மக்கள் பேராதரவுடன் பெரியார் படிப்பகங்கள்

குருவரெட்டியூர் நகர கழகத்தின் சார்பாக பெரியார் படிப்பகம் உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவை கடந்த 10.9.2011 அன்று சிறப்புடன் நடந்தது. விழாவிற்கு கழகத்தின் மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க கழகத்தின் மாநில துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் பெரியார் படிப்பகத்தை திறந்து வைக்க, கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அங்கு இருந்த கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

படிப்பக திறப்பு விழா நடைபெற்ற இடத்தி லிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக பொதுக் கூட்ட மேடைக்கு தோழர்கள் அனைவரும் சென்றனர். ஊர்வலம் செல்லும் வழியில் அமைக்கப் பட்டிருந்த பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர் ஊர்வலம் பொதுக்கூட்ட மேடையை அடைந்த பின்பு அங்கு நாம் தமிழர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரவணக்க நிகழ்வில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த மாவீரன் முத்துக்குமார், மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்ற தோழியர் செங்கொடி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. படிப்பகத்திலிருந்து கூட்ட மேடை வரை விடுதலைப் புலி மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தோழர் அரங்கநாதன் நினைவாக அமைக்கப்பட் டிருந்த பொதுக் கூட்ட மேடையில் பொதுக் கூட்ட நிகழ்ச்சி தொடங்கியது. மேடையில் அமைக்கப் பெற்று இருந்த தோழர் அரங்கநாதன் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார். பொதுக் கூட்ட விழாவிற்கு மாவட்ட தலைவர் நாத்திக சோதி தலைமையேற்க வேல்முருகன் வரவேற்புரையாற்றி னார். கழகத்தின் மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் மற்றும் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந் திரன், மரண தண்டனை ஒழிப்பின் அவசியம் பற்றி யும், மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான காரணம் பற்றியும் விளக்கிக் கூறினார். மேலும் அவர், “ஐ.நா. சபையின் மூலம் மரண தண்டனையை ஒழிக்கப்பட்டுள்ள நாடுகளில் குற்றம் அதிகரித்துள்ளதா? ஒழிக்கப்படாத நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா? என எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மரண தண்டனை இல்லாத நாடுகளில் குற்றம் அதிகரிக்கவில்லை எனவும், மரண தண்டனை இருக்கின்ற நாடுகளில் குற்றம் குறையவில்லை எனவும் முடிவுகள வெளிவந்துள்ளதாகக் கூறினார். அதேபோல் தலைவர்களை கொலை செய்தவர் களுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் தலைவர்கள் கொலை செய்வது நிற்பதில்லை என்றார். உதாரணமாக தேசத் தந்தை என்று அழைக்கப்படும் காந்தியை கொன்றவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் இந்திரா காந்தி கொல்லப்பட்டார். அவர்களுக்கு தூக்குத் தண்டனை அளித்த பின் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இவர்களுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் பட்சத்தில் அடுத்து எந்தத் தலைவர் கொல்லப்படுவார் என்று தெரியவில்லை என்றார். மேலும் மரண தண்டனை என்பது மனித நேயத் திற்கான தண்டனை. எனவே அது ஒழிய வேண்டு மென்றார்.”

பின்னர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் உரையாற்றுகையில், பெரியாரின் இன்றைய தேவை குறித்தும், கடவுள் மறுப்பு ஏன் என்பது பற்றியும், மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றியும் உரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன் உரையாற்றுகையில், “இலங்கையில் நடந்த இனப் படுகொலை பற்றியும், ராசபக்சேவை போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும்” வலியுறுத்திப் பேசினார். மேலும் ஓணம் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்கள் நம் அறிவுக்கு ஏற்றுக் கொள்ளாத கதைகளைக் கொண்ட விழாக்கள் எனவும் உரையாற்றினார்.

