26, டிசம்பர் 2004 அப்படி விடியும் என உலக மக்கள் யாவரும் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நிகழும் என உணர்ந்து யூகித்த சிலர் அதை வெளியே பகிர்ந்து கொள்ளவில்லை. 2,27,000 மனித உயிர்களை தன் கோரப்பற்களால் கவ்விச் சென்றது ஆழிப் பேரலை. மீடியாவில் வரலாற்றில் எந்த சம்பவத்திற்கும் இத்தகைய செய்தி பதிவுகள் இல்லை. பல மாதங்கள் அச்சு ஊடகங்கள், தொலைகாட்சி, வலைதளங்கள் என எல்லாம் ஆழிப்பேரலையின் செய்திகளால் மூச்சு தினறியது. மீடியாவிருந்து வெளி கிளம்பிய அலைகள் உலக மக்களை அனுதாபப்பட வைத்தது. இதற்காக அனுதாபப்பட்டு நீங்கள் எதையாவது செய்யவில்லை எனில் நீங்கள் தேசபக்தி அற்றவராக கருதப்படும் அளவிற்கு சூழல் இருந்தது. பலர் தங்கள் வீட்டிலிருந்தது பழைய துணிமணிகளை கொடுத்து தேச பக்தர்களானார்கள். அது தனி கதை அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

AIDS patients
நாம் வாழுகின்ற இந்த பூமியில் தினமும் 6,030 மனிதர்கள் செத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த நோய் 6,030 உயிர்களை விழுங்கிவிட்டு புதிதாக 11,000 நபர்களை தினமும் தொற்றிக்கொள்கிறது. சமீபத்தில் டர்பனில் நடந்த சர்வதேச கருத்தரங்கம் இதனை மிகத் தெளிவாக எடுத்துரைத்தது 2010ல் இந்த எண்ணிக்கை 12,000மாக உயரும் என அந்த கருத்தரங்கம் எச்சரிக்கை செய்து உள்ளது. இரண்டாம் உலகப் போரில் மடிந்த மனிதர்களை விட, ஆப்பிரிக்காவில் மட்டும் எய்ட்ஸ் நோய் அதிகமானவர்களை பலிக்கொண்டுள்ளது.

ஆனால் செத்து மடியும் இந்த மனிதர்களை இந்த சமூகம் தங்கள் மனங்களில் எப்படி பாவிக்கிறது. எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி. பாசிடிவ் என இந்த நிலைகளில் இருப்பவர்களிடமிருந்து இந்த கிருமிகள் தொற்றுநோயாக பரவக்கூடியவை அல்ல. இந்த நிலையில் உள்ளவர்களை நாம் அன்புடன் அனுசரனையும் நடத்த வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பல வண்ண விளம்பரங்கள் வெளியிட்டும் அது ஏதேனும் பலனத்துள்ளதா என்பது பற்றிய பரிசீலனைகள் நடந்துள்ளதா என்று கூட தெரிவில்லை.

மொத்த சமூகமும் இவர்களை தீண்டத்தகாதவர்களாகத்தான் இனம் கண்டுள்ளது. இவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக இந்த சமூகம் வேண்டாதவர்களாகவே கருதுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அது பெரும் பகுதியாக நடுத்தர வயதுடையவர்களையே பாதிக்கிறது. உலகமயத்தின் போதையில் கலாச்சாரங்கள் தடுமாறி நிலைகுலைந்துள்ள மயக்க நிலையில் எய்ட்ஸ் சமூக வாழ்வில் சத்தமில்லாமல் கால் தடங்கள் கூட இல்லாமல் நுழைந்துவிட்டது. உழைப்பில் ஈடுபடக்கூடிய மனிதர்கள் பெரும் பகுதி அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவின் 16 தேசங்களில் 10% நடுத்தர வயதுடையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் - அது தென் ஆப்பிரிக்காவில் 20%, சுவாசிலாந்தில் 25% மற்றும் போஸ்ட்வானாவில் 35% மாகவும் வியாபித்திருக்கிறது. ஆப்பிரிக்க சமூகத்தின் சகல மட்டங்களிலும் எய்ட்ஸ் நீக்கமற நிறைந்திருக்கிறது. அங்குள்ள பல நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை எய்ட்ஸ் எந்த பாரபட்சமும் பார்க்கவில்லை.

இந்த நாடுகளின் உணவு உற்பத்தி, தொழிற்சாலைகள், மருத்துவத்துறை, கல்வி என சகல துறைகளும் முடங்கி நிற்கிறது. உற்பத்தியில் ஈடுபடக்கூடிய மனித ஆற்றன் அழிவு அந்த தேசத்தின் அழிவாகும்.

