தமிழ் மன்னர்கள் நடத்தியது மனுதர்ம அடிப்படை யிலான பார்ப்பன ஆட்சியே என்பதையும் மனு சாஸ்திரம் எரிக்கப்படவேண்டும் என்றும் மறைந்த பெரியாரியலாளர் வழக்கறிஞர் கரூர் பூ.அர. குப்புசாமி எழுதிய கட்டுரையை இன்றைய பொருத்தம் கருதி வெளியிடுகிறோம். அவர் 1985 இல் வெளியிட்ட ‘மன்னர்களும் மனுதர்மம்’ நூலில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.

நம் அப்பாவி மக்கள் ஏதோ மறைந்துபோன ஒரு நூலை - மனுதர்மத்தை - ஏன் இப்போது கொளுத்த வேண்டும் என்பதாக நினைக்கக்கூடும்.

ஆனால், இன்றைய சமூக அமைப்பு, நடை முறைகள், நம்பிக்கைகள், நல்லது கெட்டது பற்றிய உணர்வு, ஏன் ஊர் அமைப்புக்கூட தர்மசாத்திரங்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனிய ஏற்பாடுகளின் படி நாடாண்ட மன்னர்கள் பல நூற்றாண்டு கால மாக சமூகத்தின் மீது பலாத்காரமாகத் திணித்து நிலை நாட்டியவை என்பதை அவர்கள் அறிய மாட் டார்கள். நிலைநாட்டிவிட்ட பிறகு அவை இன்று இயல்பாகத் தோன்றுகின்றன - அவ்வளவு தான்.

சாமான்ய மக்கள்கூட ‘மனுநீதி தவறாத ஆட்சி’ என்ற சொற்றொடரைத் தங்கள் பேச்சில் பயன் படுத்துவதைக் காணலாம்.

மனுநீதிச் சோழன் கதை இக்கருத்தைப் பிரபலப்படுத்தவே பரப்பப்பட்டு வந்தது.

நாம் விடை காண வேண்டி விசயங்கள் ஏராளம்.

• இந்த நாட்டில் மட்டும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏன்?

• இங்கு மட்டும் தீண்டாமை ஏன்?

• உடன்கட்டை ஏன்?

• நால்வருணம் ஏன்? அதற்குச் சட்ட சம்மதம் ஏன்?

• இன்று வரை (பகிரங்கமாக) இரத்தக் கலப்பு ஏற்பட மறுக்கும் சமூக அமைப்பு எப்படி வந்தது?

• சட்டப்படியான இந்துமதத் தலைவர்களான சங்கராச்சாரிகள் “தீண்டாமை என் பிறப்புரிமை” எனவும், “வருணாசிரம தருமத்தைக் காப்போம்” எனவும் சட்டவிரோதமாகவே பேசி வரவும், செயல் படவும் உரிமை எப்படி வந்தது? அவர்களின் தரிசனத்துக்கு; மாநில, மத்திய அமைச்சர்கள் பிரதானிகள் நத்திக்கிடக்க வேண்டிய அளவு ஆதிக்கம் அவர்களுக்கு எப்படித் தொடர்கிறது?

• கத்மாண்டுவில் (நேபாளம்) மத மாநாடு கூட்டி “இந்து மதத்தின் உயிர்க் கொள்கைகளான ‘கர்மம்’, ‘கர்ம பலன்’, ‘மறு பிறப்பு’ ஆகியவை களைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய தீர்மானம் போடும் திமிர்த் தண்டத் தன்மை இன்னும் எப்படித் தொடர்கிறது?

• நாத்திகப் பிரச்சாரம் சட்ட சம்பந்தம் இல்லாமல் இருப்பதேன்?

• மூடத்தனத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான சுவாமிகள், புட்டபர்த்திகள், மகேஷ் யோகிகள் மலியக் காரணம் என்ன?

• தேசியத் தலைவர்கள் எல்லாம், சோசியக் கும்பலின் சொல் கேட்டு ஆட்சி நடத்தும் அவலம் ஏன்?

