தில்லை நடராசன் கோயில் கர்ப்பக்கிரகத்துக்குள் (இது தில்லைக்கோயிலில் சித்சபை என்று அழைக்கப்படுகிறது) காஞ்சி ஜெயேந்திரன் நுழையஅனுமதிக்கக்கூடாது என்று பொது தீட்சதர்கள் சங்கத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொது தீட்சர் சபை - ஜெயேந்திரன்நுழைவை அனுமதிக்கக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இந்த உத்தரவை மீறி, ஜெயேந்திரன், தன்னுடன் நெருக்கமாக உள்ள சில தீட்சதப் பார்ப்பனர்கள் ஆதரவுடன், “சித் சபைக்குள்” நுழைந்து விட்டார். கடந்த மே 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இந்தக் கோயிலில் கடந்த மே முதல் தேதி நடந்த ‘கும்பாபிஷேகத்தை’த் தொடர்ந்து, ‘மண்டலாபிஷேக’ பூஜைகள் நடந்து வருகிறதாம். இதில் பங்கேற்க வந்த காஞ்சிபுரம் ஜெயேந்திரன், குறுக்கு வழியில் ‘சித் சபைக்குள்’ நுழைந்து விட்டார்.

செய்தியறிந்த தீட்சதப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர், அங்கேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயேந்திரனை உள்ளே அழைத்துச் சென்ற ஒரு சில தீட்சதப்பார்ப்பனர்களுக்கும் ஏனையதீட்சதப் பார்ப்பனர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு, கோயிலுக் குள்ளேயே கைகலப்பு ஏற்பட்டது. பிரச்சினை கடுமையானவுடன் ஜெயேந்திரன், அங்கிருந்து வெளியேறி விட்டார். இதைத்தொடர்ந்து பொது தீட்சதர்களின் அவசரக் கூட்டத்தை அதன் செயலாளர் சர்வேஸ்வர தீட்சதர் அடுத்த நாள் மே 19ஆம் தேதி கூட்டினார். அப்போது ஜெயேந்திரனை பொது தீட்சதர்கள் அனுமதியின்றியும் ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியும் கர்ப்பகிரகத்துக்குள்அழைத்துச் சென்ற சில தீட்சதர்களுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு பிரிவினர் வலியுறுத்தினர். ஜெயேந்திரனை கர்ப்பகிரகத்துக்குள் அனுமதித்தற்கு பொது தீட்சதர்களுக்கான அமைப்பின் செயலாளர் சர்வேஸ்வர தீட்சதர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இனிமேல் வருங்காலத்தில் இந்த தவறு நடக்காது என்று உறுதியளித்தார். அதன் பிறகே பொது தீட்சதர்கள் கலைந்து சென்றனர்.

தில்லை நடராசன் கோயில் பொது தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்து அறநிலையத் துறை இதன் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீட்சதர்களுக்காக சுப்ரமணியசாமி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும்,இந்த வழக்கில் உறுதியாக எதிர்வழக்காடாமல் தீட்சதப் பார்ப்பனர்களுக்கு மறைமுகமாக ஆதரவு காட்டும் போக்கில் செயல்பட்டது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஆகமங்கள் அனுமதிக் கவில்லை என்று பார்ப்பனர்கள் வாதாடுகிறார்கள். பார்ப்பனர்களிலேயே ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர, ஏனையோர் அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் நியாயம் பேசுகிறார்கள். இப்போது பொது தீட்சதர்கள் சங்க எதிர்ப்பை மீறி காஞ்சி
ஜெயேந்திரன் கருவறைக்குள் ‘குறுக்கு வழியில்’ நுழைகிறார். ஆகம விதிகளை ‘அவாள்கள்’ மட்டும் மீறுவதற்கு அனுமதி உண்டு போலும்.

தமிழ் நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பற்றி ஆராய தமிழக அரசு நியமித்த நீதிபதி மகராசன் குழு பரிந்துரை (1982), பல கோயில்களில் நடக்கும் பூஜை, சடங்குகள் ஆகம விதிகளுக்கு எதிரானதாக இருப்பதைப்பட்டியலிட்டுள்ளது. அதில், தில்லை நடராசன் கோயிலில் தீட்சதப் பார்ப்பனர்கள் வேதங்களைக் கொண்டு நடத்தும் பூஜை முறை ஆகம விதிகளுக்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. இது குறித்து மகராஜன் குழு பரிந்துரையில் கூறப்பட்டுள்ள பகுதி கீழே தரப்படுகிறது:

“சிதம்பரம் நடராசர் பூசை மகுடாகம பூசை, மகுடாகமமே, தமிழுக்குச் சிறப்புப் பிரிவுகளாகிய இசை நாடகம் இரண்டையும் சிறப்பிக்க வந்த ஆகமம். இந்த இரண்டின் வடிவம் நடராசமூர்த்தி. அதனால் அவருக்கு மகுடாகமம் பிரதானம் என்று சொல்வது பொருத்தமுடையது. பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய தில்லைக் கலம்பகத்தில் நடராசப்பெருமான் மகுடாகமப் பூசை கொள்கிறார் என்று பாடியிருக்கின்றனர். ஆனால் தில்லையில், மகுடாகமப்படி பூசை நடைபெறவில்லை. பதஞ்சலிபத்ததிப்படி பூசை நடக்கிறது. இது வைதிக பூசை என்று தீட்சிதர்கள் சொல்கிறார்கள். அவர்கள் கூற்று சரியானதாக ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனெனில் வேதத்தில் சிவபூசை அல்லது நடராச பூசை இல்லை. அங்கு உள்ளதெல்லாம் அக்கினி (நெருப்பு) காரியமே தவிர, மூர்த்தி பூசை இல்லை.

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலும், சிதம்பரம் நடராசர் கோயில் உள்பட, ஆகமப் பிரதிட்டையே அன்றி வைதிகப் பிரதிட்டையில்லை. (சிலைகளை கோயிலில் நிறுவி, கடவுளாக்கும் போது பின்பற்றப்படும் சடங்கு முறை ஆகமமே தவிர, வேதமுறையல்ல) சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொள்வது அதிகப்படியானது. ஆகமங்களிலேயே அவற்றுக்கு வேண்டிய கிரியைகளுக்குரிய மந்திரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இங்கு வேத மந்திரம் இன்றியமையாத அங்கம் அல்ல. சிவாச்சாரியர்கள் வேறிடத்தில் கூறிய வேத ஆகம ஒருமைப்பாட்டுணர்ச்சியின் விளைவாகத்தான் வேத மந்திரங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். (அதாவது பார்ப்பன உணர்வுடனே ஆகமத்தை மீறி வேதங்களை திணிக்கிறார்கள்-ஆர்) ஆதலால் தமிழ்நாட்டுக்கே உரிய, வேறெந்த நாடும் கண்டிராத நடராசர் மூர்த்தியின் பூசை வைதிக பூசை என்று கூறுவது பெரும் பிழை மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய புராதனமான கடவுள் கொள்கைக்கும் பண்பாட்டுக்கும் செய்கிற பெருந்தீமையுமாகும். எப்படியாயினும் வைதிக பூசை என்று சொன்னால் ஆகம விதிப்படி இதுவும் புனிதம் கெடுவதாகும்” என்று மகராஜன் குழு பரிந்துரை கூறுகிறது.

Pin It