ஜிம்பாப்வேயில் மொத்த மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் 50% எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு செலவிடப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் புருண்டியில் உள்ள மருத்துவ மனைகளில் உள்ள படுக்கைகளில் 60% எய்ட்ஸ் நோயாளிகள் தான் உள்ளார்கள். 2010ல் ஆப்பிரிக்க தேசங்களில் 4 கோடி குழந்தைகள் தெருக்களில் அனாதைகளாக உலவுவார்கள் எனவும் பல புள்ளி விபரங்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்துகிறது. எய்ட்ஸ் பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள் பள்ளி பருவத்தைக் கூட கடப்பதில்லை. அதற்கு முன்பே இந்த மொட்டுக்கள் கருகி விடுகின்றன. இந்த நிராதரவான குழந்தைகளை ஹெச்.ஐ.வி. பரிசோதனைகளுக்கு உட்படுத்தி வடிகட்டிய பின்னர் அவர்களை ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் கொத்தடிமைகளாக உழைப்பில் ஈடுபடுத்த திட்டங்கள் தயாராக உள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் இதனை 2010ல் செயல்படுத்தும் பொழுது உலக மீடியாக்கள் அதற்கு ஜால்ரா புகழுரைகள் ஒளிபரப்புவதை சமூகம் பூரித்து பார்க்கும்.

ஜாம்பியாவில் ஆண்டுதோறும் அரசாங்க ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிருந்து தேறி வெளியேறும் மாணவர்களில் எண்ணிக்கையும் அந்த நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மரணத்தை தழுவும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளது. மத்திய ஆப்பிரிக்க குடியரசில் 150 பள்ளிகள் சமீபத்தில் ஆசிரியர்களின்றி மூடப்பட்டது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள புகழ்பெற்ற டர்பன் - வெஸ்ட்வைல் பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் 25% எய்ட்ஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்கள். ஆப்பிரிக்க நாடுகளின் பல்கலைக் கழகங்கள் - பள்ளிகளின் நிலை கேள்விக்குள்ளாகும் தருணத்தில் - இங்கு பல ஆங்கில தமிழ் நாளிதழ்கள் கடந்த இரண்டு வருடங்களாக வாரம் தோறும் ஆப்பிரிக்காவில் பேராசிரியர்கள - ஆசிரியர்கள் தேவை என வெளியிடும் விளம்பரங்களை நினைவுபடுத்தி ஒப்பிட்டு பார்க்கலாம்.

யுகாண்டா, சேனேகல் போன்ற நாடுகளின் போர்கால நடவடிக்கைகள், அந்த நாட்டு எல்லைக்குள் எய்ட்ஸை கட்டுப்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பாலியல் கல்வியளிக்கப்படுகிறது. ஆணுறைகளின் அவசியத் தேவை, என விடலை பருவத்தில் மனதிலும் உடலும் ஏற்படும் மாற்றங்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்கு அங்கு விடையளிக்கப்படுகிறது.

அபாயமாக எச்சரிக்கும் இந்த சூழல் அந்த நாடுகளுக்குள் செல்லவிருந்த அந்நிய முதலீட்டை முற்றிலும் நிறுத்திவிட்டது. திசை திரும்பி பல மூலதனங்கள் தெற்காசிய மற்றும் சார்க் நாடுகளுக்குள் பயணித்தது. ஏற்கனவே ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் சூழ்ச்சியில் சிக்கி கடனாளிகளாக தவிக்கிறது. உலக வங்கி இந்த நாடுகளின் கடன்களை ரத்து செய்தால் ஒழிய, இந்த நாடுகள் மீண்டு வருவது சாத்தியமில்லை.

தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 7,00,000 பேர் Anti-Retrovel மருந்துகளின் உதவியுடன் உயிர் வாழ்கிறார்கள். இன்னும் 60 லட்சம் பேர் இந்த மருந்துகளின்றி தவிக்கிறார்கள். இந்த மருந்துகள் அவர்களின் மரணத்தை கொஞ்ச நாட்களுக்கு ஒத்திப் போடவே உதவி செய்யும். மேற்கிலிருந்து வரும் இந்த மருந்துகளின் விலைகள் சாமான்ய நபர்கள் அல்ல தேசங்களே நெருங்க முடியாத அளவிற்குள்ளது. இந்த மருந்துகளை சந்தைப்படுத்துவது சமகாலத்தில் துரிதமடைந்துள்ளது.

நம் நாட்டு சூழலை எடுத்துக் கொள்வோம். இங்கே மீடியாக்களின் மூலம் வாரி இரைக்கப்பட்ட கோடிக்கணக்கான தொகை மக்களை பீதியுறச் செய்துள்ளது. இந்த விளம்பரங்கள் நம் மனங்களிலும், ரத்தத்திலும் இந்த நோய் குறித்த அச்சத்தை தான் பதிவு செய்துள்ளது. பல மருத்துவர்கள் எய்ட்ஸ் நோயாளிகளை விரட்டியடித்த கதைகள் பலவற்றை கேள்விப்பட்டுள்ளோம். மறுபுறம் புகைப் போட்டு பாம்பை வெளியேற்றுவதை போல் இன்று இந்த விளம்பர பீதி பல பாதிப்படைந்தவர்களை மெதுவாக வெளியே தலைநீட்டி மருத்துவமனைகள் நோக்கி நகர்த்தியுள்ளது. இவர்கள் எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என ஜவுளி நிறுவனங்களுக்கு போட்டியாய் ப்ளக்ஸ் விளம்பரங்கள். விளம்பரங்கள் மட்டுமின்றி பல தொண்டு நிறுவனங்களின் நாடககுழுக்கள் பேருந்து நிலையங்கள், நகர முச்சந்திகளில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டிட கூலித் தொழிலாளிகள், லாரி ஓட்டுநர்கள் என சமூகத்தின் விளிம்பு நிலை மக்களை குறிவைத்து இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அது மட்டுமின்றி இந்த தொண்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மாதம் இத்தனை நபர்களை அழைத்து வர வேண்டும் என இலக்கு வேறு.

