனைத்து தரப்பினரும் எதிர்த்தனர். நடுவர்மன்றத்துக்கு உதவிட இரண்டு மதிப்பீட்டாளர்கள், சுமார் 200 பக்கங்களுக்கு மேல் கொண்ட மதிப்பீட்டு அறிக்கையை நடுவர்மன்றத்துக்கு அளித்தனர். காவிரி படுகையில் மொத்தம் 740 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்ற அடிப்படையில் தமிழகத்துக்கு 24.70 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு 395 டி.எம்.சியும், கர்நாடக மாநிலத்துக்கு 18.85 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு 250 டி.எம்.சி. எனவும், கேரளாவுக்கு 33.40 டி.எம்.சி.யும் பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சியும் நீர் அளிக்கலாம் என்ற யோசனையை அறிக்கையில் கூறினர்.

இவ்வறிக்கை ஒரு நடுவர் மன்றத்தில் பரிசீலனைக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இறுதி தீர்ப்புக்கு, இந்த அறிக்கையையும் ஏற்பது அல்லது தள்ளுபடி செய்வது நடுமன்றத்தின் அதிகாரமாகும். தீர்ப்புகுழுத் தலைவரின் வற்புறுத்தலையும் மீறி பெரும்பான்மை என்ற நிலையில் இம்மதிப்பீட்டாளர்களின் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவும், ஆறு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமெனவும் மே மாதம் 10-ஆம் தேதி மன்றம் முடிவு எடுத்தது என தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளும் முடிந்து இறுதி தீர்ப்பு வெளியிட வேண்டிய நேரத்தில் நடுவர்மன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் மேலும் காலம் கடத்துவது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஜூலை 10ஆம் தேதி நடுவர்மன்ற விசாரணை நடைபெற்றபோது தான் பிரச்சனை ஏற்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞரான திரு. பராசுரன் நடுவர்மன்றம் அனைத்து விசாரணைகளையும் முடித்துவிட்டது. எனவே புதிய விசாரணையை தேவையற்ற முறையில், நடைமுறையை மாற்ற வேண்டாம் மக்கள் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை விரைவில் எதிர்பார்க்கிறார்கள் என்றார். இதே அடிப்படையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் அனில் திவானும் புதிதாக விசாரணை தேவை இல்லை எனச் சொல்லிவிட்டார். நிலத்தடி நீர மற்றைய நீர் ஆதாரப் புள்ளி விவரங்களை வைத்து நடுவர்மன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் யாவும் விதண்டாவாதப் போக்காகவே இருக்கின்றது.

நாங்கள், எங்கள் (மாநிலங்களின்) பிரச்சனையை தீர்வுகாண இங்கு வந்துள்ளோமே தவிர உங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல்ல என காவிரி நடுவர் மன்றத்தின் முன்பு ஜூலை மாதம் 10ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர். திரு. பராசரன் கூறினார். நடுவில் மன்ற விசாரணையின் போது நீதிபதிகள் தங்களுக்குள் பகிரங்கமாக மோதிக்கொண்ட போதுதான் திரு.பராசரன் இவ்வாறு கூறினார்.

நடுவர்மன்றத்துக்குள் எழுந்துள்ள சர்ச்சையும் - நடுவர்மன்றம் கடைப்பிடிக்கும் நடைமுறைகளும் நியாயமற்றவையாகும். தங்கள் முன் எழுப்பப்பட்டுள்ள பிரச்சனை மீது தீர்ப்பு வழங்குவதில் நீதிபதிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது இயற்கையே. ஆனால் தங்கள் கருத்து வேறுபாடுகளை பகிரங்கமாக வெளியிடுவதும் - கருத்து வேறுபாடுகளின் காரணமாக முடிந்து போன விசாரணைகளை மீண்டும் துவக்கி காலதாமதம் செய்து பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மீண்டும் நடுவர் மன்றத்தில் ஆறு மாத காலம் நீட்டிப்பு செய்துள்ள மிக்க கவலையான நிலை எழுந்துள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மெத்தனபோக்கால் காவிரியில் தமிழகத்தின் உரிமையை இழந்தோம்.