• இந்திய அல்லது தமிழ்ச் சமுதாயம் ஒரு தேசிய சமூகமாக மலராமல் சாதிகளாகப் பிரிந்து சிதறுண்டு தவிக்கும் தன்மை ஏன்?

• கோடிக்கணக்கான மக்கள் தங்களை வாட்டும் வறுமையை இயல்பாக ஏற்றுக் கொண்டிருக்கும் இயற்கை விரோத மனநிலை ஏன்?

• தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் கொடியோர் களையே வணங்கும் அப்பாவித்தனம் மக்களிடையே நிலவக் காரணம் என்ன?

• மக்கள் தங்களை ஏய்ப்போருக்கே ஏவல் செய்யும் இளிச்சவாய்த்தனம் எப்படி வந்தது?

• வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் வெற்றுச் சடங்குகளாக கோடானுகோடி மக்கள் வதியக் காரணம் என்ன?

• கஞ்சி குடிப்பதற்கிலார் - அம்மக்கள் அதன் காரணங்கள் எவை எனும் அறிவுமிலாச் சென்மங்களாகக் காலங் கழிக்கும் நிலை ஏன்?

இவற்றிற்கும் இவை போன்ற எண்ணிறந்த கேள்விகளுக்கும் விடை காண்பது ஒன்றும் சிரமம் இல்லை. கொஞ்சம் முயற்சித்து நம் வரலாறுகளை, நம் இலக்கியங்களை, வேதங்களுக்கு நியாயம் கற்பிக்கும் தத்துவங்களை, சமுதாய நடை முறைகளை, பழமொழி களை அன்றாட வாழ் வில் நடக்கும சடங்கு சம்பிரதாயங்களை... ‘இதைச் செய்; அதைச் செய்யாதே!’ எனப் பெரியவர்கள் இடும் கட்டளைகளை எல்லாம் சற்று உற்று நோக்கி ஆய்ந்து அறிந் தால் அனைவருக்கும் விடை கிடைக்கும்.

இன்றுள்ள சமூக அமைப்பு திடீரென ஏற்பட்டதல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூணூல் பூசாரிக் கூட்டமும், புவியாண்ட மன்னர்களும் கூட்டுச் சேர்ந்து செய்து, எதிர்ப்பாளர்களை எல்லாம் வெட்டிச் சாய்த்து சமூகத்தின் மீது திணித்து நடைமுறையாக்கிவிட்ட ஒன்று ஆகும்.

நம் மூளைக்குள் உள்ள எண்ணங்கள், இயல்புகள எல்லாம் பல நூறு தலைமுறைகளாக உள்ளே ஏற்றப்பட்டவை ஆகும்.

அத்தகு திட்டமிட்ட சதி முயற்சியின் பலனையே இன்று நாம் அனுபவிக்கிறோம். எனவே திட்டமிட்டு முயற்சிக்காமல் அவைகளை மாற்ற முடியாது.

பால்வினை நோயுள்ள பெற்றோர்களின் குழந்தைகள் பலவித நோய்களுக்கும், அவதிகளுக்கும் ஆளாவதுபோல், இன்றைய சமூகம் நேற்றைய சமுதாய தலைவர்களின் குற்றங்களின் பலனை அனுபவிக்கிறது.

நம் மன்னாதி மன்னன் எவனுக்கும் சட்டம் செய்யும் உரிமை இருந்ததில்லை. இது இந்திய அரசியல் கொள்கை. அவன் தர்ம சாஸ்திரங்களின் கட்டளைகளை சமூகத்தில் நிறைவேற்றும் ஒரு கருவி மட்டுமே. அண்ணா ‘சிவாஜி கண்ட இந்துராச்சியம்’ எப்படிப்பட்டதென்பதை விளக்கினார். ‘இந்து ராச்சியத்தில்’ எல்லா மன்னர்களும் சிவாஜிகளே! இநதப் பொது விதிக்குத் தமிழ் மன்னர்கள் மட்டும் விதிவிலக்கல்ல!

சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மக்கள் வைதீக மத நாகம் தீண்டாத நிலையில் இருந்தனர். மன்னர்கள் ஓரிருவர் மட்டும் ஆரியப் பார்ப்பனர் வலையில் விழுந்து வந்தனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகளும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிகளும் பெருகத் தொடங்கினர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியர்கள் அருகத் தொடங்கினர். ‘அறவிலை வணிகன் ஆய் அலன்’ என மார்தட்டிய ‘ஆய்’ போன்ற குறுநில மன்னர்கள் குறைந்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார்கள் பெருகினார்கள். மெல்ல மெல்ல இம்மன்னர்கள் துணையோடு புரோகிதக் கூட்டம் மக்களின் அன்றாட வாழ்வின் நடைமுறைகளை மதம் சார்ந்ததாக மாற்றுவதில் வெற்றிப்பெற்று வந்தனர். எதிர்ப்புகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டன. குரூரமான கழுவேற்றம் அன்றாட நிகழ்ச்சியாகியது. மாற்றுக் கருத்தினர் நூல்கள் நீரிலும் நெருப்பிலும் இடப்பட்டு அழிக்கப்பட்டன. மெல்லத் தமிழ்ச் சமுதாயம் ஆரிய மத கருத்துக்கள்பால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது.

இவ்வளவுக்கும் மத்தியில் கரூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டுவந்த இரும்பொறை மன்னர் வம்சத்தார் மட்டும் சமணத்தை ஆதரித்து வந்த அரிய காட்சியை கி.பி.3 ஆம் நூற்றாண்டு வரை பார்க்கிறோம்.

பின்னர், தமிழகத்தை ஆண்ட மாமன்னர் முதல் குறுநில அதிபர் வரை அனைவருக்கும் இடையே மனு தர்மத்தை மக்கள் மத்தியில் நிலைநாட்டுவதிலே ஒருவித வெறித்தனமான போட்டியே இடை விடாமல் இருந்து வந்திருக்கிறது. அவர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும் இந்தச் செய்தியை விரித்துரைக்கின்றன.

• மாரவர்மன் சுந்தரபாண்டியன் ‘மனுநெறி தலைப்ப மணிமுடி சூடி’ ஆள்கிறான் என அவன் மெய்க்கீர்த்தி பறைசாற்றுகிறது. (பதிவு செய்யப்பட்ட ஆவணம்) மேலும்,

“நால்வகை வேதமும் நவின்றுடன் வளர

அய்வகை வேள்வியும் செய்வினை இயற்ற

அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ” -

ஆண்டிருக்கிறான் அவன்; விட்டானா அதோடு?

சமயமும் நீதியும் தருமமும் தழைக்க...

கடவுள் வேதியர் அருந்தொழில் வேள்விச்

செங்கனல் வளர்ப்ப!....

தன் ஆட்சியை நடத்தி இருக்கிறான்.

• குலசேகரப் பாண்டியனோ, “முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுதும் எத்தவச் சமயமும் இனிதுடன் விளங்க” இறைமாட்சி நடத்தி இருக்கிறான்.

• சோழர்கள் என்ன பாண்டியர்களுக்கு இளைத்தவர்களா?

“ஒப்பரிய மறைநூலும் உரை திறம்பா மனுநூலும்

செப்பரிய வடகலையும் தென்கலையும் தலையெடுப்ப

நீதிதரு குலநான்கும் நிலைநான்கும் நிலைநிற்ப

ஆதியுகம் குடிபுகுத அறு சமயம் தழைத்தோங்க”

மூன்றாம் இராசராச சோழன் ஆட்சி நடத்தியிருக்கிறான்.

