திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்துவதுபோல் இடதுசாரி சக்திகள் பெரியார் இயக்கங்களோடு ஜாதிய சக்திகளை எதிர்ப்பதில் இணைந்து போராடும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத் சூளுரைத்தார். இந்த மாநாட்டில் திரண்டிருக்கும் ஏராளமான இளைஞர்கள்தான் சமூக மாற்றத்துக்கான உந்து சக்திகள் என்றும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். டிசம்பர் 24 மாலை ஈரோட்டில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொது மாநாட்டில் பி. சம்பத் ஆற்றிய உரை:

இரண்டு நாட்களாக கம்பீரமாக நடந்து வரக் கூடிய இந்த மாநாட்டு நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாக இந்த பொது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலம் கருதி, என்னுடைய கருத்துக்களை சுருக்கமாக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தக் கூடிய இந்த எழுச்சி மிக்க மாநாட்டிலே, இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதியாக கலந்து கொள்வதிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன். இடதுசாரி இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பெரியார் இயக்கங்களோடும், தலித் அமைப்புகள் உள்ளிட்ட ஜனநாய இயக்கங்க ளோடும், தோளோடு தோள் சேர்ந்து, ஜாதி ஒழிப்புக்காக – தீண்டாமை ஒழிப்புக்காக உறுதியாக களத்தில் இறங்கி போராடும் என்று நான் இங்கே உறுதிபட சொல்ல விரும்புகிறேன்.

இங்கே எனக்கு முன்பு பேசிய மதிப்பிற்குரிய நண்பர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் கூட குறிப்பிட்டார்கள். ‘வர்க்கத்துக்கு எதிராக போராடி யவர்கள் இன்று சற்று மாற்றி வர்ணத்துக்கு எதிராக வும் போராடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்; ஆம் வர்ணத்திற்கு எதிராகவும் நாங்கள் போராடு கிறோம். உண்மை என்னவென்றால் வர்க்கத்திற்காக மட்டும் போராடுபவர்கள் அல்ல; உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காக போராடக்கூடிய அதே நேரத்தில், வர்ணத்திற்கு எதிராகவும், வர்ணம் உருவாக்கிய கொடுமைகளுக்கு எதிராகவும் போராடிய இயக்கம் தான் இடதுசாரி இயக்கம் என்பதை இங்கே பணிவோடு பதிவு செய்ய விரும்புகிறேன். உங்களுக்கு அறியாதது அல்ல; பார்ப்பனியம் என்பது அது வெறும் ஜாதி சார்ந்த பிரச்சனை அல்ல. எவனொருவன் தன் சுயஜாதி சார்ந்து, தனக்குக் கீழான ஜாதிகளை ஒடுக்கு கின்றானோ,  அவன் பார்ப்பனிய கருத்தின் அடிமை என்பதிலே யாருக்கும் மறுப்பு இருக்க முடியாது. அப்படிப்பட்ட இந்த ஜாதி சமூகத்திலே, பார்ப்பன சமூகத்தில் பிறந்த எல்லோரையும் அல்ல. அதிலுள்ள ஒரு சிலரை கூட, வர்ணாசிரமத்திற்கு எதிராகவும், வர்க்கத்திற்காகவும் போராடக் கூடிய தளபதிகளை உருவாக்கிய இயக்கம் செங்கொடி இயக்கம் என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

