உடுமலைப்பேட்டை நகர ஒன்றிய கழகத்தின் சார்பில் 24.5.2011 செவ்வாய் அன்று குட்டைத் திடலில் நாத்திகர் விழாவாக மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ குண்டம், பொதுக் கூட்டம், புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடத்துவதென திட்டமிட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி விளம்பரமும், உடுமலை ஒன்றிய கிராமங்களிலும் சுவரொட்டியும் துண்டறிக்கையும் கொடுத்து பரவலாக விழா செய்தி விளம்பரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காவல்துறை மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து, தீ குண்டமும், பொதுக் கூட்டமும் நடத்த அனுமதி வழங்கியது. நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு தீ குண்டம் நிகழ்ச்சிக்கும் அனுமதி மறுத்தது. துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், விள்மபரம் மூலம் நிகழ்ச்சி பரவலாக மக்களிடம் சென்று விட்டதால் நகரமெங்கும் அதே பேச்சு நிலவிய நிலையில் பொதுக் கூட்டத்தையும் ரத்து செய்வது கூடாதென தோழர்கள் முடிவு செய்து 24.5.2011 செவ்வாய் அன்று குறிப்பிட்ட அதே இடத்தில் மாலை 6 மணிக்கு நாத்திகர் விழா தொடங்கியது.

முதல் நிகழ்வாக, பல்லடம் திருமூர்த்தி, மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை நடத்தினார். வெறுங் கையில் விபூதி வரவழைத்தல், லிங்கம் எடுத்தல், எலுமிச்சம் பழத்தை கையில் குத்திக் காட்டுதல் போன்று நிகழ்ச்சிகளை செய்து காட்டினார். பெண்கள் பெருமளவில் கலந்துகொண்ட கூட்டம் முதல் நிகழ்ச்சியிலேயே பரபரப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஆ. நாகராசன், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் கா.சு. நாகராசன், திருப்பூர் மாவட்டத் தலைவர் சு. துரைசாமி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் துரை. சம்பத், தவைலமை செயற்குழு உறுப்பினர் இரா. மனோகரன் ஆகியோர் பேசினர். இடையில் திருப்பூர் தியாகராஜன், சென்னை நாத்திகன் ஆகியோர் பாடல்கள் பாடினர். அடுத்ததாக தலைமை செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளான நாக்கில் அலகு குத்துதல், கன்னத்தில் அலகு குத்துதல், அரிவாள் மேல் நிற்றல் போன்ற நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினார். ஆயிரக்கணக்கான மக்கள் திருண்டிருந்து வியப்போடு பார்த்தனர். கூட்டத்தி லிருந்து சிறுவர்கள் மேடைக்கு வந்து அரிவாள் மேல் நின்று தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இருவருமே தங்களுடைய உரையில், “காவல் துறையால் தவறாக அனுமதி மறுக்கப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், தீ குண்டமும் நீதிமன்ற அனுமதியோடு அதே இடத்தில் மிகச் சிறப்பாக நடத்துவோம்” என்று அறிவிப்பு செய்தனர். கூடியிருந்த பொது மக்கள் கையொலி எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இறுதியாக, புதுக்கோட்டை பூபாளம் குழு வினரின் கலை நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. நகைச்சுவையோடு பகுத்தறிவு, சமூகம், அரசியல் என பல்துறைச் செய்திகளை பூபாளம் குழுவினர் நடத்தியது மக்களிடம் நல்ல வரவேற்பைத் தந்தது.

நாத்திகர் விழா உடுமலை நகரத் தலைவர் யாழ். நடராசன் தலைமையில் நடந்தது. நகர துணைச் செயலாளர் சு.சிவசங்கர், நகரப் பொருளாளர் மு.வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்டக் கழகச் செயலாளர் கா. கருமலையப்பன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகரத் தலைவர் வே. கோபால், மாநகர பொருளாளர் ரஞ்சித் பாபு, கோவை வடக்கு மாவட்டத் தலைவர் து.ராமசாமி, மாநில தகவல் தொடர்பாளர் ந. பிரகாசு, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல்வேலு, திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் நல்லதம்பி, திருப்பூர் நகர செயலாளர் முகில்ராசு, ஆனைமலை நகரத் தலைவர் அரிதாசு, முருகானந்தம், ருக்குமணி, பல்லடம் நகர அமைப்பாளர் ஜெகதீசு, தாராபுரம் குமார், பல்லடம் விஜயன், கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளர் மதியழகன், பெரிய நாயக்கன் பாளையம் சீனிவாசன், பல்லடம் ஒன்றியம் வடிவேல், ஆறுமுகம், இலட்சுமி மில்ஸ் பொன்னுசாமி, உடுமலை ஒன்றியச் செயலாளர் கோ. விசுவநாதன், மடத்துக்குளம் ஒன்றிய துணைச் செயலாளர் மா. மோகன்குமார், காரத் தொழுவு கு. மயில்சாமி, சின்னவீரம்பட்டி தமிழ்வேந்தன், கடத்தூர் அய்யப்பன், சரவணன், பழனி மருதமூர்த்தி உள்ளிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் உடுமலை நகரச் செயலாளர் இரா. பாக்கியநாதன் நன்றி கூறினார்.

உடுமலை நகரத் தலைவர் யாழ் நடராசன், செயலாளர் இரா. பாக்கியநாதன், துணைச் செயலாளர் சு. சிவசங்கர், ஒன்றியச் செயலாளர் கோ. விசு, மடத்துக்குளம் ஒன்றியத் துணைச் செயலாளர் மா.மோகன் குமார், காரத் தொழுவு கு. மயில்சாமி, ரமேஷ் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்புற கடுமையாக உழைத்திருந்தனர்.

Pin It