தமிழ்நாட்டில் வெலிங்கடனில் பயிற்சிப் பெறும் இரண்டு சிங்கள ராணுவ அதிகாரிகளை ஆந்திராவுக்கு மாற்றலாம் என்று இந்திய அரசு தெரிவித்த யோசனையை இலங்கை அரசு ஏற்க மறுத்து அவர்களை இலங்கைக்கு திருப்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே 13ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய ராஜபக்சே அதை நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி காலம் கடத்த திட்டமிட்டுள் ளார். இந்தியாவை அவமதிக்கும் இந்த முயற்சிக்கு இந்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. புதுடில்லியில் பிரதமரை சந்திக்க வந்த தமிழ் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற வேட்பாளர்களிடம் இந்தக் கருத்தைப் பதிவு செய்த பிரதமர் அலுவலகம், ஜூலை 8ஆம் தேதி இது குறித்துப் பேசுவதற்கு பாதுகாப்புத் துறை செயலாளர் சிவசங்கரமேனனை கொழும்புக்கு அனுப்புகிறது. கொழும்புவில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக

இந்தியா எச்சரித்துள்ளதாகவும், இலங்கை நாடாளு மன்றத்தில் கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்திருத்த நகலை ஆய்வு செய்ய ஹார்டி சிங்பூரி என்ற அதிகாரியை இந்தியா சிறப்பு தூதராக அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. தென்னாப்பிரிக்காவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் இப்ராகிம், கொழும்பு சென்று, இது குறித்து தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களிடமும் இலங்கை அரசுக்குமிடையேயும் சமரச முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஜெர்மன், கனடா நாடுகளுடனான இலங்கையின் உறவு சிக்கலுக்கு உள்ளாகி யுள்ளது. ராஜபக்சே அரசை கவிழ்ப்பதற்கு ஜெர்மனிலுள்ள ஒரு அரசு சாரா நிறுவனம் (ஃபிரட்ரிச் நவ்மான் நிறுவனம்) இலங்கை எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து சதி செய்து வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது. இதற்கிடையே 13 ஆவது சட்டத்திருத்தத்தை மாற்றும் முயற்சியில் இந்தியாவிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் கொழும்பு செய்தியாளர் இத் தகவல்களை எழுதியுள்ளார்.

Pin It