போராளி சீனிவாசராவ்

சீனிவாசராவை யார் மறக்க முடியும்? கீழத் தஞ்சை மண்ணிலே, உழைப்பாளிகளாக இருக்கக் கூடிய – விவசாயத் தொழிலாளிகளாக இருக்கக் கூடிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அந்த உழைப்பாளி மக்களுடைய கூலிப் போராட்டம் - பொருளாதாரப் போராட்டம் மட்டுமின்றி, அவர்களுடைய சமூக உரிமைகளுக்காக – சமத்துவத் திற்காக – தீண்டாமை ஒழிப்புக்காகவும் போராடிய இயக்கம் அல்லவா செங்கொடி இயக்கம்! இது யாருடைய முழக்கம்? அடித்தால் திருப்பி அடி; உதைத்தால் திருப்பி உதை; திட்டினால் திருப்பி திட்டு. இது கீழத்தஞ்சை பகுதியிலே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, உயர்ஜாதி ஆதிக்க நிலச்சுவான் தாரர்களுக்கு எதிராக சீனிவாச ராவ் கொடுத்த முழக்கம் என்பதை இந்த மாநாட்டிலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே நாங்கள் வர்க்கத்திற்காக மட்டுமல்ல, வர்ணத்திற்கு எதிராகவும் போராடியவர்கள் தான்.

அந்த பாரம்பரியத்தின் அடிப்படையில் தான் இங்கே தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்புக் கூட உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அதில்கூட ஒரு கேள்வி இருக்கிறது; ஏன் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ? ஏன் ஜாதி ஒழிப்பு இல்லை ? என்ற கேள்வி. நியாயமான கேள்வி தான்; நான் உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். இந்த ஜாதிய பெருநெருப்பில், மிகப்பெரிய அளவிற்கு பாதிக்கப் பட்டவர்கள் தலித் மக்கள் அல்லவா! தீண்டாமை கொடுமைகளுக்கும் – அவலங்களுக்கும் ஆட்படு பவர்கள் அவர்கள் அல்லவா? அந்த இழிநிலையில் இருந்து, அவர்களை விடுவிப்பதற்கும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், முன்னுரிமை கொடுத்து உருவாக்கப்பட்டதே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இதற்கான தீண்டாமை ஒழிப்பு என்பதும் அந்த ஜாதி ஒழிப்பின் ஒரு பகுதி என்ற முறையிலே அமைத் திருக்கிறோம்; அந்த பணி நிறைவடைந்ததும் இந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியே, ஜாதி ஒழிப்பு முன்னணியாக செயல்படும் என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்; எந்த தடையும் இல்லை.

ஜாதி ஒழிப்பு என்பது நம்முடைய பொது லட்சியமாயிற்றே! அதை எப்படி விட்டு வைக்க முடியும்? எனவே இந்த ஜாதிச் சமூகத்தின் அனைத்து அநீதிகளையும் எதிர்த்து நிச்சயமாக தோள்கொடுப்போம் - போராடுவோம் என்று நிச்சயமாக சொல்ல விரும்புகிறேன். பெரியார் பிறந்த மண் இது; இந்திய நாட்டிற்கு தமிழகம் தந்த பெருங்கொடையல்லவா தந்தை பெரியார்! அவர் பிறந்த மண் அல்லவா இந்த ஈரோட்டு மண்! இன்றைக்கும் கம்பீரமாக சொல்ல விரும்புகிறேன்; நாடெங்கிலும் பல மாநிலங்களிலே வகுப்புவாத சக்திகள், இன்றைக்கு ஆதிக்க சக்திகளாக திகழ் கிறார்கள். அத்தகைய வகுப்புவாத சக்திகள், தமிழகத்திலே தலைதூக்க முடியவில்லை என்றால், அதற்கான மகத்தான பெருமை தந்தை பெரியாருக் கும், அவர் உருவாக்கிய கருத்துகளுக்கும் உண்டு என்பதை நான் இங்கே நிச்சயமாக சொல்ல விரும்புகிறேன்.

இன்றைக்கு எங்கே இருக்கிறது, இட ஒதுக்கீடு இந்த அளவிற்கு? 69 சதவீத இட ஒதுக்கீடு, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது. ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால், நிச்சயமாக சொல்ல விரும்புகிறோம், இதற்கான மகத்தான பெருமை தந்தை பெரியாருக்கும், அவர் உருவாக்கிய கருத்து களுக்கும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இங்கே கூட சொல்கிறார்கள் பலபேர், ‘நீங்கள் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போடுகிறீர்களே, பிறகு ஏன் நீங்கள் பள்ளிச் சான்றிதழ்களிலே ஜாதியைப் போடச் சொல் கிறீர்கள்? இட ஒதுக்கீட்டிலே ஏன் ஜாதியை கேட்கிறீர்கள்?’ என்று சொல்லுகிறார்கள்.