சமீபத்தில் பெங்களூரிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள கட்டுரை அந்த நகரங்களில் மோகிக்கப்படுகிற கலாச்சாரத்தின் அவல நிலையை விவரித்தது. பெங்களூரிலுள்ள பல மென்பொருள் நிறுவனங்களின் வானுயர கட்டிடங்களின் கழிவு நீரேற்றக்குழாய்கள் தொடர்ந்து அடைத்துக் கொண்டே இருந்தது அவைகளின் காரணத்தை பொறியாளர்கள் கண்டறிந்த பொழுது ஆணுறைகளால் தினமும் அடைப்பட்டு போகிறது தெரியவந்தது. அதுவும் குறிப்பாக இரவு ஷிப்டில் அந்த கட்டிட வாசல்களில் இவர்கள் இதே நாடகங்களை அரகேற்றுவார்களா.

1986ல் சென்னையில் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு எய்ட்ஸ் இருப்பது பரிசோதனையில் தெரியவந்த பொழுது அவர் தான் நம் நாட்டின் முதல் பதிவாக எய்ட்ஸ் கணக்கெடுப்பைத் துவக்கினார். கடந்த 20 ஆண்டுகளில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,00,000 தாண்டுகிறது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் உலக சுகாதார நிறுவனத்தின் கவனப்பட்டியல் உள்ளது. அதில் குறிப்பாக இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தை வகிக்கிறது. கற்பைப் பற்றி வாய்கிழிய இங்கு தான் பேசப்படுவது முரண் எதார்த்தம்.

பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகள் நோக்கி அழைத்து வர சினிமா நடிகர்கள், நடிகைகள் முதல் கிக்கெட் வீரர்கள் வரை தினமும் தொலைக்காட்சிகளில் தோன்றி தங்கள் ஊதியத்தைப் பெற்றுவிட்டு நம் குழந்தைகளின் முன்னால் ஆணுறைகளின் உபயோகங்களை விளக்குகிறார்கள். எந்த தொழில் நடந்தாலும் உரிய பங்கை மீடியா பெற்றுக் கொள்ள என்றும் தவறியதில்லை.

African kids
உலகமய சூழல் நீங்கள் எப்பொழுது பிறருக்கு உதவி புரிய வேணடும் எப்படி அதை செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் கூட இறக்குமதி செய்யப்பட வேண்டியதாக மாறிவிட்டது.

உலகமயத்தின் போதையில் கலாச்சாரங்கள் தடுமாறி நிலை குலைந்துள்ள மயக்க நிலையில் எய்ட்ஸ் சமூக வாழ்வில் சத்தமில்லாமல் கால் தடங்கள் கூட இல்லாமல் நுழைந்து விட்டது.

இந்த சந்தையை தன்வசப்படுத்தும் போட்டியில் முதலிடத்தைப் பிடிக்கும் தீவிரத்திருப்பவர் பில்கேட்ஸின் மனைவி மெண்டா கேடஸ்

உலகமெல்லாம் ஆணுறைகளுடன் அலையும் இந்த ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் வாடிகன் நகருக்குள் சென்று ஒரு உறையை விற்பனை செய்யவோ இலவசமாக விநியோகிக்கவோ முடியுமா.

கிருமிகளின் மூலமும் யுத்தம் புரிந்து உலகை தங்கள் கட்டுக்குள் கொணற துடிக்கிறது ஏகாதிபத்தியம். மூன்றாம் உலக நாடுகளில் இந்த நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறதோ என்கிற அய்யம் சமீபகாலமாக எழுந்துவருகிறது. இது தொடர்புடைய பல ஆய்வு கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளியாகி வருகிறது.

ஆப்பரிக்க உலகுக்கு யாவற்றையும் தந்தது. மனித இனத்தை, காடுகளை, ஆறுகளை இயற்கை வளங்களை, பயிறுகளை, கோக்கோ என இயற்கையின் சகல வளங்களும் உலகம் முழுக்க இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் ஏகாதிபத்தியம் எங்களுக்கு எய்ட்ஸை தந்தது, காலனியம் துவங்கியதற்கு முன்னால் எங்கள் ஆப்பிரிக்காவில் நிறைய நல்லது இருந்தது

- வங்கா மத்தாய் (அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்)
Pin It