மேட்டூரில் கடந்த ஆண்டைப் போலவே அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் ஆயுத பூசை கொண்டாடுவது அரசாணைக்கு எதிரானது என வலியுறுத்தி, அனைத்து காவல் நிலையங்கள் உட்பட அனைத்து அலுவலகங் களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டதால், இந்த ஆண்டு அரசு அலுவலகங்களில் ஆயுத பூசை கொண்டாடுவது கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஆயுத பூசையின்போது மேட்டூர் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இந்த ஆண்டு மேட்டூர் காவல் நிலையத்தில் ஆயுத பூசை போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 5.10.2011 புதன் காலை மேட்டூர் காவல்நிலையத்திற்கு நாங்கள் ஆயுத பூசை போடுவோம், அரசு அலுவலகங்களிலுள்ள பெரியார் படங்களை அகற்று வோம் என முன்கூட்டியே பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு செய்திகள் கொடுத்துவிட்டு விளம்பர நோக்கோடு இந்து மக்கள் கட்சியைச் சார்ந்த அய்ந்து ஊர்களைச் சேர்ந்த ஆறு நபர்கள் மேட்டூர் நோக்கி வந்தனர். இதை முன்கூட்டியே பத்திரிகையாளர்கள் மூலம் அறிந்த காவல்துறை மேட்டூர் எல்லையில் அந்த நபர்களை கைது செய்தது. உடனே காவல் நிலையத்திற்கு ஆயுத பூசை போடவந்த இந்து மக்கள் கட்சியினர், ‘ஒழிப்போம் ஒழிப்போம் பெரியார் தி.க.வை ஒழிப்போம்’ என குரல் எழுப்பி வந்ததை அறிந்த மேட்டூர் கழகத் தோழர்கள் மாவட்ட தலைவர் முல்லை வேந்தன் தலைமையில் எதிர் நடவடிக்கையில் இறங்கினர்.

இந்து மக்கள் கட்சி தடுத்து வைக்கப்பட்ட மண்டபத்தின் நுழைவு வாயிலுக்குச் சென்று, “இந்து என்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே! எங்கள் நாடு தமிழ்நாடு! இங்கு ஏதேடா இந்து நாடு. எங்கள் நாடு பெரியார் நாடு! பார்ப்பன அடிவருடிகளே வெளியேறு!” என்ற முழக்கங்களோடு தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதைக் கண்டு பதட்டமான மேட்டூர் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்து மேட்டூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள ராமன் நகர் பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் பெ. ஆசைத்தம்பி, மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, முன்னாள் மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, ஆர்.எஸ். பகுதி தலைமைக்குழு உறுப்பினர் பிரபு, செல்வம், ஆர்.எஸ். பகுதி மாணவரணி யுவராஜ், நங்கவள்ளி இராசேந்திரன், சிவக்குமார், அருண்குமார் மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

செய்தி அறிந்த சேலம் மேற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர்களும் மேட்டூரில் திரண்டனர். இதனால் மேட்டூரில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறை குவிக்கப்பட்டு மேட்டூரே பரபரப்பாகியது.

கடந்த ஆண்டு மேட்டூர் காவல் நிலையத்தில் ஆயுத பூசை போடுவது தடைபட்டதால் காவல் நிலையத்தில் புனித பூசை போடவந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கழகத் தோழர்கள் முயற்சியில் விரட்டி அடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோழர் வே. ஆனைமுத்து, பசு. கவுதமனுக்கு பெரியார் விருது-பொற்கிழி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யம், ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ நூலின் பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து அவர்களுக்கு பெரியார் சிறப்பு விருதும், ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டது. பெரியார் பற்றிய நூல்களை வெளியிட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத் தோழர் பசு. கவுதமனுக்கு ரூ.50,000 பொற்கிழியும், சமநீதிக்குப் பாடுபடும் அரக்கோணம் கிராமப் பெண்கள் விடுதலை இயக்கத் தலைவர் பர்னாட் பாத்திமா நடேசனுக்கு ரூ.50,000 பொற்கிழியும் வழங்கப்பட்டது. 17.9.2011 சனிக்கிழமை பல்கலைக்கழக அரங்கில் பல்கலை துணைவேந்தர் இதை வழங்கினார்.

Pin It