குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், நாமக்கல் மாவட்ட செயலாளர் தமிழரசன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை அறிவுரைக் குழுமம் தள்ளுபடி செய்து, அவர்களை விடுதலை செய்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் ஒரு மாத காலத்தில் அறிவுரைக் குழுமத்தின் முன் கொண்டு வரப்பட்டு அவர்கள் அந்த சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பது சட்டத்தில் உள்ள விதியாகும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞர் அல்லாதவர்கள், இந்த ஆணையத்தின் முன் வாதாடுவார்கள். பொதுவாக அறிவுரைக்கு குழும நீதிபதிகள் அவர்களுக்கு அதிகாரம் இருந்தும்  அரசு ஆணையை ரத்து செய்வது இல்லை. வழமைக்கு மாறாக, இப்போது அறிவுரைக் குழுமமே குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதித் தமிழர் பேரவை தோழர் நாகராசன் சார்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் மற்றொரு தோழர் தமிழரசன் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சார்ந்த தோழர் கணேசனும் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஆணையம் முன் வாதுரைத்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று மதுரை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 43 பேரை முறையற்ற கைது என்று கூறி விடுதலை செய்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைதான இடிந்தகரை தோழர்கள் : கழகத் தலைவர் வாதுரை

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் பங்கேற்ற இடிந்த கரையைச் சார்ந்த முதியவர் லூர்துசாமி மற்றும் நசரேன் ஆகியோர் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவியுள்ளது. தோழர்கள் இருவரும் சென்னை அறிவுரைக் குழுமத்தின் முன் டிசம்பர் 3 ஆம் தேதி பிற்பகல் நேர் நிறுத்தப்பட்டனர். தோழர் லூர்துசாமி சார்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் நசரேன் சார்பாக முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயமும் வாதுரைத்தனர்.

Pin It