இறுதியாக உரை நிகழ்த்திய கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசம்போது, இடஒதுக்கீடு மசோதாவில் தந்தை பெரியாரின் போராட்டத்திற்குப் பின்தான் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது எனவும், அதன் மூலம் தான் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு கிடைத்த வரலாற்றை யும், செப்டம்பர் 11-ன் முக்கியத்துவத்தைப் பற்றியும் உரையாற்றினார். தந்தை பெரியார் 1938 இல் செப்டம்பர் 11 ஆம் நாள் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்கின்ற முழக்கத்தை முன்னெடுத்தார் என்பதையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இம்மானுவேல் சேகரன், உயர்சாதி வகுப்பினராகக் கருதிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவரான முத்துராமலிங்கத்திடம் கை நீட்டிப் பேசினார் என்ற காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 11 என்பதையும்நினைவு கூர்ந்தார். மேலும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட நாள் செப்டம்பர் 11 என்பதையும், அதிலிருந்து பயங்கரவாதம் என்ற சொல் உருவானது என்பது பற்றியும் உரை நிகழ்த்தினார்.

இறுதியில் தோழர் நிவாசு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருவரெட்டியூர் நகர கழகத் தோழர்களும், நாம் தமிழர் தோழர்களும் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் அசைவ உணவு வழங்கப் பட்டது. படிப்பகத்திற்கு கழகத் தலைவர் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வழங்கினார்.

செய்தி: மா. நிவாசு

காவலாண்டியூரில் மக்கள் விழா

குருவரெட்டியூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் இரவு மேட்டூரில் தங்கி, அடுத்த நாள் செப். 11 அன்று காவலாண்டியூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயாரானார்கள். குருவரெட்டியூர் பகுதி போலவே காவலாண்டியூரும் கழகத்தின் கோட்டையாகும். காவலாண்டியூரில் கழகத் தோழர்கள் பெரு முயற்சியால் கட்டப்பட்டுள்ள பெரியார் படிப்பகம், கழகக் குடும்பத்தைச் சேர்ந்த தோழி தி. நீலாவதி - இர.கண்ணன் வாழ்க்கைத் துணை விழா, கழக நூல்கள் வெளியீட்டு விழா ஆகிய மூன்று நிகழ்ச் சிகள் ஒரே மேடையில் எழுச்சியுடன் நடந்தன.

ஊர் எல்லையிலேயே கழகத் தோழர்கள் குடும்பத் துடன் திரண்டு நின்று, கழகப் பொறுப்பாளர்களை பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நவீன வசதிகளுடன் எழிலுற அமைக்கப்பட்டிருந்த பெரியார் படிப்பகத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்து ‘குடிஅரசு’ தொகுப்புகளை வழங்கினார். படிப்பகத் துக்கு எதிரே பந்தலிட்டு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பகுத்தறிவு இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்டிட அமைப்புக் குழுத் தலைவர் க. பொன்னுசாமி தலைமை தாங்கி, படிப்பகம் உருவாக உதவிய ஒத்துழைத்த ஊர்ப் பெருமக்களுக்கு நன்றி கூறினார். படிப்பகம் உருவாக நன்கொடை வழங்கியோர் உதவிகள் புரிந்தோருக்கு கழகத் தலைவர் ஆடை போர்த்திப் பாராட்டினார். படிப்பகத்துக்கு தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய பெரியவர்

ப. இரங்கசாமிக்கு கழகத் தலைவர் ஆடை அணி வித்து பாராட்டு தெரிவித்தார். மாவட்ட தலைவர் கி. முல்லைவேந்தன், செயலாளர் கு. சூரியகுமார், காவை கிளைக் கழகத் தலைவர் சே. இராசேந்திரன் ஆகி யோர் உரையைத் தொடர்ந்து கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் க. ஈசுவரன் வரவேற்புரை யாற்றினார்.

