இஸ்லாமிய தோழர்களை தமிழர்களாகவே நாம் கருதுகிறோம். தீண்டாமைக் கொடுமையிலிருந்து முழுக்குப் போட விரும்பி இஸ்லாம் ஆனவர்கள். தீண்டாமை இழிவு ஒழிய இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுங்கள் என்று பெரியார் கூறினார். பெரியார் இயக்கத்திலிருந்து விலகி, இஸ்லாமைத் தழுவிய தோழர் பெரியார் தாசன். பெரியார் இஸ்லாமை ஏற்றாரா? எதிர்த்தாரா? என்ற குறுந்தகடு ஒன்றை அண்மையில் வெளியிட்டிருக்கிறார். இஸ்லாம் மார்க்கத்தைத் தேர்வு செய்வது பெரியார் தாசனின் உரிமை. ஆனால், எந்த மதத்தையும் ஏற்காத பெரியாரை தன்னுடைய கொள்கைக்கு இழுக்க பெரியார் தாசன் முயற்சிக்க வேண்டாம் என்பதே எமது கருத்து.

பெரியார்தாசனின் இத்தகைய தவறான முயற்சிகளால் இஸ்லாமியர்களோடு நமக்குள்ள சகோதரத்துவம் குலைந்து விடக் கூடாது என்ற கவலையோடு இங்கு இஸ்லாம் பற்றிய பெரியார் கருத்தை பதிவு செய்கிறோம். சாத்தான் குளத்தில் நடந்த முகம்மது நபிகள் பிறந்த நாள் நிகழ்வில் பெரியார் ஆற்றிய உரை 2.8.1931 ‘குடிஅரசு’ இதழில் வெளி வந்துள்ளது.

“ஆதி திராவிடர்களை நான் ‘இஸ்லாம் கொள்கைகையத் தழுவுங்கள்’ என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவு மில்லை. சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதி விட்டேன். ஏனெனில், ‘மோட்சம் அடைவதற்காக’ வென்று நான் ஆதி திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்ல வில்லை. அல்லது ‘ஆத்மார்த்தத்திற்கோ’ ‘கடவுளை அறிவதற்கோ’ நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றிப் பெறுவதும் சந்தேகம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதி திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன? யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டு மானால் எந்தவித மன மாறுதல்கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5.30 மணிக்கு ‘தீண்டாதவன்’ என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆnக்ஷபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை.

கேவலம் வயிற்றுச் சோற்றுக்காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய் கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின் றோம். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதி திராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்து போகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது. அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால், எது எப்படி யானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றும் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.

ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில் பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன். இங்குள்ள கிறிஸ்துவ சகோதரர்கள் கோவித்துக் கெள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப் படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷமே தான். அதுவும் பயன் அளிக்கவில்லை.

உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர்களையும், கிறிஸ்தவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவு படுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான். அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்த நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லா மானவன்) “எந்தடா? பன்னிக் கூத்தச்சி மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.

ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள். ஆனால், நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைப் பார்க்கிறேன்.

- பெரியார்

Pin It