திராவிடர் இயக்கம் குறித்து ‘இந்தியா டுடே’ இதழுக்கு (மார்ச் 14) கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது. சில சிறு மாற்றங்களுடன் ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. இதழுக்கு அனுப்பிய முழுமையான கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம்.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றிலிருந்து திராவிடர் இயக்கத்தைப் பிரித்துப் பார்க்க இயலாது. இப்போது மீண்டும் திராவிடர் இயக்கம் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன. உண்மையில் ‘திராவிடர் இயக்கம்’ - அன்று சென்னை மாகாணத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு நீதி கேட்டு உருவானதுதான். தென்னாட்டில் அடங்கி யிருந்த கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை உள்ளடக்கி எழுந்தது அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உட்பட, பார்ப்பனரலலாதவர்கள் உரிமைக் குரல் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே தனி மனிதர்களின் குரலாக ஒலிக்கத் தொடங்கியது. 1909 ஆம் ஆண்டில் சென்னையில் புருஷோத்தம (நாயுடு), சுப்பிரமணியம் என்ற இரு வழக்கறிஞர்கள், பார்ப்பனரல்லாத மாணவர்களின் ‘கல்வி நலன் வாழ்வுநிலை உயர்வுக்கு’ பார்ப்பன ரல்லாத அரசு ஊழியர்களைக் கொண்டு ‘சென்னை அய்க்கிய சங்கம்’ என்ற அமைப்பை 1912 இல் தொடங்கினார்கள். இந்த அமைப்புதான் அதற்கு அடுத்த ஆண்டு டாக்டர் நடேசனார் மருத்துவ மனைத் தோட்டத்தில் நடைபெற்ற அதன் முதலாம் ஆண்டு விழாவில் ‘திராவிடர் சங்கம்’ (மெட்ராஸ் திராவிடியன் அசோசியேஷன்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி ஒரு பெயரை சூட்டும் ஆலோசனையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘மெட்ராஸ் மெயில்’ நாளேட்டில் (6.5.1909) வாசகர் ஒருவர் கடிதமாக எழுதியிருந்தார்.

தமிழர்களிடையே ‘திராவிடம்’ என்ற கருத்தி யலுக்கு வலிமை சேர்த்தவர், அயர்லாந்திலிருந்து மதத் தொண்டாற்ற தமிழகம் வந்து, தமிழ் மொழியைப் பயின்று, திராவிட மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஆய்வு நூலை 1856இல் எழுதிய கால்டுவெல் வடமொழியிலிருந்து தமிழ் மாறுபட்டது; அது தனித்து இயங்கும் ஆற்றல் கொண்டது என்ற மொழி ஆய்வையும், “திராவிடர் என்று அழைக்கப்பட்ட மக்கள் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களிடையே வந்து வாழத் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்திலேயே நாகரீக வாழ்வினராக இருந்தனர்” என்ற பண்பாட்டு ஆய்வையும் அவர் முன் வைத்தார்.

பார்ப்பனரல்லாதார் திராவிடர் அடையாளத் தோடு தங்களை அமைப்பாக்கிக் கொள்வதற்கான தேவை, அன்றைய வரலாற்றுச் சூழலிலிருந்து எழுந்தது. “மிகத் தொல் பழங்காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலம் வரை இந்தியாவின் சமுதாய நிலை மாற்றமின்றி தேக்க நிலையிலேயே இருந்தது” என்று இந்தியாவைப் பற்றி எழுதிய காரல் மார்க்ஸ், பிரிட்டிஷ் ஆட்சியின் தொழிற்சாலைகள் - ரயில் இணைப்பு போன்ற நடவடிக்கைகளால் சமுதாயத்தின் தேக்கம் உடையத் தொடங்கியது என்றார். இதுவே பார்ப்பனரல்லாதாரின் விழிப்புக் கும் எழுச்சிக்கும் அடித்தளமாகியது என்று கூறலாம்.

அன்றைய சென்னை மாகான சமூக நிலையை 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை இவ்வாறு படம் பிடித்தது. “ஒரு மனிதனின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை, பெயரை, உடையை, சாதியே தீர்மானித்தது.”