ஏதோ புத்திசாலித்தனமாக வாதம் செய்வது போல அவர்களுக்கு கருத்து போலும்; நான் நிச்சயமாக சொல்ல விரும்புகிறேன், இந்த இட ஒதுக்கீடு என்பதும், பள்ளிச் சான்றிதழ்களிலே ஜாதிப் பெயரை சொல்லுவதும் கூட ஜாதி ஒழிப்புக்காகத் தான் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். காரணம் மேடு பள்ளமாக இருக்கக் கூடிய ஜாதி சமூகத்தை, சமத்துவப்படுத்துவதற்கு, அந்த அடையாளத்தை தற்காலிகமாக பயன்படுத்தக் கூடிய தேவை இருக்கிறது என்று நான் சொல்ல விரும்புகிறேன். நீங்க டாக்டர்கிட்ட போனா, நமக்கு வந்திருக்கும் வியாதிக்கு மருந்து கொடுக்கிற போது, அந்த மருந்துல கூட கொஞ்சம் விசம் சேர்த்திருப்பாங்க, மருந்திலே எப்படி கொஞ்சம் விசம் சேர்ப்பது தேவையோ, அதே போல இந்த ஜாதி சமூகத்தை ஒழிப்பதற்கு, இந்த இட ஒதுக்கீடு கட்டாயமானது என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன். எனவே இந்த வார்த்தை சொல்லாடல்களெல்லாம் எங்களைப் போன்ற முற்போக்கு இயக்கங்களிடம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.

இறக்குமதி செய்யப்பட்டது பார்ப்பன மதம் தான்

பெரியோர்களே – நண்பர்களே! இன்றைக்கு இந்து மதம் என்பது இத்தியாவை பிடித்த ஒரு பீடை தான். நிச்சயமாக இந்து மதத்தையும் அது உருவாக்கியிருக்கக் கூடிய வர்ணாசிரமத்தையும் ஒழிக்காமல், இந்திய சமூகம் முன்னேறாது என்பதிலே யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஏதோ இந்து மதம் தான் இந்தியா வின் பூர்வீக மதம் போன்றும், இதர மதங்களெல் லாம் இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள் போலவும் வாதாடிக் கொண்டிருக்கிறார்கள், வரலாறு தெரியாதவர்கள். இந்த நாட்டினுடைய வரலாற்றை - சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தவர்கள், தெள்ளத் தெளிவாக சொல்லுகிற முடிவு எதுவென்றால், இந்த பார்ப்பன மதம் என்று முன்பு அழைக்கப்பட்ட - இன்றைய இந்து மதம் என்பது தான் இறக்குமதி செய்யப்பட்ட மதம்.

ஆரியர்கள் இந்த தேசத்திற்குள்ளே நுழைந்த பிறகு, உருவான மதம் தானே இந்து மதம் யாருக்கு மறுப்பு இருக்க முடியும் ? ஆனால் இந்தியாவிலே ஒரு பூர்வீக மதம் உண்டு என்று சொன்னால் - இந்தியா விற்கு பெருமை சேர்த்தது ஒரு மதம் என்றால், அந்த மகத்தான மதம் பௌத்த மதம் என்பதை இங்கே நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். பௌத்த மதம் - சமண மதம், அவை இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மதங்கள். இந்தியாவிலே அது இன்றைக்கு வலிமையாக கால்பதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் கால் பதித்திருந்த மதம் தான். அந்த அடையாளங்களை அநியாயமாக -– அட்டூழியமாக வெட்டிச் சாய்த்தார்கள். பௌத்த மதக் கருத்துக்களை, சமண மதக் கருத்துக்களை அறிவார்ந்த முறையில் சந்திக்க திராணியற்றவர்கள், அரிவாளால் சந்தித்தார்கள். பௌத்த மத பிக்குகளை - முற்போக்கு கருத்துக்களை பரப்பி யவர்களை, ஆயிரம் ஆயிரமாக வெட்டிச் சாய்த்தார்கள். தமிழகத்திலே சமணர்கள் கூட, அப்படித்தான் கொல்லப்பட்டார்கள். மறுக்க முடியுமா?

