1990 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அகதிகள் முகாமில் இருந்தவர் சந்திரகுமார். அவர் தனது எதிர்காலத்தைத் தேடி இத்தாலிக்குப் போக திட்டமிட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று அதி காரிகள் அவரது பயணத்தைத் தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வெளிநாட்டினருக்கான 1946 வது சட்டப் பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். அவரை, இலங்கைக்கு திருப்பி அனுப்ப, தமிழக காவல்துறை ஏற்பாடுகளை செய்தது. சந்திரகுமார், உயிருக்கு ஆபத்து நேரிடக்கூடிய இலங்கைக்கு தன்னை திருப்பி அனுப்பாதிருக்க நீதிமன்றத்தை நாடினார். டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் என்பதால், வழக்கு டெல்லி பெருநகர இரண்டாவது துவாரகா நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருள்வர்மா, இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தடை விதித்தார். நீதிபதி, தமது தீர்ப்பில் குறிப்பிட் டுள்ள கருத்துகள் மிகவும் முக்கியத்துவமானதாகும்.

“இலங்கையில் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சிக் கொண்டிருக்கும் அகதியை, அந்த நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு இந்த நீதிமன்றம் துணை நின்றால், அது நீதிமன்றம் குற்றத்துக்குத் துணை போவதாகி விடும். அகதிகளை வரவேற்பதில் பல பாராட்டத்தக்க பெருமைகளைக் கொண்ட நமது நாட்டில், அகதிகளின் குறிப்பான தேவைகளை நிறைவு செய்யக்கூடிய ஒரு சட்டத்தை, இன்னும் நாம் உருவாக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பாக அதிகமாக பொருளீட்டும் நோக்கத்தோடு வெளிநாட்டுக்கு, செல்வோர் ஒரு வகை. ஆனால், தனக்கு வேறு வழியின்றி, கட்டாயத்தின் பேரில், வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் தேடிப் போகும் அகதிகளோடு பொருளீட்டச் செல்வோரை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இரு பிரிவினருக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த அகதிகள் சூழ்நிலைக்கு பலியானவர்கள் ஏதோ, உல்லாச வாழ்க்கைக்காகவோ, பெரும் செல்வம் ஈட்டவோ அவர்கள், வேறு நாடுகளைத் தேடி ஓடவில்லை. வேறு வழியில்லாத நிலையில் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துகிறார்கள்” என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அகதிகள் பிரச்சினைக்காக முழுமையான சட்டம் ஒன்றின் தேவை நீண்டகால அவசியமாகிறது. ஒரு முன் மாதிரி சட்ட வரைவும் 2006 இல் உருவாக்கப்பட்டது. மிகுந்த கவனத்துடன், விரிவான கலந்தாய்வுக்குப் பிறகு முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி போன்ற உயர் சட்ட வல்லுனர்களால் உருவாக்கப்பட்ட அந்த வரைவு கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கிறது.

இப்போது - அகதிகள் பிரச்சினையில் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினருக்கான சட்டங்களே பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுலா வந்து, சட்ட விரோதமாக செயல்படக்கூடிய வெளிநாட்டுக்காரர்களையும், அகதிகளையும் ஒன்றாகக் கருதக் கூடாது. இந்தியா அதற்கான மனிதாபிமான இலக்குகளி லிருந்து விலகிச் செய்யக் கூடாது” என்று நீதிபதி கூறியுள்ளார். ஆபத்து நிகழக்கூடிய நாட்டுக்கு திருப்பி அனுப்புவது இயற்கை நீதிக்கு எதிரானது என்று கூறிய நீதிபதி, இந்தியர்களானாலும், இந்திய குடிமக்கள் அல்லாதவர்களானாலும், இரு பிரிவினருக்குமே அரசியல் சட்டத்தின் 27வது பிரிவு வழங்கியுள்ள உயிர் வாழும் சுதந்திரத்துக்கான உரிமை பொருந்தும் என்றார். தனது கருத்துக்கு உடன்பாடான பல நீதிமன்றத் தீர்ப்புகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட சந்திரகுமார் 6 மாதம் சிறையில் இருந்துவிட்டதால், இனியும் தண்டிக்கத் தேவையில்லை. அவரை விடுதலை செய்து கும்மிடிப்பூண்டி முகாமுக்கே அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Pin It