1917 “தென்னிந்திய மக்கள் சங்கம்” சார்பில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மும்மொழிகளில் நாளிதழ்கள் வெளி வந்தன. ஆங்கில நாளிதழ் "ஜஸ்டிஸ்’ பிப்ரவரி 26-ல் வெளியிடப்பட்டது. இவ்விதழுக்கு ஆசிரியராகப் பணியாற்ற சி.கருணாகரமேனன் ஒப்புக் கொண்டிருந்தார். அன்னிபெசன்ட் சர். சி.பி.ராமசாமி (அய்யர்), கேசவ (பிள்ளை) ஆகியோர் குறுக்கிட்டு அவரைத் தடுத்தனர். எனவே ஜஸ்டிஸ்நாளிதழ் வெளிவர 6 நாட்களே இருக்கும் நிலையில் கருணாகரமேனன் ‘பல்டி’ அடித்து ஆசிரியராக இருக்க மறுத்து விட்டார். பின்னர், நாயரே கவுரவ ஆசிரியர் ஆனார். ‘மதராஸ் ஸ்டாண்டர்ட்’ பத்திரிகையின் ஆசிரியராய் இருந்த பி. ராமன் (பிள்ளை) துணை ஆசிரியர் ஆனார். தமிழ் நாளிதழ் ‘திராவிடன்’ ஜூன் மாதத்தி லிருந்து வெளிவரத் துவங்கியது. இவ்விதழின் ஆசிரியராக என்.பகவத்சலம் (பிள்ளை), துணை ஆசிரியர்களாக சாமி ருத்ர கோடீ°வரர், பண்டித வில்வபதி (செட்டியார்) ஆகியோர் பணியாற்றினர். ஏற்கனவே நடைபெற்று வந்த (நிறுவியது 1885-ல்) ‘ஆந்திரப் பிரகா சிகா’ என்ற தெலுங்கு வார இதழின் உரிமையைப் பெற்று, நாளிதழாக மாற்றி அதுவும் நடத்தப் பட்டது. இந்த தெலுங்கு நாளிதழின் ஆசிரியராக ஏ.சி. பார்த்தசாரதி (நாயுடு), துணை ஆசிரியர்களாக, பண்டித கானாலா ராகவையா (நாயுடு), நரசிம்மராவ் (நாயுடு) ஆகியோர் அமர்ந்தனர்.

தென்னிந்திய மக்கள் சங்கத்தின் சார்பில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அரசியல் கட்சி அக்டோபரில் அமைக்கப்பட்டு, அதன் சட்ட திட்டங்கள் வெளியிடப்பட்டன. (1916-ல் தெ.இ.ந.உ. சங்கம் துவக்கப்பட்டாலும் அமைப்பு ரீதியாக சட்ட திட்டங்களுடன் இவ்வாண்டு செயல்படத் துவங்கியது) தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத எவரும் இதில் உறுப்பினராக ஆகலாம் என்பது இச்சட்ட திட்டத்தில் உள்ள ஒரு முக்கிய விதி ஆகும். இந்த காலகட்டத்தில், பார்ப்பனர் அல்லாதாரின் இன எழுச்சியைத் தூண்டும் வகையில் நாடெங்கிலும் பார்ப்பனர் அல்லாதார் மாநாடுகள் நடைபெற்றன. ஆகஸ்டு 19 இல் பனகல் அரசர் தலைமையில் கோவையிலும், அக்டோபர் 27-28 இல் எம்.வெங்கடரத்னம் தலைமையில் கோதாவரி மாவட்டம் பிக்காவோவிலும், நவம்பர் 3-4 இல் பாரி°டர் கே.சுப்பாரெட்டி தலைமையில் ராயல் சீமா-புலிவெந்தலாவிலும், நவம்பர் 11, 12 இல் தியாகராயர் தலைமையில் பெஜவாடாவிலும், டிசம்பர் 9 இல் புதுக்கோட்டை இளவரசர் கே.எ°.துரைராஜ் தலைமையில் சேலத்திலும் பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் எழுச்சியுடன் நடைபெற்றன.

மேலும், நவம்பர் 3 இல் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை மாவட்ட தமிழ்த் தலைவர்கள்மாநாடு திருநெல்வேலியில் தெலப்ரோல் ஜமீன்தார் தலைமையில் நடைபெறறது. இந்த மாநாடுகள் அனைத்திற்கும் சிகரமாக டிசம்பர் 28-29 இல் சென்னை மவுண்ட்ரோடு (அன்றைய பெயர்) வெலிங்டன் தியேட்டரில் சென்னை மாகாண முதலாவது தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடைபெற்றது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பது அது நடத்தி வந்த ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில நாளிதழின் பெயரால் ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று ஆங்கிலத்திலும் அதன் மொழி பெயர்ப்பான ‘நீதிக் கட்சி’ என்றும் அழைக்கப் பெற்றது.

(தொடரும்)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

86 ஆம் அகவையில் மூத்த பெரியார் தொண்டர் திருவாரூர் தங்கராசு

கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடறிந்த பேச்சாளருமான திருவாரூர் தங்கராசு அவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி 86 ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாளில் இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லம் சென்று கழகத் தோழர்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி, வழக்கறிஞர் இளங்கோ, வழக்கறிஞர் குமாரதேவன், சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் உமாபதி, அன்பு தனசேகர், சுகுமார், இராவணன், கோவை ராசுக்குமார், ஜான் உள்ளிட்ட தோழர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களை சந்தித்து  சால்வை அணிவித்து, மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். கழகத் தோழர்களை சந்தித்த மகிழ்வில் பழைய வரலாறுகளை நினைவுகூர்ந்து, திருவாரூர் தங்கராசு நீண்ட நேரம் உரையாடினார்.

பெரியார் கொள்கைக்கே அர்ப்பணித்து, நாடு முழுதும் கொள்கைகளை எடுத்துச் சென்ற திருவாரூர் தங்கராசு அவர்கள் மேலும் பல்லாண்டு வாழ ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It