இந்திய அரசியல் சட்டத்தில் கூறப் பட்டுள்ள ‘பழக்க வழக்கங்கள்’ காப்பாற்றப்பட வேண்டும் என்ற பிரிவு வழியாகவே நான்கு வர்ண தர்மம் காப் பாற்றப்பட்டு ‘சூத்திரர்’ இழிவு நிலை நிறுத்தப்படுகிறது என்பதை விளக்கி மா.பெ.பொ.க. அமைப்பாளர் வே.ஆனைமுத்து எழுதிய தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:

“பெரியார் அவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற போராட்டத்தை 1969 இல் அறிவித்த உடனேயே, அன்றைய தி.மு.க. அரசு முன்வந்து உரிய சட்டத்தை இயற்றியது. பார்ப் பனர்கள் அதை எதிர்த்து வழக்குத் தொடுத்தனர். அதனால் ஏற்பட்ட தடையை நீக்குத் தன்மையில் மீண்டும் ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு 2006 இல் நிறைவேற்றியது. அப்படி நிறைவேற்றியபோது வழக்கச் சட்டம், பழக்கச் சட்டம் இவையெல்லாம் இருந்தாலும் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று குறிப்பிட்டு ஆணை பிறப்பிக்கப் பட்டது (In a radical move, the then DMK Government issued a government order in May 2006 declaring, that suitably trained and qualified Hindus, without ‘discrimination of caste, creed custom or usage’ were to be appointed as archakas (priests) to any of the 36000 temples administer by the HRCE department in the state.) பழக்கச் சட்டம், வழக்கச் சட்டம் இவற்றை மாற்றுவதற்கான அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு. அதை உள்வாங்கிக் கொள்ளாமல் தமிழ்நாடு அரசாங்கம் சட்டம் செய்தது. அதன்படி 300 பேர்களுக்கு - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மேல்சாதியினர் ஆகியோருக்கு அர்ச்சகர் பயிற்சிக் கொடுத்தது. ஆனாலும் இந்துக் கோயில்களுக்கு அர்ச்சகர் வேலைக்கு விண்ணப் பிக்கலாம் என்று தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை விளம்பரப்படுத்தும்போது, “பார்ப்பனர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்” என விளம்பரப் படுத்தியது. ஏன் எனில் ஏற்கனவே இதுபற்றி நீதிபதி மகாராஜன் குழு அளித்த அறிக்கையில் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அத்துடன் அரசியல் சட்ட விதி 25, 26 இல் உள்ளபடி வழக்கச் சட்டம், பழக்கச் சட்டம் இவற்றை மாநில அரசு மாற்ற இயலாது என்பதே உண்மையாகும். இதை நாம் எப்படி அறிகிறோம்? இது பற்றி நாம் கவலைப்பட்டோமா?

இதைச் சரியாகப் புரிந்து 1948 லேயே கவலைப் பட்டவர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களே ஆவார். அவர் அரசமைப்புச் சட்டக் குழுவின் தலைவராக 1947 இல் பொறுப்பேற்றார். அப்போதே, ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது வரைவு என்கிற பி.என்.ராவ் எழுதிய அரசியல் சட்ட வரைவு 17.10.1947 இல் அம்பேத்கரிடம் ஒப்படைக்கப் பட்டது.

அதில் வேலையில் இடஒதுக்கீடு பற்றிய விதியில் “to any class of citizens” என்றே பி.என்.ராவ் எழுதியிருந்தார். அவருடைய தீய உள்நோக்கத்தை உடனே உணர்ந்த மேதை அம்பேத்கர், “to any backward class of citizens”என்பதைச் சேர்த்தார்.

அதேபோல் அந்த வரைவு பழக்கச் சட்டம், வழக்கச் சட்டத்தைப் பாதுகாக்கிறது என்பதை அறிந்த அம்பேத்கர், இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கென்று 1948 இல் அவர் முன்மொழிந்த இந்துச் சட்டத்திருத்த மசோதாவில், மிகத் தெளிவாக ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அது பின் வருமாறு அமைந்திருந்தது:

“Overriding effect of code - Save as otherwise expressly provided in this Code, any text, rule or interpretation of Hindu Law, or any custom of usage or any other law in force immediately prior to the commencement of this code shall cease to have effect in respect of any of the matters dealt within this code.”

இதன் பொருள் என்ன? “இந்தச் சட்டத்தில் சொல்லப்பட்ட எதுவும் இந்தச் சட்டம் நடப்புக்கு வருவதற்கு முன்னால் இந்துச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற எந்தச் சட்ட வாசகமும், விதியும் அல்லது சட்ட விளக்கமும் அல்லது எந்தப் பழக்கமும் எந்த வழக்கமும் அல்லது இந்தச் சட்டத்துக்கு முன்னால் இருந்த எச்சட்டமும் இந்த இந்துச் சட்ட மசோதா நடப்புக்கு வந்த பின்னர் செல்லுபடியாகாது.”

அம்பேத்கரின் இந்தத் திருத்தத்தை எதிர்த்தவர் பாபு இராசேந்திர பிரசாத் (குடியரசுத் தலைவர்). அடுத்ததாக அதை எதிர்த்தவர் மறைந்த காஞ்சி சந்திர சேகரேந்திர சரசுவதி ஆவார். அவரே வென்றார்.

அரசமைப்புச் சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) இவற்றில் “பழக்கச் சட்டம்”, “வழக்கச் சட்டம்” (Custom and Usage) என்பதற்குக் கெட்டியான பாதுகாப்பு இருக்கிறது. இது இந்துக்கள், பார்சி, பவுத்தர், சீக்கியர் ஆகி யோரைக் கட்டுப்படுத்துகிறது. மேலே கண்ட ஐந்து விதிகளில் உள்ள இந்தப் பாதுகாப்பை டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சட்டத் திருத்தத்தைப் போன்ற ஒரு விதியை அரசமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதன் மூலமே - நால் வருணை வேறுபாட்டை ஒழிக்க முடியும். அதன்படி உரிமை மறுக்கப்பட்டோருக்கு அப்போதுதான் உரிமை வந்து சேர முடியும். பகுத்தறிவாளர் ஒவ்வொருவருக்கும இந்தப் புரிதல் வரவேண்டும் என விரும்புகிறோம்.

‘சிந்தனையாளன்’, அக்.2011

Pin It