பனத்தி ஆவது ஏதடா? பறத்தி ஆவது ஏதடா? எலும்பு தோல் சதையினுள்ளும், இலக்கமிட்டிருக்குதோ என்று கம்பீரமாக, முழங்கியவர்கள் சமண மத சித்தர்கள். அவர்களைப் படுகொலை செய்தவர்கள் தானே இந்த மாபாதக, சைவப் பெரியார்களும், இந்த வைணவப் பெரியார் களும்! யார் மறுக்க முடியும்? ஆகவே அப்படிப் பட்ட முறையிலே அந்த முற்போக்கு கருத்துக்களை அழித்து, அதன் சாம்பலிலே உருவாக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்; இல்லை. பௌத்த மதமும், சமண மதமும் உருவாக்கியிருக்கக் கூடிய அந்த கருத்துக்கள் பெரிதான முறையிலே ஒடுக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இன்றைக்கு சொல்ல விரும்புகிறேன், இந்த ஜாதி சமூகத்தின் அடித்தளத்திலே, அது புகைந்து கொண்டிருக் கிறது.  அது கனன்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக அந்த எரிமலை ஒரு நாள் வெடிக்கும் அந்த வெடிப்பிலே இந்த ஜாதி சமூகம் கட்டாயமாக தகரும் என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அதற்கான பாதையிலே நாம் இணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்பதையும் நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.

இந்த கொடுஞ்செயலை, இத்தகைய அக்கிரமங்களை - அட்டூழியங்களை, அறிவார்ந்த கருத்துக்களை ஒழித்துக்கட்டியதிலே மகத்தான பங்கு இந்த மனுசாஸ்திரத்திற்கு உண்டு. அயோக்கியன் மனு உருவாக்கிய சாஸ்திரம் அல்லவா இந்த மனுசாஸ்திரம். வர்ணாஸ்ரமம் நியாயமாம்; அதற்கு முன்னதாக, அதை வாய் வழியாக சொன்னவர்கள், அதற்கு தத்துவ வடிவம் கொடுத்தவனல்லவா இந்த அயோக்கியன் மனு.  அவன் கடவுளின் பெயரால், ஜாதியை - வர்ணத்தை பிரித்தான். ஆண்டவன் தலையில் இருந்து பிறந்த வனாம் பார்ப்பனன்; தோளிலிருந்து பிறந்தவனாம் சத்திரியன்; தொடையில் இருந்து பிறந்தவனாம் வைசியன்; பாதத்திலிருந்து பிறந்தவனாம் சூத்திரன்.

அப்படியானால் எங்கள் பஞ்சமர்கள் எங்கிருந்து பிறந்தார்கள்? என்று கேட்டபோது, அவர்கள் ஆண்டவனுக்கு பிறக்கவில்லை, சபிக்கப்பட்டு பிறந்தவர்கள் - சண்டாளர்கள் என்று கொஞ்சம் கூட ‘நா’ கூசாமல் விளக்கம் தரக்கூடிய மனுநீதி வாதிகளை நான் கேட்கின்றேன், பெரியார் ஆணித் தரமாக சொன்னார், உங்களைப் பார்த்து தான் சொன்னார்; “விஞ்ஞான உலகத்திலே யாராவது ஏற்றுக்கொள்ளமுடியுமா? எவனாவது தலையில் இருந்து பிறப்பானா? எவனாவது தோளில் இருந்து பிறப்பானா? எவனாவது தொடையில் இருந்து பிறப்பானா? எவனாவது பாதத்தில் இருந்து பிறப்பானா? வெட்கம் கெட்டவர்களே! உங்கள் வாதத்தைப் பார்த்தால், பிறக்க வேண்டிய அம்மா- அப்பாவுக்கு, பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தவர்களே பஞ்சம சகோதரர்கள் - தலித்துகள் தான்” என்று அப்பட்டமாக – ஆணித்தரமாக வாதிட்டாரே பெரியார், எவ்வளவு பெருமையாக இருக்கிறது! நெஞ்சம் நிமிர்கிறது, பெரியாரை நினைக்கும் போது.

