கத்தோலிக்க மத ஆட்சி நடத்தும் அயர்லாந்து நாட்டில் அதன் கருக்கலைப்பு தடை சட்டத்தினால் இந்தியரான பல் மருத்துவர் 31 வயது சவிதா உயிரிழந்துவிட்டார். அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையின் கருவைக் கலைத்தால் மட்டுமே அப்பெண் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலையில், அந்நாட்டு, கேல்வே பல்கலை மருத்துவமனை சட்டத்துக்கு பயந்து கருக்கலைப்புக்கு மறுத்துவிட்டது. ‘கரு’வை அழிக்கக்கூடாது என்ற ‘கருணை’, தாயின் உயிரைப் பறித்திருக்கிறது. இதுவே மதத்தின் பார்வையில் ‘கருணை’க்கான அர்த்தமோ என்று கேட்க வேண்டியிருக்கிறது. தாயின் உடல் நலனுக்குக் கேடு ஏற்படும் என்ற நிலையில் கருக்கலைப்பு செய்யலாம் என்று 1992 இல் அயர்லாந்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அந்நாடு சட்டத்தில் திருத்தமாகக் கொண்டு வரவில்லை. காரணம், அந்த நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் அழுத்தமான பிடிக்குள் அந்நாட்டின் அரசு இருப்பதால்தான்!

அதேபோழ்து, அந்நாட்டின் அரசியல் சட்டம் (பிரிவு 41) ‘குடும்பம்’ என்ற அமைப்பை அங்கீகரித்து, குடும்பத்தைப் பாதுகாப்பதை அரசின் அடிப்படை உரிமையாக்கி, அந்தக் குடும்பத்தின் மய்யமாகத் திகழ்வது பெண்கள் தான் என்றும் கூறுகிறது. குடும்பத்தின் மய்யமே பெண் என்று அங்கீகரிக்கும் சட்டம், அப்பெண், தனது கருவை அழிப்பதற்கான உரிமையைப் பறிப்பது ஒரு முரண்பாடுதான். இது சமூகத்துக்கும் மதத்துக்குமிடையே உள்ள ‘இடைவெளி’ தன்னுடைய மதம் ‘இந்து’ என்றும், கத்தோலிக்க மத அடிப்படையிலான சட்டம் தனக்கு எப்படி பொருந்தும் என்றும் சவிதா கேள்வி எழுப்பியும் அதை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. கத்தோலிக்க மதம் தனது பழமைவாதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்து, இந்நிகழ்வின் மூலம் உலகம் முழுதும் வலிமைப் பெற்று வருகிறது. உயிர்ப் பிரச்னைக்கு மட்டுமல்ல; உரிமை களிலும் மதம் குறுக்கிட அனுமதிக்கக் கூடாது.

அரசுக்கான சட்டங்கள் அந்நாட்டில் வாழும் அனைத்துப் பிரிவினருக்குமான உரிமைகளின் அடிப்படையில் உருவாக்கப்படாமல், மதத்தை மய்யமாக்குவது ஆபத்தானது என்பதே இதிலிருந்து பெறவேண்டிய படிப்பினை. இந்தியாவில் மதப் பிரச்சினைகளில் அரசு தலையீடு கூடாது என்ற குரல் அவ்வப்போது மதவாதிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. அதே மதவாத சக்திகள் அயர்லாந்து நாட்டின் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்பதே நமது அழுத்தமான கருத்து.

இந்து மதம் வலியுறுத்தும் சமூகப் பாகு பாடுகளை இந்தியாவின் சட்டங்கள் மதம் தொடர்பான நிகழ்வுகளில் இப்போதும் அங்கீகரிக்கவே செய்கின்றன. சமூகத்தில் தீண்டாமை குற்றமாக்கப்பட்டாலும், இந்துமத நிறுவனங்களில் அத் தீண்டாமை ‘ஆகமம்’, ‘சாஸ்திரம்’ என்ற பெயரில் சட்டப் பாதுகாப்பு களோடு வலம் வருகின்றன. அதேபோல் இந்தியாவில் வழிபாட்டு நிறுவனங்களை நிர்வகிக்கவோ, வழிபாடுகளை தலைமையேற்று நடத்துவதோ, பெண்களுக்கு முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு ‘இந்து’ப் பெண், ‘சூத்திரர்’களைப்போல் அவர் எவ்வளவுதான் ‘சாஸ்திரங்களை’ கற்றிருந்தாலும் அர்ச்சகராகி விட முடியாது. பெண்களுக்கு எதிரான இந்த பாகுபாடு சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றமாகும்.

அயர்லாந்து நாட்டின் கத்தோலிக்க பழமைவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது முற்றிலும் நியாயம்தான்! அதே வேளையில் சம உரிமைகளை நசுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் சட்டத்தில் இடமிருக்கக் கூடாது என்ற கொள்கை அயர்லாந்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பொருந்தும் என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும். அயர்லாந்துக்கு ஒரு நீதி; இந்தியாவுக்கு ஒரு நீதி என்று இரட்டை வேடம் போடக் கூடாது!

Pin It