கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடக் கோரி இடிந்தகரை கிராமத்தில் போராடி வரும் மக்களுக்கு, கழக சார்பில் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், நவம்பர் 5 ஆம் தேதி காலை 11 மணியளவில் இடிந்தகரைப் பகுதியில் போராட்டம் நடத்தும் மக்களை சந்தித்தனர். நாகர்கோயில் கழகக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நாளில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. தலைமையில் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடந்தது. கழகத் தலைவர், பொதுச் செயலாளரை வை.கோ வும் போராட்டக் குழுவினருடன் வரவேற்றனர். தொடர்ந்து அணுமின் நிலைய ஆபத்துகளை விளக்கி, கழகத் தலைவர், பொதுச் செயலாளர் உரையாற்றினர்.

அணுஉலை ஆபத்துகளை எதிர்த்து மக்கள் நடத்தும் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழகம் முழு ஆதரவை வழங்கும் என்று உறுதி தெரிவித்து உரையாற்றினர். அதை மக்கள் பலத்த கரவொலி செய்து வரவேற்றனர். ஒன்றரை மணி நேரம் போராட்டப் பந்தலில் இருந்துவிட்டு விடை பெற்றனர். கழக ஆலோசனைக் குழு உறுப்பினர் தூத்துக்குடி பால். பிரபாகரன், கன்னியாகுமரி மாவட்ட கழக அமைப்பாளர் வழக்கறிஞர் சதா, கழகத் தோழர் பிலிஸ்து, தூத்துக்குடி மாநகர கழக செயலாளர் அறிவழகன்  ஆகியோர் உடன் வந்தனர்.

அண்ணா நூலகத்தை சீர்குலைப்பதா? கழகம் கடும் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை சீர்குலைக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முடிவை கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்ணாவுக்கும், அறிவுத் துறைக்கும் இழைத்துள்ள மாபெரும் அவமானமாகும். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய கழகம் வலியுறுத்துகிறது! சமச்சீர் கல்வியில் கை வைத்துப் பெற்ற அவமதிப்பை இதிலும் பெற வேண்டுமா?

குமரி மாவட்டத்தில் கழகம் உதயம்

குமரி மாவட்டத்தில் பெரியார் திராவிடர் கழக அமைப்புக் கூட்டம் அக்,2, 2011 அன்று நாகர்கோவிலில் நடந்தது. தலைமை ஆலோசனைக்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வழக்கறிஞர் சதா, மார்த்தாண்டம் ஜெபக்குமார், குலசேகரம் சேவியர், நெல்லை மாவட்ட செயலாளர் காசிராசன், தூத்துக்குடி மாவட்ட செய லாளர் குமார் ஆகியோர் பேசினர். கூட்டத் தில் சதா மாவட்ட அமைப்பாளராகவும், காரல் மார்க்ஸ், சுரேஷ், சுபாஷ், விஜய், பிலிப் ஆகியோர் மாவட்ட குழு உறுப் பினராகவும், சேவியர் திருவட்டார் ஒன்றிய செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 5 ஆம் தேதி மாலை நாகர்கோயிலில் செம்மாங் குடி சாலை தியாகச்சுடர் செங்கொடி திடலில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் சதா தலைமையில் கழக சார்பில் தூக்குத் தண்டனை எதிர்ப்பு விளக்கக் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்கள் சேவியர், தூத்துக்குடி ம.தி.மு.க. வழக்கறிஞர் வெற்றிவேல், பால். பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த கழகத்தின் முதல் பொதுக் கூட்டம் இதுவாகும். ஏராளமான பொது மக்கள் இறுதி வரை, கூட்டத்தின் கருத்துகளைக் கேட்டனர்.  கருத்துகளைக் கேட்ட பலர், அடுத்த நாள் கழகப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.  ரூ.2500க்கு கழக நூல்கள் விற்பனையாயின.


காவல்துறை கெடுபிடிகளை மீறி ஈரோட்டில் நாத்திகர் பேரணி

ஈரோடு மாநகர கழகத்தின் சார்பாக தந்தை பெரியாரின் 133வது பிறந்தநாள் விழா கொடியேற்று விழா, நாத்திகர் விழா ஆகியவை 17.09.20011 அன்று கொண்டாடப்பட்டது. ஈரோடு அரசு (பெரியார்) தலைமை மருத்துவமனையில் கழகத்தின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியாரின் படத்தினை முன்னாள் நகர தந்தை சுப்பிரமணியம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். அங்கு இருந்து தோழர்கள் ஊர்வலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பெரியார் சிலையை அடைந்தனர்.

பெரியார் சிலைக்கு கழகத்தின் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தினசாமி கழகத்தின் மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் ஆகியோர் மாலை அணிவித்தனர். பின்னர் அங்கு இருந்து ஊர்வலம் பெரியாரின் நினைவு இல்லத்தை அடைந்து அய்யா சிலைக்கு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது. பின் தோழர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

உணவுக்குப் பின் புறப்பட்ட ஊர்வலம் காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப் பட்டு இருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றிவிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் அவர்களின் இல்லத்திற்கு சென்றனர். அங்கு தோழர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டது.

