ஆதித் தமிழர் பேரவை சார்பாக, மதுரை வீரன் வரலாறு மீட்பு அரசியல் எழுச்சி மாநாடு, 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5-00 மணியளவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக மக்கள் ஜனநாய கட்சி தலைவர் கே.எம்.செரீப், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கௌரவத் தலைவர் பேராசிரியர் அருணன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் முதலானோர் உரையாற்றினர். மதுரை வீரன் வரலாற்று நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட பேராசிரியர் அருணன் பெற்றுக்கொண்டார். கழகத் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம் :

வரலாற்றைச் சொல்வதற்குகூட சமூகத்தில் சகிப்புத் தன்மை இல்லாமல் நூலில் உள்ள சில சொற்களைச் சொல்லிக் (பொம்மியின் திருமணம் என்று சொல்வதற்காக) கூட தடை விதிக்கிறார்கள். முருகன் வள்ளியை திருமணம் செய்தான். எனவே அந்த ஜாதிக்காரன் முருகன் கதையையே சொல்லக் கூடாது என்று பேசுவார்களா? கோபிகா ஸ்திரிகள் அத்தனை பேருடனும் கிருஷ்ணன் உறவு வைத்திருந்தான் என்று கதை இருக்கின்றதே தங்களை இழிவுபடுத்துவதாக யாதவ மகாசபை தடை கேட்குமா? பெரிய ஜாதியில் பிறந்தால் தான் அறிவாளியாக இருக்க முடியும் என்று வள்ளுவரையே சொன்னான். ஆதி என்ற புலச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவன் என்று திருக்குறள் இரண்டாம் பதிப்பில் எழுதிவிட்டான். தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிப்புக்குப் போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பெண் மருத்துவர்; முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்; இவர் இசை வேளாள சமூகத்தில் பிறந்திருக்க முடியாது, சுப்ரமணிய அய்யருக்கு பிறந்தவர் என்று சொன்னான். இப்படி வரலாற்றில் நாம் பலவற்றை திருத்த வேண்டியிருக்கின்றது.

தற்போது இந்த நாடு யாருக்கு சொந்தம் என்பதில் பெரும் விவாதம் நடக்கின்றது. தமிழ்நாட்டில் தமிழன் மட்டும் தான் இருக்கவேண்டும், தெலுங்கு, கன்னடம், உருது பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் யார் என்பதை பற்றி நாம் பேச வேண்டியிருக் கின்றது. அதற்கும் பல வரலாறுகளை சொல்ல வேண்டியிருக்கின்றது. பேசுகிற மொழியில் இருந்து தான் தேசிய இனம் உருவாகிறது என்று பேசும் மடையர் களுக்கு, வரலாற்றில் இருந்து தான் தேசிய இனம் உருவாகிறது என்ற உண்மை தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட மொழியை பேசுபவர்கள் மட்டும் எப்படி தேசிய இனமாக இருக்க முடியும்? இப்படிப்பட்ட தலைவர்களை பின்பற்று கின்ற ஏமாளிகளுக்கு நாம் வரலாற்றை சொல்லித் தரவேண்டியுள்ளது. மதுரை வீரன் வரலாற்றை மீட்டிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சி சரிதான். எங்களுக் குள்ளும் வீரர்கள், புரட்சியாளர்கள் இருந்திருக்கின்றார்கள், அவர்கள் சாதி மறுப்பில், கோவில் நுழைவில், தேவதாசி மீட்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று காட்டவேண்டிய தேவை இருக்கிறது; காட்டுகிறோம். ஆனால் அதிலேயே நின்று விடக் கூடாது என்ற எனது அச்சத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.  1990 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒரு புதிய எழுச்சி தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் வந்தது. அதிலிருந்து நாம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். அதிலிருந்து நம்மை திசை திருப்புவதற்காக உள்ளூர் தலைவர்களை முன் நிறுத்துகிறார்களோ என்ற அய்யம் கூட எனக்கு உண்டு. வரலாற்றை மீட்போம் ஆனாலும் நம்முடைய அடையாளமாக அம்பேத்கரை விட்டு விடாமல் தொடருவோம்.