1911 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் இளம் கலைப் பட்டம்பெற்ற 15,209 பேரில் 10,269 பேர் பார்ப்பனர்கள்; முதுகலை பட்டம் பெற்ற 511 பேரில் 389 பேர் பார்ப்பனர்கள்; சட்டம் படித்த 54 பேரில் 48 பேர் பார்ப்பனர்கள்; பொறியியல் படித்த 160 பேரில் 121 பேர் பார்ப்பனர்கள்; 1498 ஆசிரியர் களில் 1094 பேர் பார்ப்பனர்கள். இந்த பின்னணியில் தோற்றமெடுத்ததே திராவிடர் இயக்கம். ‘திராவிடர் சங்கம்’ அரசியலமைப்பாக உருவெடுப்பதற்கு வித்திட்டது. அன்று அன்னிபெசன்ட் தொடங்கிய சுயாட்சி (ழடிஅந சுரடந) இயக்கம்; காங்கிரசில் இருந்து கொண்டே ‘ஸ்மார்த்த பிராமணர்களின்’ ஆதர வோடு, சமஸ்கிருத வளர்ச்சி, இந்துமதப் பிரச்சாரத்தை முன் வைத்து, ‘இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளத்தோடு அன்னிபெசன்ட் அரசியலில் களமிறங்கியதால் தங்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று அஞ்சிய பார்ப்பனரல்லாத தலைவர்கள் முதலில் ‘தென்னிந்திய மக்கள் சங்கம்’ என்ற பதிவு பெற்ற நிறுவனத்தைத் தொடங்கி, பிறகு அதன் சார்பில் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற அரசியல் கட்சியை 1916 இல் தொடங்கினர்; தேர்தல் அரசியலில் அக்கட்சி ஈடுபட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு உட்பட்ட இரட்டை ஆட்சி முறையின் கீழ் 1921 லிருந்து 1926 வரையிலும், 1930லிருந்து 1934 வரையிலும் இரண்டு முறை ஆட்சியிலிருந்தது அக்கட்சி. ‘ஜஸ்டிஸ்’ என்று அது நடத்திவந்த நாளேட்டின் பெயராலேயே அக்கட்சி ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று வெகு மக்களால் அழைக்கப்பட்டது. காங்கிரசு கட்சியும் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் ‘சுயராஜ்ய கட்சி’ என்ற பெயரில் தேர்தல் களத்துக்கு வந்தது. நீதிக்கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சமூகப் பிரிவினருக்கு அரசுப் பதவிகளில் ஒதுக்கீடு வழங்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம். அதுவரை தனியார், புரோகிதர் வசமிருந்த கோயில்களின் உடைமைகளை அரசு கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த இந்து அறநிலையத் துறை சட்டம். (அதன் பிறகு தான் கோயிலில் பக்தர்கள் குவித்த நிதி - மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது) சென்னை பல்கலைக்கழக சீர்திருத்த சட்டம்; ஆந்திர பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உருவாக்கம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்கள் கல்விக்காக தொழிலாளர் நலத்துறை உருவாக்கம்; தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர் பிற சமூகத்தினருடன் சேர்ந்து படிக்கும் திட்டம; கல்வி உதவித் தொகை; கட்டணச் சலுகை; தாய்மொழி வழிக் கல்வி என்று ஏராளமான சாதனைகளை செய்தது இந்த ஆட்சி.

அதிகாரத்துக்கு வந்த நீதிக்கட்சி நேர்மையாக ஆட்சி நடத்தினாலும், பல்வேறு முற்போக்கு சட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதில் இடம் பெற்றிருந்த தலைவர்கள், சமூகத்தின் மேல் மட்டத்திலிருந்த வசதிப் படைத்தவர்களாகவே இருந்தனர். அடித்தள மக்களிடம் அவர்களுக்கு தொடர்பில்லை. அன்று பொது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவே முடியாத வாழ்நிலையில், சாமான்ய மக்கள் இருந்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பல சட்டங்களைக் கொண்டு வந்தா லும், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையை எட்ட முடியாது. அவர்கள் வலிமையற்றவர் களாகவே இருந்தார்கள். 1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்தபோது நீதிக்கட்சி, தலைவர் பதவியை பெரியாரிடம் வழங்கியது. அதுவரை நீதிக்கட்சியில் பெரியார் உறுப்பினர் இல்லை. அக் கட்சியை கண்மூடித்தன மாகவும் பெரியார் ஆதரிக்கவில்லை. அவர் களிடையே நிலவிய உட்கட்சி சண்டைகளையும் சொந்த வாழ்க்கையில் பின்பற்றிய வைதீக கலாச்சாரங்களையும் பெரியார் சாடியே வந்தார். 1920 முதல் 1925 வரை 5 ஆண்டுகாலம் அவர் காங்கிரசில் தலைவராகவும் செயலாளராகவும் இருந்தாலும் கட்சிக்குள்ளே வர்ணாஸ்ரமத்தை எதிர்த்தும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரியும் போராடி வெளியேறினார்.