• முதலாம் இராசாதிராசன் “விளங்கு மனுநெறி அசுவமேதஞ் செய்து” பரிபாலனஞ் செய்திருக் கிறான். இராச மகேந்திர சோழனோ, “தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய”மன்னனாகத் தன்னை மார்த்தட்டி அறிவித்துக் கொள்கிறான்.

முதலாம் குலோத்துங்கன் ‘மனுவாறு பெருக’ மக்களை ஆள்வதாக மகிழ்ச்சியோடு அறிவிக்கிறான். விக்கிரமச் சோழனோ “மனுநெறி வளர்த்து” நாடாள்வதாக நாப்பறை அடிக்கிறான். இரண்டாம் குலோத்துங்கனோ ‘மனுவாறு விளங்க’ செங்கோல் செலுத்துவதாகச் செம்மாந்து கூறுகிறான். இரண் டாம் இராசராசன் “மனுவாணை தனி நடாத்தி” மக்களைப் புரந்ததாகப் பெருமை கொள்கிறான். இரண்டாம் இராசாதிராசன் “அமைவில்லா மனுவொருக்க ஆதியம் பாடி நிலைநிற்க” அகிலத்தை ஆண்டதாக அறைந்து கூறுகிறான். மூன்றாம் குலோத்துங்கன் “மனுவின் நெறி தழைத்தோங்க”, “செயல் வாய்ந்த மனுநூலும்” - பெருக கோ லோச்சினான் என அவன் மெய்க்கீர்த்தி விளக்குகிறது. மூன்றாம் இராசராசன் “பொருவில் மனுநெறி வாழ பொன் மகுடம் கவித்தருளி” புரோகிதக் கூட்டத்திற்கு பொழுதளந்து சேவை செய்திருக்கிறான்.

இப்படி ஆயிரமாயிரம் அரசாணைக் கல் வெட்டுக்களை நாடெங்கும் பார்க்கக் காணலாம்.

‘இதில் அரசியல்’ பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என அந்த மன்னாதி மன்னர்களை மருள வைத்திருக்கிறார்கள் சனாதினிகள் (பழமைவாதிகள்).

வேதபுரியினர் இட்ட கட்டளைப்படி அவரவர்க்கு ஒரு குலத்தொழில் விதித்து அதை மீறுவோர்க்கு கொடும் தண்டனையும் வழங்கி உள்ளார்கள். சாதி ஆச்சாரத்தை நிலைநிறுத்தும் பொறுப்பை பிரமதேய (அக்கிரகார) சதுர்வேதி மங்களங்களின் ஊர்ச் சபைகளே ஏற்றிருந்தன. பார்ப்பனர் அக்ரகாரத்தில் தனித்து வாழ்வதை அரசர்கள் பெருமையோடு காத்து வந்தனர். அவர்களுக்கு மானியங்களாக இறையிலி நிலங்கள்; பாரத விருத்தி, பட்ட விருத்தி, வேத விருத்தி, புராண விருத்தி, தேவதாயம் - இப்படி எத்தனையோ பெயர்களில் அவர்களுக்கு நாட்டிலுள்ள நல்ல நிலங்களை எல்லாம் தாரை வார்த்தார்கள். 

இடையில் வந்த ‘களப்பிரர்கள்’ அந்த நிலங்களை பிடுங்கி உழவர்க்கு கொடுத்தனர். ஆனால், அவர்களை ஒழித்துக் கட்டி மீண்டும் வந்த மனுநீதி தவறா தமிழ் மன்னர்கள் திரும்பவும் உழவர்களிடமிருந்த நிலங்களைப் பார்ப்பனரிடமே சேர்த்து விட்டனர் என்பதற்கும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கிராம சபையாரும் அரசு அதிகாரிகளும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க நேரும்போது எழும் அய்யப்பாடுகளை சாத்திரங்களின் வல்லுன ரான பட்டர் பெருமக்களிடம் கேட்டுத் தெளிந்து அவர்களின் கருத்திற்கேற்பவே தீர்ப்பு வழங்கி வந்தனர்.

Pin It