ஆக அப்படிப்பட்ட அந்த தமிழக மண்ணில் இன்றைக்கு ஜாதிய சக்திகள் தலையெடுக்கத் துடிக்கிறார்கள் என்று சொன்னால், நிச்சயமாக அனுமதிக்க மாட்டோம்; தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். இந்த ஜாதி சமூகத்தை, இந்தியாவிலே -  தமிழ் மண்ணிலே நிலை நாட்டுவதற்கு, மிகக் கொடூரமான அடக்கு முறைகளை ஏவுவதற்கு வழிவகுத்ததல்லவா மனு சாஸ்திரம்.  மன்னர்களுடைய அரசியல் சாசனமாக, பல நூற்றாண்டு காலம் மனுசாஸ்திரம் தானே கோலோச்சியது! பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாம்; அவர்கள் இரு பிறப்பாளர்களாம்; உலகத்தின் அனைத்து உடமைகளும் அவர்களுக்குத் தான் சொந்தமாம். அவர்கள் தான் அதன் முதல் பிரயோகத்தை அனுபவிக்க வேண்டியவர்களாம். அப்படியெல்லாம் சொல்லியிருக்கின்றார்கள். யாரேனும் அந்த பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பார்ப்பனனை இழிவாக பேசினால் - ஜாதி எதிர்ப்பு தன்மையோடு - அவன் நாக்கை வெட்டணுமாம். அது எப்படி தெரியுமா? மனு சொல்லியிருக்கிறான் …. ‘இரண்டு தடவை (இன்ஸ்டால்மென்ட்ல) வெட்டணுமாம் நாக்கை’. எவ்வளவு ஜாதிக் கொழுப்போடு எழுதி வைத்திருக்கிறார்கள்!

இந்த ஜாதி எதிர்ப்புக் கருத்தோடு, பார்ப்பனரை எவராவது இழிவோடு பேசினால் மட்டுமல்ல, கையால் அடித்தால் அவன் கையை வெட்ட வேண்டும்; காலால் உதைத்தால் காலை வெட்ட வேண்டும். வேதம் ஓதுவது பார்ப்பனன் கடமை; இதை சூத்திரன் செய்தால் - பஞ்சமன் செய்தால், மனு அயோக்கியன் எழுதி யிருக்கின்றான் … ‘அப்படி வேதத்தை ஓதக் கூடிய தலித்துகள் – வேதத்தை ஓதக்கூடிய சூத்திரர்களுடைய வாயிலே பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியை உள்ளே விட வேண்டுமாம். அதே போல வேதம் உச்சரிப்பதை கேட்டால் கூட, அவர் களுடைய காதுகளிலே ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டுமாம்’. இது வெல்லாம் உண்மையா என்று கேட்பீர்கள், உண்மை தான், இவையெல்லாம் மனுசாஸ் திரத்திலே இடம்பெற்றிருக்கிறது. அந்த மனு சாஸ்திரம் பல நூறு ஆண்டுகள் இந்திய மண்ணிலே - தமிழ் மண்ணிலே அமுல்படுத்தி யிருக்கின்ற காரணத்தினால் தான், ஒரு பாரம்பரிய பழக்க வழக்கம் என்ற முறையிலே இன்றைக்கும் இந்திய சமூகத்திலே – தமிழ்ச் சமூகத்திலே அது மண்டி கிடக்கிறது; அதற்கு எதிராகத்தான் நாம் மகத்தான முறையிலே போராடுகின்றோம்.