பெரியார் திராவிடர் கழக சார்பில் ‘பெண்ணுரிமை சட்டங்களும் - பார்ப்பனர்களும்’ என்ற தலைப்பில் ‘குடிஅரசு’ இதழ் கட்டுரைகளும், ‘காந்தி படுகொலையில் பார்ப்பனப் பின்னணி’ என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சத்திய மங்கலத்தில் ஆற்றிய உரையும் தொகுக்கப்பட்டு, கழக சார்பில் நூல்களாக வெளி வந்துள்ளன. நூல்களை கண்ணாமூச்சி ஊராட்சி மன்றத் தலைவர் க.சொ. பழனிச்சாமி, அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ். சுந்தர்ராசன், தேவர் எனும் தேவராசன், படிப்பக நில நன்கொடையாளர் அரங்கசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். படிப்பகத் திறப்பு- மணமக்கள் வாழ்த்து - நூல் வெளியீட்டு நிகழ்வுகளை இணைத்து, கழக வழக்கறிஞர் இளங்கோவன், பொதுச் செயலாளர்கள் கோவை கு. இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து 12 மணியளவில் தி. நீலாவதி-இர. கண்ணன் வாழ்க்கை ஒப்பந்தத்தை, கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் நடத்தி வைத்து உரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். கழகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியை கழகத் தலைவரிடம் தோழர்கள், பொது மக்கள் வழங்கினர். காவலாண்டியூர் மகளிரணியினர் சார்பாக கழகத் தலைவர் சுற்றுப் பயண செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.2000 வழங்குவதென முடி வெடுத்து, முதல் தவணையை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினர். கிளைக் கழகச் செயலாளர் க. பழனிச்சாமி நன்றி கூறினார். தலைமைக் கழகப் பேச்சாளர் காவை. இளவரசன் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங் கினார். அனைவருக்கும் கழக சார்பில் புலால் உணவு வழங்கப்பட்டது. கட்சி களைக் கடந்த மக்கள் விழாவாக நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

- நமது செய்தியாளர்

திண்டுக்கல்லில் மனித சங்கிலி

26.8.2011 அன்று மூன்று தமிழர் உயிர் காப்பு குழு சார்பாக திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கழக மாவட்டத் தலைவர் துரை. சம்பத் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில்  தி. அழகிரிசாமி (தமிழர் தேசிய இயக்கம்), இரா. பரசுராமன் (ம.தி.மு.க.), பேட்ரிக் சகாயநாத் (சி.பி.ஐ.), க. இராமகிருட்டிணன் (பா.ம.க.), மு. வில்லவன் கோதை (விடுதலை சிறுத்தைகள்), மு.ப. கணேசன் (வழக்குரைஞர்கள் சங்கம்), இரா. மணிமாறன் (சமத்துவ மக்கள் கட்சி), க. பெரியார் மணி (தமிழ் புலிகள்), க. பாண்டியன் (புரட்சிகர இளைஞர் முன்னணி), ஜெய்கணேஷ் (தேவேந்திரகுல இளைஞர் பேரவை), வழக்கறிஞர் கணேஷ் (நாம் தமிழர்), தோழர் சந்திரா (சக்தி கலைக்குழு), பெரியார் நம்பி ஆகியோர் உரையாற்றினர். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் வாழ்நாள் சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாள் நினைவாக விடுதலை செய்யக் கோரி, தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் செப்டம்பர் 12 ஆம் தேதி கோவை தமிழ்நாடு உணவகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு கலைக் கல்லூரி மாணவர் விக்னேசு தலைமையில், மாணவர்கள் பிரபாகரன், பிரதாப், சிலம்பரசன், சீனிவாசன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் நேருதாஸ் உரையாற்றினர். நாகராசு நன்றி கூறினார்.

1976 இல் தணிக்கைக்குள்ளான கட்டுரை
“எங்க மகேசனைப் பாத்தீங்களா? அந்த மணல்மேடு புழுதிக்குள்ளே!”