வரலாற்றில் வாழ்ந்தவர்களைப் பற்றி பேசுவது நமக்கு பெருமிதம். பெரியாரிடம் வரலாற்று பெருமிதம் இல்லை என்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சொல்லுவார்கள். நமக்கு பெருமிதமான வரலாறே இல்லை, அடிமை வரலாறு தான் எங்களுக்கு உண்டு என்று நான் சொல்லுவது உண்டு. நீங்கள் காட்டுகின்ற பேரரசர்களெல்லாம் எங்களை இழிவுபடுத்தியவனாக இருந்திருக்கின்றான். அழகிய தமிழ்ப் பெயரான அருள்மொழித்தேவன் என்பதை இராஜராஜன் என்று வடமொழியில் மாற்றி கொண்டவன் தான் நமக்கு பேரரசனாக காட்டப்படுகிறான். தாழ்த்தப்பட்டவர்களை தனியாக குடியமர்த்தி வைத்தவனை, தேவடியாள் தெரு என்று தனியாக வைத்தவனை, நிலத்தோடு சேர்த்து அடிமைகளை விற்கும் பழக்கத்தை வைத்திருந்தவனை பேரரசனாக காட்டினால் அது நமக்கு பெருமிதமான வரலாறா? இனி பெருமிதம் மிக்க வரலாறை படைக்க வந்திருப்பவர்கள் நாம். நமக்கு இருக்கின்ற இழிவுகளை துடைத்தெறிந்து விட்டு புதிய வரலாறு படைக்க வந்திருக்கிறோம் நாம். இது குறித்து பெரியார் பேசியதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்….

“தமிழர் வாழ்க்கை நடப்புகளில் பழந்தமிழர் கொள்கை என்று பேசக்கூடாது என்றும், அதை கொண்டு வந்து மேற்கோள் காட்டக் கூடாது என்றும், எமது தோழர்களை கேட்டுக் கொள்கின்றேன். பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது. பழந் தமிழன் யாராயிருந்தால் எனக்கென்ன? உங்களுக்குத்தான் என்ன காரிய மாகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவா யிருந்தால் தான் இங்கு இன்று நமக்கு என்ன இலாபம்? என்பது தான் என் கேள்வி.

பழந்தமிழர் நிலையைப் பற்றி பேசுபவர்கள் பகுத்தறிவுவாதிகளாக, பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைக்காரர்கள். ஆனால் அவர்களை ஒன்று கேட்கின்றேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனை விட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும், அது போலவே 4000, 5000 வருஷத்திற்கு முன் இருந்த மனிதனை விட இன்று இருபதாவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவம் பெற சவுகரியமும் ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா? அல்லவா? என்பதோடு, அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வைவிட எண்ணிய எண்ணத்தைவிட வேறான வாழ்வும் வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதேயாகும்? இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்கு பழந்தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டி இருக்கிறது என்று உங்களை வணக்கமாகக் கேட்கிறேன்.

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அந்நியன் ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோதான் பயன்படக் கூடயதாக ஆகிவிட்டது. இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகிவிட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு, செல்ல வேண்டியவனேயொழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக்கூடாது” என்று பெரியார் கூறுகிறார்.