தாலியை உதறியவர்கள்

இந்த ஜாதி சமூகத்தை, உடைத்து நொறுக்கு வதிலே, ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கின்றது. பாராட்டக் கூடிய மிக முக்கியமான பணி என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன், இங்கே கூட பல தம்பதிகளை நமக்கு அறிமுகப்படுத்தினார்கள்; தாலியை அறுத்தாலும் நாங்கள் தம்பதிகளே, தாலி அறுக்கப்பட்டாலும் எங்களுடைய தாம்பத்தி யத்தை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது என்று கம்பீரமாக நின்றார்களே! எவ்வளவு பெருமையாக இருக்கின்றது! ஜாதியா குடும்ப உறவுகளை தீர்மானிக்கிறது? இல்லை என்கிறோம் நாம்; ஆம் என்கிறார்கள் மனுசாஸ்திரவாதிகள். அது தானே இன்றைக்கும் ஜாதியை முன்னிலைப் படுத்தி இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். ஜாதி மறுப்பு திருமணம் கூடாதாம்; காதல் திருமணங்கள் கூடாதாம். அது சமூகத்தை சீரழிக்கிறதாம்; நவீன மனுசாஸ்திரவாதியாக இன்றைக்கு அவதாரம் எடுத்திருக்கிறார் இராமதாஸ். இராமதாசுக்கு சொல்லிக்கொள்வோம், எத்துனை இராமதாசுகள் வந்தாலும் தமிழக மண்ணிலே ஜாதி மறுப்பு திரு மணங்களை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்க 81 சதவீத பிரதிநிதின்னு மார்தட்றாரு; 19 சதம் தலித்துகளை தனிமைப்படுத்துறாராம். இராம தாசுக்கு சொல்லிக் கொள்வோம், நீங்கள் 81 சதவீத பிரதிநிதியா?

அடப் பாவமே நீங்கள் 81 சதம் அல்ல; 27 சதத்தாலும் புறக்கணிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டு தனியாக கிடக்கிறீர்கள்; தவித்து கொதிக்கிறீர்கள், அந்த கொதிப்பு எங்களுக்கு புரிகிறது. நாங்கள் சொல்கிறோம் இந்த மேடையில் இருந்து, நூறு சதமான மக்கள் சார்பாக சொல்கிறோம், இராமதாசுகளே உங்களுடைய கருத்துக்கள் தலையெடுப்பதை அனுமதிக்க மாட் டோம். ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப் போம்; ஏராளமாக நடத்திக் காட்டுவோம். இங்கே கூட ஏராளமான இளைஞர்களை நான் பார்க் கின்றேன். தோற்றத்தில் மட்டுமல்ல, வயதிலும் ஏராளமான இளைஞர்கள் இங்கே வந்திருக் கிறார்கள்; இவர்களெல்லாம் இந்த சமூகத்திலே மிகப்பெரிய மாற்றத்தை – மிகப்பெரிய அளவிற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடிய உந்து சக்திகள் என்பதை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். எனவே எத்தகைய சக்தியும் ஜாதி மறுப்புத் திருமணங்களை தடுத்து நிறுத்து முடியாது என்று இங்கு நான் சொல்ல விரும்பு கிறேன்.  ஆகவே அத்தகைய சவடால்கள் மூலம் இந்தியாவிலே எப்படியாவது மீண்டும் பழைய ஆதிக்கத்தைப் பெறமுடியும் என்று சொன்னால், நிச்சயமாக சொல்ல விரும்புகிறேன், அது பகற் கனவாக தான் இருக்க முடியுமே தவிர, நிறைவேறப் போகிற கனவாக இருக்க போவதில்லை என்பதை யும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இடதுசாரி இயக்கத்தைப் பொறுத்தவரை இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களுடைய உரிமைக்காக தனிக் கவனம் செலுத்தி போராடி வருகின்றோம். தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்களாக மட்டுமல்ல; உழைப்பால் உத்தமர்களாக இருக்கிறார்கள். யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக் கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மோதலை உருவாக்குவதற்கு சில தீய சக்திகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள், இராமதாஸ் உள்பட. இதோ பிற்படுத்தப்பட்டவர்களின் ஏக பிரதிநிதி களைப் போல. எங்களுக்கு தெரியும் – மேடையில் அமர்ந்திருக்கிற எல்லோருக்கும் தெரியும்; பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களும், தலித் சமூகங்களைச் சார்ந்தவர்களும் கணிசமான பேர் உழைப்பாளிகள்; யாராலும் மறுக்க முடியாது.