அவர் தொடங்கிய ‘குடிஅரசு’ வார ஏடு, பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சியிலிருந்து மாறுபட்ட பண்புக் கூறுகளைக் கொண்டிருந்தது. 1925 ஆம் ஆண்டு முதலே அவர் சுயமரியாதைக் கொள்கைகளை பரப்பி வந்தாலும், 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டிலே கூட்டிய முதல் மாநாட்டுக்கு சமூகத்தின் கீழ் மட்டத்தில் உழலும் பல்வேறு மக்கள் பிரிவினர், காங்கிரஸ், நீதி கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள், பெண்கள், கணவனை இழந்தவர்கள் என்று பல்வேறு பிரிவினரும் திரண்டனர் என்று ‘குடிஅரசு’ பதிவு செய்துள்ளது. மதம், சாஸ்திர புராண எதிர்ப்பு, வர்ண பேத எதிர்ப்பு, சாதி தீண்டாமை எதிர்ப்பு, சாதிப் பட்டங்களைக் கைவிடுதல், தாய்மொழி வழிக் கல்வி, கட்டாய பெண் கல்வி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை வசதியுடன் கட்டாயக் கல்வி, பெண்களுக்கு சொத் துரிமை என்று அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அன்றைய காலகட்டத்தில் சமுதாயத்துக்கு அதிர்ச்சியூட்டியவைகளாகவே இருந்தன. 10 ஆண்டுகால சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக நீதிக்கட்சித் தலைவர் பதவி பெரியார் தோள் மீது வந்து விழுந்தபோது, மிட்டா மிராசுதார்களின் கட்சியை வெகு மக்கள் கட்சியாக மாற்ற முயன்றார்.அப்போது உருவானதுதான் ‘திராவிடர் கழகம்’. நீதிக்கட்சித் தலைவர்களின் ‘பிரபுத்துவ’ பண்புக் கூறுகளை ஏற்க மறுத்தது திராவிடர் கழகம். பிரிட்டிஷ் ஆட்சி வழங்கிய ‘சர்’, ‘ராவ்பகதூர்’ பட்டங்களைத் துறக்க வேண்டும்; பெயருக்குப் பின்னால் சாதியைப் போடக்கூடாது; தேர்தல் அரசியலிலிருந்து விலக வேண்டும் என்ற தீர்மானங்கள் சுயமரியாதை இயக்கப் பாதையிலேயே பெரியார் பயணத்தை விளக்குகிறது. சாதி எதிர்ப்பு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெண்ணடிமை எதிர்ப்பு, பகுத்தறிவு சிந்தனை - அதற்கு எதிரான மத மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு என்ற வழியில், நடைபோட்டதுதான், திராவிடர் இயக்கம்!

பெரியார் காங்கிரசிலிருந்து விலகியதும்; சுயமரியாதை இயக்கம் கண்டதும்; நீதிக்கட்சியை ஆதரித்ததும்; விமர்சித்ததும்; அக்கட்சியில் பண்பு மாற்றத்தை உருவாக்கியதும் கொள்கையின் அடிப்படையில்தான். ஆனால், 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தபோது கொள்கை மாறுபாடுகளை முன்வைக்கவில்லை; பெரியாரின் திருமணம் முன் வைக்கப்பட்டது.பெரியார் இனத்தின் அடிப்படையில் தொடங்கிய இயக்கம் (திராவிடர்) நிலத்தின் அடிப்படையிலான (திராவிட) கழகமாகியது. தேர்தல் அரசியலை நோக்கி தி.மு.க. பயணப்பட்டதால், பெரியார் இயக்கத்தின் கொள்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக கை நழுவி, ‘இடஒதுக்கீடு’ கொள்கை ஒன்று மட்டுமே எஞ்சி நிற்கும் நிலை!