நமக்கு பழந்தமிழ் அரசன் பெருமையை சொல்பவர்கள் நம்மை ஏமாற்றத் தான் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழி பேசுபவன் மட்டும் தமிழன் என்று சொல்லுகின்றவன் தான், இந்த நாட்டில் இந்துத்துவா என்று நம்மீது ஏவியிருக்கின்ற, நம்மை அடக்கி வைத்திருக்கின்ற அந்த கொடுமைகள் பற்றி அல்லது இந்திய பேராதிக்க ஏகாதிபத்திய அரசு இருந்து கொண்டு தமிழ் இனத்தின் உரிமைகளை சுரண்டுவதை சிந்திக்க விடாமல் பிற மொழி பேசுபவனை எதிரியாக காட்டி ஏமாறுகிறார்கள்; ஏமாற்றுகின்றார்கள். இந்த வரலாற்று தவறுகளையும் சீர்படுத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டும்; அவர்களுக்கும் அறிவூட்டி அவர்களை திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டும் என்று இந்த வேளையில் கேட்டுக்கொள்கின்றேன். நான் நமக்கான அடையாளமாக சொன்னேன் அம்பேட்கரை வைப்பது என்பது. அவர் நமக்கு காட்டிய வழியை மட்டுமல்ல போராட்ட வழிகளை, நம்மை மீட்பதற்கான வழியினை எடுத்துச்சொன்னதை நாம் மீண்டும் மீண்டும் நமது சிந்தனைக்கு கொண்டுவருவோம். நம் வரலாற்றில் வாழ்ந்த பெரும் வீரர்கள் இருக்கட்டும், அண்மைக் காலத்தில் நம் சமுதாயத்திற்காக உழைத்தவர்களான எல்.குருசாமி, ஜகநாதன் போன்ற தலைவர்கள் ஆற்றிய பணிகளை நினைவூட்டுவோம்; வழிகாட்டிகளாக அவர்களை வைத்துக்கொள்வோம். தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர், இரண்டு மாமேதைகளும் நமக்கு காட்டிய வழி என்பது இந்துத்துவா, இந்து மதம், கடவுள் என்பதெல்லாம் நம்மை அடிமைப் படுத்தவும் அடிமை நிலையைத் தொடரச் செய்யவும் பயன்படுத்தப் படுபவை; அவற்றை தகர்த்தெறிவதில் நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த இயக்கத்தில் இருக்கும் பல தோழர்கள், இந்து மத அடையாளத்தை விடவில்லை; அதை பேணிக்காத்துக் கொண்டிருக்கின்றோம். உங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் யார் என்று அடையாளம் தெரிந்துகொள்வதற்காக உங்கள் கையிலாவது, கழுத்திலாவது கருப்பு கயிறு கட்டியாக வேண்டும் என்று ஒரு காலத்தில் பேஷ்வா மன்னர்கள் ஆணையிடுகிறார்கள்; அது இழிவின் சின்னம் அறுத்தெறியுங்கள் என்று இயக்கம் நடத்தியவர் அம்பேத்கர். அம்பேத்கரையும் பாராட்டிக் கொண்டு –தலைவராக ஏற்றுக்கொண்டு இன்னும் சிலர் பொருள் தெரியாமல் தமது கைகளில் கறுப்பு கயிறு கட்டிக்கொண்டிருக் கிறார்கள்; ரக்ஷா பந்தன் என்ற பெயரில் திணித்தான். பின்னர் ப்ரண்ட்ஷிப் பாண்ட் என்ற பெயரில் திணிக்கிறார்கள்; எப்படியாவது நமது கையில் கயிறு கட்டவேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

இந்து மதம், இந்து மதச்சின்னங்கள், இந்து மதச்சிந்தனைகள் எல்லாவற்றை யும் விட்டொழிப்பதன் வழியாக நாம் விடுதலை பெற்ற மனிதர்களாக, சுய மரியாதை உள்ள மனிதர்களாக வாழ்வதற்கு உறுதியேற்று, மற்றவர்களுக்கு தெளிவுபடுத்துகின்ற பணிகளை செய்யுங்கள்; அந்தப் பணிக்கு என்றைக்கும் திராவிடர் விடுதலைக் கழகம் உங்களோடு இணைந்து நிற்கும். காரணம், ஒரு சமுதாயத்தில் மாற்றத்தை காண விரும்புகிறவன் அந்த சமுதாயம் எப்படிப்பட்ட மாற்றம் அடைய வேண்டும் என யார் சொல்வது சரியாக இருக்கும்? ஒரு நகரத்தில் வாழ்பவன் சொன்னால் அது அவனுடைய வசதிக்கு இருக்கும்; கிராமத்துக்காரனின் சிக்கல் தெரியாது. கிராமத்தில் இருக்கும் ஆதிக்க ஜாதிக்காரன் சொன்னால் அவனுக்கும் சில சிக்கல் தெரியாது. அங்கேயும் அடக்கப்பட்டு உரிமையற்று கிடக்கின்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் யாரேனும் சொல்ல வேண்டும்; அதிலும் குடும்பத்தில் அடக்கப்பட்டு கிடக்கும் ஒரு பெண் சொல்வது தான் சரியானதாக இருக்கும். அவர்கள் விரும்பும் சமுதாயம் தான் வேண்டும். எனவே ஒரு “ஆதித் தமிழர் சமுதாயப் பெண்” விரும்புகின்ற சமூக விடுதலையை பெறுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்”என்றார்.

Pin It