அங்கு இருந்து புறப்பட்ட ஊர்வலம் பெரியார் நகர், சூரம்பட்டி நால்ரோடு, கிருஷ்ணம்பாளையம், லட்சுமி திரையரங்கம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி வலசு ஆகிய பகுதிகளில் கழகக் கொடியினை ஏற்றிய பின் தோழர் இரத்தினசாமி தொழிற் சாலையை அடைந்தது. அங்கு தோழர் களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டது. சிறிது ஓய்வுக்கு பின் தோழர்கள் அனைவரும் மரவப் பாளையம் நாத்திகர் விழா நடக்கும் பகுதியை வந்தடைந்தனர்.

அங்கு தோழர் சுப்பிரமணியம், திருமுருகன் ஆகியோர் அலகு குத்தி கார் இழுக்க, தோழியர்கள் தீச்சட்டி எடுத்து கடவுள் மறுப்புக் கொள்கை களை முழங்கினர். மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம,; பகுத்தறிவாளர் பேரவையைச் சார்ந்த மருத்துவர் சத்திவேல் ஆகியோர் துவக்கிவைத்து உரையாற்றினர்.

காவல்துறை ஊர்வலத்திற்கு  அனுமதியில்லை எனக்கூறி தடுத்தது. தோழர்கள் ஒருங்கிணைந்து முடிந்தால் கைது செய் எனக் கூறியபடி ஊர் வலம் தொடர்ந்தது. செய்வதறியாமல் நின்ற காவல்துறை ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது.  ஊர்வலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களும் கடவுள் மறுப்பு முழக்கங்களும் எழுப்பியபடி தோழர் கள் சென்றனர். மீண்டும் இடைமறிந்த காவல்துறை கடவுள் இல்லை என்று சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால் குறிப்பிட்ட ஒரு கடவுளைப் (மாரியம்மன், அய்யப்பன்) பற்றி முழக்கம் எழுப்பக் கூடாது என்றார்கள். தோழர்கள் காவல்துறையிடம் வேண்டுமானால் வழக்கு போட்டுக் கொள், தேவையில்லாமல் இடையூறு செய்யாதே என்றபடி தொடர்ந்து முழக்கம் எழுப்பியபடி சென்றனர். இதுவரை இது மாதிரியான ஊர்வலத்தைக் கண்டீராத பொது மக்கள் வீதியின் இருபுறமும் கூடி பார்த்து வியந்தனர்.

பொது கூட்ட மேடை வந்தடைந்தது. அங்கு அமைக்கப்பட்டு இருந்த கழகத்தின் கொடியை தோழர் வீர முத்து ஏற்றி வைத்தார். குமார் தலைமையேற்க ரமேஷ்குமார் வரவேற் புரையாற்றினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் இரத்தினசாமி, மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், கழக பேச்சாளர் தோழர் வேலுச்சாமி ஆகியோர் கடவுள் மறுப்பு பற்றியும், மூடநம்பிக்கை ஒழிப்பு பற்றியும், பெரியாரின் தேவை குறித்தும், சாதி ஒழிப்பு களத்தில் கழக செயல்பாட்டினையும் விளக்கி உரை நிகழ்த்தினர். தோழர் சண்முகபிரியன் நன்றியுரை வழங்கினார்.

பொதுக் கூட்டம் துவங்கும் முன்பு தோழர் காவை இளவரசனின் மந்திர மல்ல, தந்திரம் தான் நிகழ்ச்சி நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தோழர்கள் ரத்தினசாமி, சசிக்குமார், குமார், சிவா, திருமுருகன், ரமேஷ் குமார், சண்முகபிரியன் மற்றும் பகுத்தறிவாளர் பேரவையைச் சார்ந்த தோழர்கள் சிவக்குமார், மோகன்ராசு ஆகியோர் செய்து இருந்தனர். அப்பகுதியை சார்ந்த மக்கள் இவ்விழா புதியது என்றதால் பெருந்திரளாக கலந்து கொண்டு கூட்டத்தைக் கேட்டதோடு, கழக வெளியீடுகளை வாங்கிச் சென்றனர்.

- செய்தி.ம.நிவாசு

நன்கொடை


ஈரோடு மாவட்டம் கோபி நகர கழகத் தோழர் நிவாசு-மணிமொழி ஆகியோரின் ஆண் குழந்தைக்கு கழகத் தலைவர் அறிவுக்கனல் எனப் பெயர் சூட்டினார். நிகழ்வில் புரட்சிப் பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்)

புதிய தலைமையகத்தின் தொலைப்பேசி எண்

தலைமைக் கழக முகவரி: 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மைலாப்பூர், சென்னை-600004. தொலைபேசி: 044-24980745

Pin It