அதிகாரத்தில் இருந்த மற்றொரு கட்சியான அ.இ.அ.தி.மு.க. வைதீக எதிர்ப்பு, சாதி மத மூடநம்பிக்கை எதிர்ப்புகளையே முழுமையாக கைவிட்டு, இந்துத்துவ கட்சியாகி இடஒதுக்கீடு கொள்கை ஒன்றை மட்டுமே வைத்திருக்கிறது. தலைமையும் பார்ப்பனரிடம் வந்துவிட்டது.

பெரியார் கொள்கையின் நேரடியான எதிரிகளாக பா.ஜ.க.வுடனும், காங்கிரசுடனும் அரசியல் அதிகாரத்துக்காக கைகோர்க்கும் திராவிட கட்சிகளை திராவிடர் இயக்கத்தின் முழுமையான வழித் தோன்றல்களாகக் கருத முடியுமா என்ற கேள்வி எழவே செய்கிறது.

தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார், ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை ஆரிய எதிர்ப்புக்காக முன் வைத்தார். கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை ஒருங்கிணைக்கும் ‘திராவிட’த்துக்காக அவர் இயக்கம் நடத்தவில்லை. ‘திராவிடர்’ என்ற அடையாளத்துக்குள் உரிமை பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய, கிறிஸ்தவப் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என்று அவர் கருதினார். ‘திராவிடர்’ என்பது வடமொழிச் சொல் என்பது தனக்குத் தெரியும் என்றும், அதற்கு மாற்றாக பார்ப்பனிய எதிர்ப்பைக் குறிக்கும் குறிச்சொல் ஏதாவது இருந்தால், எவராவது கூறினால், ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார். தாம் இனத் தூய்மைக்காக ‘திராவிடர்’ உரிமை பேசவில்லை என்று கூறிய பெரியார், சமூக ஒருங்கிணைப்புக்கு தடையாக நிற்கும், ‘இழிவுகளை’ வேதங்களை எதிர்ப்பதற்காகவே என்று தனது நிலையை விளக்கினார். இப்போது சிலரால் திராவிடக் கட்சிகளின் மீதான குறைகளை திராவிடர் இயக்கத்தின் குற்றங்களாக்கி விமர்சிக்கப்படுகிறது. திராவிடர் இயக்கம் முன் வைத்த சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பகுத்தறிவு, பெண்ணுரிமை மற்றும் தேசிய இன உரிமை என்று திராவிடர் இயக்கக் கொள்கைகளை கைவிட்ட திராவிட கட்சிகள், எப்படி திராவிடர் இயக்கமாக முடியும்? திராவிடர் இயக்கம் பேசிய இந்தக் கொள்கைகள் தான் தமிழ்நாட்டையும், தமிழர்களையும் சீரழித்துவிட்டதா என்ற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.

பெரியார் தொடங்கிய காலத்தில் உள்ள சமூகம், உலக ஒழுங்கு இப்போது இல்லை. உலகமயமாக்கல் கொள்கையினால் பன்னாட்டு நிறுவனங்கள், அரசியல், பொருளாதார அதிகாரங்களோடு வலம் வருகின்றன. பண்பாட்டு தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. இவைகளுக்கு முகம் கொடுப்பது அவசியமாகிறது. சாதியத்தின் ஒடுக்குமுறை வடிவங்கள் மாறினாலும், சாதியமைப்பு நீடிக்கிறது. பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் சமூக நீதியை மறுக்கின்றன. தேசிய இனங்களில் பிரச்சனைகள் கூர்மையடைந்து வருகின்றன. மதவாத அரசியல் வலிமையடைகிறது. பெரியார் கண்ட திராவிடர் இயக்கம் முன் வைத்த கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் தேவைகளையுமே, இவை உணர்த்தி நிற்கின்றன.

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் 1.03.2012

Pin It