பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் தாமாகவே முன் வந்து தம்மை இணைத்துக் கொண்ட திருப்பூர் தோழர் குணசேகரன், திருப்பூர் அருகே அன்னையம் பாளையத்திலுள்ள தனது சொந்த வீட்டை இயக்கப் பயன்பாட்டுக்கு ஒப்படைத் துள்ளார். அந்த இல்லத்தில் பெரியார் படிப்பகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம், கழக சார்பில் திறக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் படிப்பகத்தையும், கணினி செயல்பாட்டையும், ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

 கழக செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, உடற்பயிற்சிக் கூடத்தினைத் திறந்து வைத்தார். கழகக் கொடியை ஏற்றி சிந்தனைப் பலகையை மாவட்டத் தலைவர் சு. துரைசாமி திறந்து வைத்தார். கழகத்தின் செயல் பாடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வந்த தோழர் குணசேகர், இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, பல்வேறு உதவிகளை கழகத்துக்கு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் வழங்கி வருகிறார்.

“நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்; தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல்வேறு அமைப்புகள் பற்றி நான் கவனித்து வருகிறேன். அதில் பெரியார் திராவிடர் கழகம் என்னை மிகவும் ஈர்த்து விட்டது” - என்று அவர் கூறினார்.

 இப்போது இயக்கத்தின் பயன்பாட்டுக்காக அவர் வழங்கியுள்ள வீடு 5.5 சென்ட் அளவுள்ளதாகும். அப்பகுதி வாழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத் தோடு அங்கே பெரியார் படிப்பகம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் சு. துரைசாமி அவர்களும், திருப்பூரில் இதேபோல் தமக்கு சொந்தமான இடத்டிதில் பெரியார் படிப்பகத்தை தாமே உருவாக்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தோழர் குணசேகர் அவர்களின் தொண்டுள்ளத்தை, விழாவில் பேசிய அனைவருமே பாராட்டினர். விழா நிகழ்வில் சிற்பி ராசன், மாவட்ட செயலாளர் கா.சு. நாகராசன், கோவை மாநகர செயலாளர் கோபால், பொருளாளர் இரஞ்சித் பிரபு, திருப்பூர் மாநகர செயலாளர் முகில்ராசு, க. அகிலன், இரா. குமார், பாடகர் தியாகு, ஆசிரியர் சிவகாமி, சம்பூகன், அவிநாசி, செந்தில், சன்.பாண்டியநாதன், இரவி, மணிகண்டன் உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்றனர்.

Pin It