தந்தை பெரியார் - தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன், ஒத்த சிந்தனைகளைத் தொகுத்து ‘தந்தையும் தம்பியும்’ என்ற நூலை நாளந்தா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலின் வெளியீட்டு விழா 2.12.2011 மாலை சர். பி.டி. தியாகராயர் அரங்கில் நடந்தது. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் வை.கோ. நூலை வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நூலைப் பெற்றுக் கொண்டு உரையாற்றினர். இயக்குநர் தமிரா அனைவரையும் வரவேற்றார். பதிப்பாசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றி கூறினார். அவர் நூலின் அணிந்துரையில் எழுதியுள்ளதன் ஒரு பகுதி:

“சென்னை ராஜதானியின் முதலமைச்சராக நீங்கள்தான் அமர வேண்டும் என்று இரண்டு முறை பெரியாருக்கு ஆசை வார்த்தைக் காட்டினார் ராஜாஜி. “பார்ப்பானும் சூத்திரனும் இல்லாமல் ஒழிந்த காலத்தில் வேண்டுமானால் பதவியைப் பற்றி நாம் யோசிப்போம்” என்று மறுதலித்தார் பெரியார். டெல்லி அசோகா விடுதியின் தனி அறையில் பிரதமர் ராஜீவின் தூதுவர்களாக வந்தவர்கள். ‘வடகிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக உங்களை ஆக்குகிறோம். நீங்க  இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுங்கள்’ என்று சொன்னபோது, “இந்த முதலமைச்சர் பதவிக்காக இத்தனை உயிர்களை நாங்கள் பலியிடவில்லை. தமிழரின் பூர்வீக தாயகத்தை தனி நாடாக ஆக்கினால் மட்டுமே ஏற்பேன்” என்று நிராகரித்தவர் பிரபாகரன். “எல்லாப் பதவிகளும் நாம் துப்பிப் போட்ட தாம்பூலங்கள்” என்றவர் பெரியார். “தமிழீழம் கிடைத்தால் அப்போது சமூக சேவகனாக குழந்தைகள் காப்பகத்தை நடத்திக் கொண்டிருப்பேன்” என்றவர் பிரபாகரன்! ‘தந்தையும் தம்பியும்’ என்ற புத்தகத்தை உருவாக்க இதைவிட என்ன பொருத்தம் வேண்டும்?

“ஜனநாயக” நாட்டில் பெரியார். ஜனநாயகம் முழுமையாக  செத்துப் போன நாட்டில் பிரபாகரன். இரண்டு பேருமே வீட்டைவிட்டு ஓடிப் போனவர்கள். சொந்த நாட்டு அரசாங்கத்தால் உதாசீனப்படுத்தப்பட்டவர்கள். பெரியாரை, எடுத்ததற்கெல்லாம் கைது செய்தது இங்குள்ள அரசு. பிரபாகரனை அந்த நாட்டு அரசு பிடிக்கவே முடியவில்லை. ‘நான்சென்ஸ்’ என்று பெரியாரை விமர்சித்தார் பிரதமர் நேரு. ‘டெரரிஸ்ட்’ என்று பிரபாகரனை உருவகப்படுத்தினார் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா. எல்லாவிதமான போராட்டங்களையும் நடத்தினார் பெரியார். எல்லா விதமான படைகளையும் வைத்திருந்தார்பிரபாகரன். யாராலும் இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியவில்லை. இருவருமே கட்சியை, அமைப்பை நடத்துவதில் ‘சர்வாதிகாரிகள்’ என்று சொல்லப்பட்டனர். ஆனால், கறார் மனிதர்களாக மட்டுமே இருந்தனர். பொது வாழ்க்கையில் நாணயக் குறைவாக மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் அப்பழுக்கற்ற மனிதனாக வலம் வந்தார் பெரியார். பிரபாகரனுக்கு ஆன்டன் பாலசிங்கத்தின் மனைவி கொடுத்த சான்றிதழ் ஒன்று போதும். அது இந்தப் புத்தகத்தில் இருக்கிறது!

உலகத்தின் அத்தனை சீர்திருத்தவாதிகளும், “நான் சொல்வதுதான் சரியானது” என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரியார் மட்டும்தான், “நான் சொல்வது என் அறிவுக்கு மட்டுமே சரியானது. தவறாக இருந்தால் என்னிடம் வாதம் செய்யுங்கள். தவறு என்றால் என்னிடம் எதிர்த்து நில்லுங்கள்” என்று சொன்ன வார்த்தைப் புரட்சிக்காரன்! உலகத்தின் எத்தனையோ போராளித் தலைவர்கள், “என்னுடைய லட்சியத்தில் இறுதி வரை உறுதியாக இருப்பேன். மரணத்தைக்கூட வெல்வேன்” என்றே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பிரபாகரன் மட்டும் தான், “தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் விலகினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்” என்று தீர்ப்பளிக்கும் உரிமையை தனக்குப் பக்கத்தில் இருப்பவனிடமே கொடுத்த மாவீரன்!

அறிவுத் துறையின் அஞ்சாமை பெரியார் என்றால், ஆயுத வழியின் கம்பீரம் பிரபாகரன். இரண்டையும் இணைக்கும் அறிவாயுதமே இந்தப் புத்தகம்! காலம் தனக்குத் தேவையானதை இதில் இருந்து தேர்வு செய்யட்டும்! - என்று அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It