இன்றைக்கு நாட்டிலே ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகள், ஏறிவரக்கூடிய விலைவாசி, பெருகி வரக்கூடிய வேலை இல்லாத் திண்டாட்டம், அரசாங்கத்தினுடைய தாராளமய கொள்கை, இட ஒதுக்கீட்டிற்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இத்தகைய உலகமய - தாராளமய கொள்கைகள். இன்றைக்கு பார்த்தாலும் கூட இவ்வளவு பெரிய கொடூரமான கொள்கைகளை கடைபிடித்துக் கொண்டு, ஜாதிகளாக மக்களை பிளவு படுத்தி, ஒன்றுபட விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். இவர்கள் வெவ்வேறு ஜாதியைச் சார்ந்தவர்கள் தானே ஒன்றுபட மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். எனவே தான் இந்த மாநாட்டிலே நாம் சொல்ல விரும்புகிறோம், எங்களுடைய ஒற்றுமைக்கு ஜாதி ஒரு தடையாக இல்லை; இருக்க முடியாது. இன்றைக்கு இருக்கலாம் ஆனால் அந்த நிலைமையை நாங்கள் மாற்றுவதற்காக, முனைப்பான முறையிலே செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

எங்கள் பணி -  எங்களுடைய முயற்சி பல மடங்கு பெருகும். நிச்சயமாக இந்த முயற்சி பலமடங்கு பெருகி, அந்த முயற்சிகள் சிறு துளியில் இருந்து பெரும் வெள்ளமாக மாறி, இந்த மகத்தான கூட்டமைப்பு, இந்த பெரியார் இயக்கங்கள், முற்போக்கு திராவிடர் இயக்கங்கள், அதே போல மார்க்சிய இயக்கங்கள் ஜனநாயக இயக்கங்கள் அனைத்தும் இணைந்து, ஒரு மகத்தான சக்தியாக, இந்தியாவிலே - தமிழகத்திலே உருவெடுக்கப் போகிறது; அந்த மகத்தான சக்திக்கு முன்னால் சுனாமி அலையைப் போல, அந்த மகத்தான சக்திக்கு முன்னால் ஜாதிய சக்திகள், வீழப் போவது உறுதியிலும் உறுதி என்பதை நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

அத்தகைய மகத்தான ஜாதி ஒழிப்பு போராட்டத்திற்கு, ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களுக்கு, அதிலும் குறிப்பாக இன்றைக்கு தலித்துகளை தனிமைப்படுத்தி, ஆதாயம் தேடி குளிர்காய முனையும் தீய சக்திகளுக்கு எதிராக ஒரு மகத்தான களப்பணி ஆற்றுவதற்கு, நிச்சயமாக இடதுசாரி இயக்கம் தோள் கொடுக்கும்; இந்த மாநாட்டு தீர்மானங்கள் வலியுறுத்துவது போல பெரியார் இயக்கங்களோடு இணைந்து - ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து - முற்போக்கு இயக்கங்களோடு இணைந்து, இடதுசாரி இயக்கங்கள் - மார்க்சிய இயக்கங்கள் நிச்சயமாக சமூக மாற்றத்திற்கான போராட்டத்திலே, முன் வரிசையிலே நின்று தன்னுடைய கடமையைக் கட்டாயமாக நிறை வேற்றும்; அதை எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை கம்பீரமாக சொல்லி, அத்துகைய ஒன்றுபட்ட இயக்கங்களை எதிர் காலத்தில் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம் என்ற முறையில் உங்களோடு சேர்ந்து, நானும் சேர்ந்து, அறைகூவல் விடுத்து விடைபெறுகிறேன்.

உரை தொகுப்பு: கோகுல கண்ணன்

Pin It