மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் நடத்திய சித்திரைப் பவுர்ணமி நாள் விழாவில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு முன்னிலையில், “வன்னிய சாதிப் பெண்களை எவராது கலப்பு திருமணம் செய்தா தொலைச்சுப்புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.

ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் தனக்கான உரிமைகளைக் கோரும்போது இப்படி சாதி வெறி பேசுவது மிக மோசமான பார்ப்பனியத்தை உறுதிப்படுத்தும் பேச்சாகும். மக்கள் தொலைக் காட்சி ஒளிபரப்பிய அந்த நேரடி நிகழ்ச்சியில் குருவின் பேச்சை பலரும் கேட்டார்கள். ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகையும் (மே 13) இவ்வாறு வெளியிட்டுள்ளது:

“நம் இனத்துப் பெண்களைப் பலாத்காரம் செஞ்சு கலப்புத் திருமணம் செய்றாங்க. நாம எச்சரிக்கையா இருக்கணும். நம்ம சாதியில்தான் நாம கல்யாணம் செய்யணும். எவன்டா சாதிய ஒழிச்சான்? நான் வன்னியர் சங்கத் தலைவர் சொல்றேன். யாராவது எங்க பொண்ணுங்களுக்கு கலப்புத் திருமணம் செஞ்சு வைச்சா... தொலைச்சுப் புடுவேன்” என்று மிரட்டியுள்ளார்.”

காடுவெட்டி குருவின் பேச்சு, மருத்துவர் ராமதாசுக்கு உடன்பாடுதானா என்று கேட்க விரும்புகிறோம்.  இதுதான் மருத்துவர் பேசிவரும் தமிழினத்துக்கான அடையாளமா? இப்படிப்பட்ட சாதிவெறிக் குரல்கள் தமிழகத்தில் தலைதூக்குவது சமூகத்தை எங்கே கொண்டுபோய் சேர்க்கும்?

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு பழ. கருப்பையா என்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் அதே சாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும். அந்த சாதிக்கென்று சில தனித்த பண்புகள் உண்டு. அதைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.

ஒவ்வொரு சாதியும் அந்த சாதியின் தர்மத்தைக் கட்டிக் காப்பதையே கொள்கையாகக் கொண்டிருந் தால் இந்த சமூகத்தினர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் வந்திருக்க முடியுமா என்று கேட்க விரும்புகிறோம்.

மருத்துவர் ராமதாசு, பழ கருப்பையா போன்றவர்கள் திராவிட இயக்கம் தான் நாட்டைக் கெடுத்தது என்று பேசி வருகிறார்கள். திராவிட எதிர்ப்பு என்பது, சாதி, சாதிச் சடங்கு, சாதி தர்மப் பாதுகாப்பில்தான் அடங்கியிருக்கிறதா?

திராவிடர் இயக்கம் எதிர்த்துப் போராடிய சாதி பார்ப்பனிய இழிவுகளை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்களா?

இவை நவீன ‘மனுதர்மக்குரல்’ தான். மனுதர்ம சிந்தனைகளுக்கு எதிராக மனுதர்ம நூலின் பரப்புரைக்கு தடை போடக் கூறி அதற்குத் தீயிடும் போராட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

அப்போராட்டத்தின் நியாயங்களையும் அவசியத்தையும், காடுவெட்டி குரு, பழ. கருப்பை யாவின் பேச்சுகள் உறுதிப்படுத்துகின்றன. ‘தமிழினப் போராளி’யாக போற்றப்படும் மருத்துவர் ராமதாசு இத்தகைய கருத்துகளை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

மருத்துவர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து தனது கருத்தை விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

Pin It