மதச்சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் இந்து மதத்தின் நிறுவனங்கள் போல் செயல்பட்டு வருகின்றன. இந்து கடவுள் படங்கள் மாட்டப்பட்டு வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பூசைகள் போடப்படுகின்றன. அரசு வளாகங்களுக்குள்ளேயே கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘ஆயுத பூசை’ மதப் பண்டிகை நாளில் ‘தடபுடலாக’ பூசைகள் போடுவது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்துமே அரசு விதிகளுக்கு எதிரானவை என்றாலும், எவரும் தட்டிக் கேட்க முன் வராததால் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. பெரியார் திராவிடர் கழகம் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு அலுவலகங்களில் மதச் சடங்குகள் நடைபெறுவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இது தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும், ஏற்கனவே பல சுற்றறிக்கைகளை அனுப்பியும்கூட அரசு நிர்வாகமோ, காவல்துறையோ, அவைகளை அலட்சியப்படுத்தியே வந்தன.

1)    அண்ணா - தமிழக முதல்வராக பதவிக்கு வந்தவுடன், அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள், படங்களை மாட்டக் கூடாது என்றும், ஏற்கனவே மாட்டப்பட்டிருக்கு மானால் படிப்படியாக பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அகற்றிட வேண்டும் என்றும் தமிழக அரசு, தலைமைச்செயலாளர் ஒரு அரசாணையைப் பிறப்பித்தார். (29.4.1968, அரசாணைக் குறிப்பு எண்.7553/66-2)

2)    அதேபோல், அரசு வளாகங்களில் மதம், வழிபாடு தொடர்பான புதிய கோயில்கள், வழிபாட்டுத் தளங்களைக் கட்டுவதும், ஏற்கனவே இருந்தால், அதைப் புதுப்பிப்பதும் கூடாது என்றும், அத்தகைய நிகழ்வுகள் ஏதும் நிகழாமல் உறுதி செய்வது துறைத் தலைவர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர்களின் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதாகும் என்று வருவாய்த் துறை முதன்மை ஆணையர், வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் சார்பில், அனைத்துத் துறைகளுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. (அரசாணை எண். 426, 13.12.1993)

3)    அரசு அலுவலகக் கட்டிடங்களில் மதம் தொடர்பான முழக்கங்கள் எழுதுவதையோ, வளாகத்தில் வழிபாட்டுத் தளங்கள் அமைப்பதையோ அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதற்கான ஆலோசனைக் குழுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என். அரிபாஸ்கர், அய்.ஏ.எஸ்., அனைத்துத் துறைகளுக்கும் மத்திய அரசின் கடிதத்தை இணைத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். (எண்.8472 சட்டம் மற்றும் ஒழுங்கு பி/94-1)

4)    மதுரை உயர்நீதிமன்றமும், அரசு வளாகத்தில் வழிபாட்டுத் தளங்கள், மத நிகழ்வுகள் நடப்பதைத் தடை செய்ய வேண்டும் என்றும், 1993 ஆம் ஆண்டின் அரசு ஆணையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், 17.3.2010 இல் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அறிவுறுத்தல், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அரசு செயலாளர் வழியாக 22.4.2010 அன்று கடிதமாக (கடிதம் எண். 16844/ஏ/2010-1) அனைத்து அரசுத் துறைகளுக்கும் அனுப்பப்பட்டது.

5)    காவல் நிலையங்களிலோ, காவலர் குடியிருப்பு வளாகத்திலோ, வழிபாட்டுத் தளங்களை அமைப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது என்றும், நமது நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவில் கொண்டு சட்டத்தையும், சட்ட ஒழுங்கையும் காப்பாற்றும் கடமை ஆற்றக் கூடியவாறு காவல் துறையினர் செயல்பட வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தோடு, பிற மதத்தினரையும் அரவணைத்துச் செல்வதில் முன் உதாரணமாக செயல்படவேண்டும் என்றும் உண்மையான பணி செய்யக் கூடிய அரசு அலுவலக வளாகமே வணங்கத்தக்கது என்பதால், தனியாக வழிபாடு தேவையற்றது என்றும், காவல்துறை தலைமை இயக்குனர் இலத்திகா சரண், ஒரு சுற்றறிக்கையை 28.5.2005 இல் (ஆர்.சி.எண். 96243/கட்டிடங்கள் 1(1)2005) அனுப்பினார்.