செவ்வாய் கிரகத்திலே ‘வைக்கிங்’ என்ற விண்வெளிக் கோள் இறங்கியதைத் தொடர்ந்து 1976 இல் ‘விடுதலை’யில் விடுதலை இராசேந் திரன் ‘ரா’ என்ற புனைப் பெயரில் எழுதிய கட்டுரை இது. அப்போது ‘அன்னக்கிளி’ திரைப்படம் திரைக்கு வந்து, இளையராஜாவின் ‘மச்சானைப் பார்த்தீங்களா’ பாடல் பிரபலமான நேரம். அந்த பாடல் வரிகளைப் போலவே இநதக் கட்டுரைக்கும் தலைப்பிடப்பட்டு எழுதி, இக் கட்டுரை பார்ப்பன அதிகாரிகளால் கத்திரிக்கோல் போடப்பட்டதாகும்.

“இறங்கிவிட்டது! இறங்கி விட்டது!! செவ்வாய் கிரகத்திலே வைக்கிங் இறங்கி விட்டது! செவ்வாய் கிரகத்தின் படங்கள் பூமிக்கு வந்து கொண்டிருக்கின்றன. அந்த வைக்கிங் காமரா அனுப்பிய புகைப்படங் களிலே...

கங்கையை தலையில் சுமந்து களி நடனம் புரியும் எங்கள் சிவபெருமான் படம் விழுந்து விட்டதா?

சுடர் முகம் தூக்கி சூரனை அழித்த, சூலாயுதக் கடவுள் சுப்ர மணியன் ‘போஸ்’ கிடைத்ததா?
தங்கத் தாமரையில் வீற்றிருக்கும் எங்கள் குலச் செல்வி சரசுவதி படம் வந்து விட்டதா?
வள்ளியோடு பள்ளி கொண்டு துள்ளி விளையாடும் எங்கள் சல்லாப முருகனுமா ‘கிளிக்’ ஆகவில்லை!

கூரான கற்கள் படிந்த புழுதி களையும், மணல் மேடுகளையும் தான் ‘வைக்கிங்’ படம் பிடிக்க முடிந்ததா?

அய்யோ, செவ்வாய் கிரகத்தில் எங்கள் கடவுள்கள் ஒன்றுகூட இல்லையா? அவர்களெல்லாம் போன இடம் எங்கே? வாழும் இடம் எங்கே?

வைக்கிங்கே, வைக்கிங்கே! அமெரிக்கா அனுப்பிய வைக்கிங்கே!! எங்கேயாவது, எப்படியாவது எங்கள் கடவுள்களை தேடிப் பிடித்து, அவர்களின் ‘முகவெட்டை’ இங்கே பூமிக்கு அனுப்பி, இங்கே துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நாத்திக பிண்டங்களின் நாவை அடக்க மாட்டாயா?

‘வாயைப் பிளந்து வைகுண் டத்தைக் காட்டிய’வனின் காலடி பிடித்துக் கிடக்கும் காருண்ய சீடர்கள் நாங்கள்! கடைசியில் எங்கள் வாயிலும் வைக்கிங்கே, நீ எடுத்து வரும் மண்தான் விழப் போகிறதா? அந்தோ, வைக்கிங்கே! அய்யகோ விஞ்ஞானமே! அழுது புலம்பு கிறோம்; எங்களை ஆற்று வாரில்லையா? தேற்றுவாரில்லையா?

பூமியை ஆட்டி வைக்கும் எங்கள் புண்ணிய தெய்வங்களே, நீங்கள் உண்மையிலேயே எங்கேதான் இருக் கிறீர்கள்? சொல்லித் தொலையுங் களேன்! அங்கேயாவது அமெரிக் காவைப் பிடித்து ஒரு விண்வெளிக் கோளை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறோம்.”

- “ரா” ‘விடுதலை’ 22.7.1976

(அண்மையில் ‘விடுதலை’ நாளேடு எப்படியோ தவறிப்போய் இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது)

Pin It