1. 1960களில் சோசலிஸ்ட் கட்சி சார்ந்த மொடக்குறிச்சி. க.ரா.நல்லசிவம் சட்டமன்றத்தில் கர்நாடகம் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கூறினார். அச்சமயத்தில் அதை தடுக்க வேண்டியவர்கள் அலட்சியமாக தட்டி கழித்தனர். அன்றைய பொது மராமத்துச் செயலாளர் இராமசந்தர் இது குறித்து கோப்பு தயாரித்து அணைகள் கட்டுவதை தடுக்க வேண்டும் என்ற பரிந்துரையும் அத்துறை அமைச்சர் கிடப்பில் போட்டார்.

2. காவிரியில் சென்னை - மைசூர் அரசுகளின் ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கவில்லை. இதனால் காவிரியின் மீது நமக்கு இருந்த மேலாண்மைப் பாதிப்புக்குள்ளான சூழ்நிலை ஏற்பட்டது.

3. உச்ச நீதிமன்றத்தில் காவிரி பாசன விவசாயிகள் தொடர்ந்த காவிரி வழக்கை மத்திய அரசிடமிருந்தும் எந்தவித உத்தரவாதம் இல்லாமல் திரும்ப பெற்றுவிட்டது.

4. ப.உ.சண்முகம் அமைச்சராக இருந்த பொழுது கர்நாடக அரசுடன் ஓர் ஒப்பந்தம் ஏற்பட இருந்ததை நிறுத்தப்பட்டது.

5. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த பொழுது பழ. நெடுமாறன் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சனையில் நடுவர் மன்றம் வேண்டும் என்றபோது, சிலர் நடுவர் மன்றம் அவசியமில்லை என்றும், சரியான தீர்வு கிடைக்காது என்றும் கூறியவர்கள் தற்போது நடுவர் மன்றத்துக்கு விழுந்து விழுந்து பரிந்து பேசுகின்றனர். அச்சமயத்தில் நடுவர்மன்றம் வேண்டும் என்று போராடி திருவாரூரில் தி.க. தலைவர் கி.வீரமணி கைதானார்.

6. தேவகவுடா காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தர விரும்பாதவர், அவர் காவிரிப் பிரச்சினையில் பெங்களூர் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்து நடுவர் மன்ற தலைவர் சித்தோஷ் முகர்ஜியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த பொழுது கோவில்களில் பூரண கும்பம், வரவேற்பு கொடுக்கப்பட்டது என்றும் கூறி நடுவர் மன்றத்தை முடக்க நிலைக்குத் தள்ளிய நிலையில் தமிழக அரசை எதிரி எனக் குறிப்பிட்டு வழக்குத் தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது இந்திய பிரதமராக ஒரு மாநிலத்தை எதிர்த்தவர் எப்படி நாட்டின் பிரதமராக முடியும்? என்பதை அவருக்கு ஆதரவு கொடுத்தவர்கள் கூட இது பற்றி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

7. அதன்பின் குஜ்ரால் ஸ்கீம் என்ற பயனற்ற திட்டத்தையும் ஆதரித்தனர்.

இப்படி தமிழக ஆட்சியில் இருந்தவர்கள் பொறுப்பற்ற தன்மையால் காவிரி பிரச்சினையில் தொடர்ந்து தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மாநாட்டில் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த தாஸ்முன்சி கடந்த 2005 பிப்ரவரி 5ஆம் தேதி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று உறுதியும் கொடுத்தார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு காட்டிய பிடிவாதமும், கடந்த காலங்களில் தமிழ் இனப் பற்று என்று சொல்லிக் கொண்டு அரசு செய்த பித்தலாட்டங்களால் காவிரியில் நமது உரிமை கேள்விக்குறியாகிவிட்டது. சிந்துபாத் கதை போன்ற தீர்வு அற்ற முறையில் சிக்கல் தொடர்கிறது.

காவிரி பிரச்சினை என்ற தமிழக மக்களின் வேதனை என்று தீருமோ?
Pin It