மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் குளிர்பானமான கொக்கோ கோலா, பெப்சியில் உடலைக் கெடுக்கும் பூச்சி மருந்தின் அளவு அதிகமிருப்பதாக அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மய்யம் அறிவித்தது. இப்போது, அந்த பூச்சி மருந்தின் அளவு மேலும் அதிகரித்துள்ளதாக அதே ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. பெப்சி, கொக்கோ கோலாவைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதற்கு பதிலாக உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கலாம். இளநீர், மோர் போன்ற பானங்களை பருகலாம் என்ற நல்ல கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

பெப்சி, கொக்கோ கோலாவில் உள்ள பூச்சிக் கொல்லி மருந்துகள் உடலைக் கெடுப்பதைப் போல ‘பக்தி’ என்ற பெயரில் உடலைக் கெடுக்கும் ‘தீர்த்தங்களுக்கும்’ தடை போட வேண்டியது அவசியம். கோயில் தீர்த்தம், கும்பாபிஷேகத் தீர்த்தம் என்ற பெயரில் பக்தர்கள் குடிக்கும் தீர்த்தம் “பஞ்ச கவ்யங்களை” சோதனைக்கு அனுப்பினால், அதில் அடங்கியுள்ள கிருமிகள் தெரிய வரும்! அமெரிக்க கொக்கோ கோலா நாட்டைச் சுரண்டி உடலைக் கெடுக்கிறது. இது அன்னியச் சுரண்டல்; ‘அக்கிரகார தீர்த்தங்கள் - மக்களை மடையர்களாக்கி, உடலைக் கெடுக்கிறது. இது உள்ளூர் சுரண்டல். இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவைகளே!

ஹிஸ்புல்லாவும் விடுதலைப் புலிகளும்

‘ஹிஸ்புல்லா’ இயக்கம் பற்றி - அமெரிக்கா சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் ராபர்ட் பேப், ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், கீழ்க்கண்ட கருத்துகளை சுட்டிக் காட்டியிருக்கிறார்:

‘ஹிஸ்புல்லா இயக்கம் - இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு அல்ல; அது அரசியல் கட்சியும் அல்ல. 1982-ல் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு எதிராக உருவான பல்வேறு பிரிவினரைக் கொண்ட ஒரு இயக்கம்; இஸ்ரேலை வெளியேற்றுவதுதான் இதன் குறிக்கோள். இந்த அமைப்பில் பல்வேறு மதப் பிரிவினரும், மதச் சார்பற்றவர்களும், இடதுசாரியினரும், ‘இஸ்ரேல்’ எதிர்ப்பு என்ற ஒரே லட்சியத்தோடு இணைந்து நிற்கிறார்கள். உலகம் முழுதும் நடைபெற்றுள்ள 462 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் பற்றி நான் ஆய்வு செய்துள்ளேன். அதில் 1982 முதல் 1986 வரை ஹிஸ்புல்லா இயக்கம் நடத்திய 41 தற்கொலைப் படைத் தாக்குதல் பற்றிய விவரங்களை ஆராய்ந்துள்ளேன். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில், தங்களை அழித்துக் கொண்டவர்களின் 38 பெயர்களை அடையாளம் கண்டபோது, அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

இதில் முஸ்லீம் தீவிரவாதிகள் 8 பேர் மட்டும் தான்; 27 பேர் இடதுசாரி கட்சியினர்; மூன்று பேர் கிறித்தவர்கள். இதில் ஒருவர் பட்டதாரி பெண் ஆசிரியை. அனைவருமே லெபனானில் பிறந்தவர்கள். ‘அன்னிய இஸ்ரேல் ஆக்கிரமிப்பை’ வெளியேற்றுவதே இவர்கள் நோக்கம்” - என்று அந்த ஆய்வாளர் எழுதியிருக்கிறார். மத்திய ஆசியாவிலேயே இஸ்ரேலைத் திணறடித்து வரும் வலிமையான இயக்கமாக ஹிஸ்புல்லா திகழுகிறது.

“உலகம் முழுதும் அனைத்துத் தற்கொலைப் படைத் தாக்குதல்களும் - இலக்கு நோக்கியே நடக்கிறது. அதில் மதவாதத்துக்கு எதிரான மதச் சார்பின்மை இலக்கு தான் அதிகம். ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும், அன்னிய ராணுவத்தை வெளியேற்றவும், தங்கள் தாயகத்தைக் காப்பாற்றவுமே, உலகம் முழுதும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடக்கின்றன” என்று அந்த ஆய்வாளர் - தனது ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கட்டுரையை ‘கார்டியன்’ ஏட்டிலிருந்து எடுத்து வெளியிட்டிருப்பது ‘இந்து’ நாளேடு! (ஆக.7). உலகம் முழுதும் தற்கொலைப் படைத் தாக்குதல் ஒரு நியாயமான ஜனநாயகத்துக்கான இலக்குக்காக நடத்தப்படுவதை ‘இந்து’ ஏடு வெளியிட்டு மகிழ்கிறது.

ஆனால், இதே இலக்கோடு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினால் மட்டும் ‘இந்து’வால் ஏற்க முடியாது. ‘பயங்கரவாதம்; தடைபோடு; விடாதே; அனுமதிக்காதே’ என்று ‘பூணூலை உருவிக் கொண்டு ‘சீறத்’ தொடங்கிவிடுகிறது’ என்னே, இரட்டை வேடம்?

Pin It