இவ்வளவு சுற்றறிக்கைகள், ஆணைகள், தீர்ப்புகள் இருந்த நிலையிலும் அவைகள் மீறப் பட்டே வந்தன. கண்காணிப்பு அமைப்புகளோ, தட்டிக் கேட்கும் இயக்கங்களோ இல்லை என்ற நிலையில் பெரியார் திராவிடர் கழகம், கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுற்றறிக்கைகளை காவல் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பியதோடு, கடந்த ஆண்டு நேரிலும் கண்காணிக்கத் தொடங்கியது. அரசாணைகளுக்கு எதிராக செயல்பட்ட சென்னை, மேட்டூர் போன்ற ஊர்களில் கழகத் தோழர்கள் காவல் நிலையங்களில் நுழைந்து சட்ட விரோத செயல்களைத் தடுத்தனர். இதனால் சட்டத்தை நிலைநாட்ட முயன்ற கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இவ்வாண்டும் கழக சார்பில் அரசாணைகள்,  அரசுத் துறைகள் மற்றும் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அதனால் ஆயுத பூசைகள் பெருமளவில் காவல் நிலையங்களில் நிறுத்தப் பட்டுள்ளன. சில காவல் நிலையங்களில் ரகசியமாக பூசைகள் போடப்பட்டதாகத் தெரிகிறது.

இப்போது தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் சார்பில் அதன் துணைச் செயலாளர் கையெழுத்திட்டு, கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு பதில் கடிதம் ஒன்று அக்.11 ஆம் தேதி வந்துள்ளது.  (கடித எண்.41000/ஏ1/2011-1 நாள். 11.10.2011) அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

“தங்களால் குறிப்பிடப்பட்டுள்ள அரசு கடிதத்தின் வாயிலாக, அனைத்து அரசு அலுவலகங் களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை மீறி எந்த அரசு அலுவலகங்களில் மதவழிபாடு செய்கின்றனரோ, அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரிக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மனு செய்யலாம் என்பதனை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்” - என்று திட்டவட்டமாக, தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களிலோ, வளாகங்களிலோ, மத வழிபாடுகளை நடத்தும், காவல்துறையின ரானாலும், அதிகாரிகள் அலுவலரானாலும், நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பதும், அவர்கள் மீது புகார் தெரிவித்து மனு தரலாம் என்றும், அரசு சார்பாகவே அறிவிக்கப்பட்டு விட்டது. இது பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றி என்றாலும், மதச் சார்பற்ற கொள்கையை நாட்டில் அமுல்படுத்த விரும்பும் எவரும், தங்கள் பகுதிகளில் அரசு அலுவலகங்கள், காவல்துறையைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்துத்துவ சக்திகள் கேள்வி கேட்பாரின்றி எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நிலைக்கு கடிவாளம் போடும், இத்தகைய முயற்சிகள் இன்று அவசியமாகிறது. மதவெறிக் கலவரமாக தமிழகம் மாறிவிடக் கூடாது என்ற கவலையுடன் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பணியாற்ற வேண்டியது, மிக அவசியமாகிறது!

ஸ்காட்லாந்து தனி நாடாகும்?

பிரிட்டனிடம் இருந்து ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாவதற்கு ஆதரவு பெருகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் சேர்ந்ததே இன்றைய பிரிட்டன்.  இவற்றில், ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. கடந்த மே மாதம் ஸ்காட்லாந்தில் நடந்த தேர்தலில், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி வெற்றிப் பெற்றது. கட்சி சார்பில் முதல்வரான அலெக்ஸ் சல்மாண்டு, ஆட்சியின் இறுதியான ஐந்தாவது ஆண்டில், ஸ்காட்லாந்து விடுதலை குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், ஸ்காட்லாந்து தவிர்த்த பிற பகுதிகளில், ‘காம்ரெஸ்’ என்ற நிறுவனம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் மொத்தம் 2004 இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தோர் 39 சதவீதம் பேர், பிரதமர் டேவிட் கேமருனின் கன்சர்வேடிவ் கட்சியினர் 37 சதவீதம் பேர், துணைப் பிரதமர் நிக் க்ளெக்கின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியினர் 10 சதவீதம் பேர், பிற கட்சியினர் 14 சதவீதம் பேர் ஸ்காட்லாந்து தனி நாடாவதை ஆதரித்துள்ளனர் என ‘காம்ரெஸ்’ குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில், இங்கிலாந்து உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர், ஸ்காட்லாந்து விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Pin It