ஜப்பான் அரசு நியமித்த அமைச்சரவைக் குழு, அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அணுமின் நிலையத்தை முழுமையாக மூடிவிட்டு, படிப்படியாக மாற்று மின் உற்பத்தியைத் தொடங்க பரிந்துரைத்தது- ஆலோசனையை ஜப்பான் அரசு ஏற்றுக் கொண் டுள்ளது. செத்த மிருகங்களின் சிதைவுகளைப் பயன்படுத்தி மாற்று எரிசக்தியைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாறாக, ஜப்பான் நாடாளுமன்றக் குழு, புக்குஷிமா விபத்துக்காக அணுமின் உற்பத்தியைக் கைவிட தேவையில்லை என்று தெரிவித்த பரிந்துரையை ஜப்பான் அரசு ஏற்க மறுத்துவிட்டது. ஜப்பான் நாடாளுமன்றக் குழு அணுஉலை தயாரிப்பு நிறுவங்களின் செல்வாக்கால், இப்படி ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. 40 ஆண்டுகள் மட்டுமே ஒரு அணுஉலையின் ஆயுட்காலம். ஆயுள் முடியும் அணுஉலைகளை புதுப்பிக்க வேண்டாம் என்று ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. 2012 மே மாதத்தில் 50 அணுமின் நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளன. ஜூலை மாதம் 2 அணுமின் உலைகள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. 2030 ஆம் ஆண்டுடன் அணுமின் நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்று ஜப்பான் பிரதமர் யோஷிக்கோ நோடோ அறிவித்துள்ளனர்.

அணுமின் உற்பத்தியை மட்டுமே முழுமையாக சார்ந்துள்ள பிரான்சு நாடும், 2025 ஆம் ஆண்டுக்குள் 75 சதவீத அணுமின் உற்பத்தி நிலையங்களை 50 சதவீதமாகக் குறைக்கப் போவதாக அந்நாட்டின் அதிபர் பிரான்கோய்ஸ் ஆலன்டே தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரை இது அதிரடியான முடிவு. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளும் அணுமின் தயாரிப்பை நிறுத்தப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. ரஷ்யாவில் செர்னோபில் விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களை அதிகமாக மூடியவை ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளாகும். பெல்ஜியம், இத்தாலி, பிரான்சு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் அணுமின் உலைகளுக்கு எதிராக உறுதியான முடிவெடுத்துவிட்டதால் அணுஉலை தயாரிப்பு நிறுவனங்கள், அணுஉலைக்கு ஆதரவான இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளன. சர்வதேச அணுசக்திக் கழகம், அணு உலை விற்பனைக்கான சந்தை பற்றி கவலைப்படுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு என்ற அமைப்பின் கீழ் உள்ள நாடுகள் புதிதாக அணுமின் உலைகளை நிறுவுவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.

- டி.பி. சீனிவாசன் (சர்வதேச அணுசக்திக் கழக முன்னாள் இந்திய பிரதிநிதி) ‘எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் எழுதிய கட்டுரையிலிருந்து (செப்.19)

Pin It