“இறை கற்பனை இலான்”

ஒரு மனிதன், தான் நல்வாழ்வு வாழ பொருள் வேண்டும், வீடு, தொழில், பிள்ளைகளின் படிப்பு அனைத்துக்கும் பணம் வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவை கட்டாயத் தேவையாகும். இவை நிறைவேற பணம் வேண்டும். அதற்கு வருமானம் வேண்டும். வருமானம் ஈட்ட தொழில் வேண்டும். தொழில் செய்ய இன்று பயண வசதி ஊர்தி வேண்டும். மற்ற சராசரி குடும்பத்தார் போல் மதிக்கத்தக்க வகையில் அணி, மணி வேண்டும். பிள்ளைகள் நாம் சிரமப்படுவது போல் இல்லாமல் பிற்காலத்தில் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் படிக்க வைக்க வேண்டும். அதற்கு நல்ல பள்ளியில் சேர்க்கப் பணம் வேண்டும். பணம் தேற்ற உழைப்பாளி பிழையாய் உழைத்து வேறு வழியில் பணம் சேர்க்க வேண்டும். வணிகர் மக்களை அதிகமாக ஏமாற்றி விற்க வேண்டும். பெரு வணிகர் என்றால் வங்கிக் கடன் மற்றவர்கள் பெற முடியாத நிலையில் எப்படியாவது பெற்று பொருளீட்ட வேண்டும்.

அரசு அலுவலர்கள் தம் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செலவு செய்ய இலஞ்சம் வாங்க வேண்டும். ஒப்பந்தக்காரர்கள் முறை தவறி சிறிதாகவோ, பெரிதாகவோ திருட வேண்டும். அமைச்சர்கள் அவர்களின் உதவிகரமானவர்கள், காவலர்கள் யாவரும் தவறு செய்து சரியாக இருப்பதாகக் கணக்குக்காட்டி பொருளீட்ட வேண்டும். இவைகளை சீராக்கிக் கொள்ள, வரிகளிலிருந்து தப்பிக்க மெத்தப் படித்த கணக்கர், வழக்காடிகள் ஆகியோரைப் பேணி பணம் செலவு செய்து பணம் பார்க்க வேண்டும். மருத்துவர்கள், நோய்களைக் காட்டி மக்களைச் சுரண்ட வேண்டும். பொறியாளர்கள் கபடமாக சம்பாதிக்க வேண்டும். இப்படிப் பொருளாதாரக் குற்றங்கள் பல்கிப் பெருகிவிட்டன. ஒவ்வொருவரும் தான் தன் வரைத்தான் இலஞ்சம், சுரண்டலை எதிர்க்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தமக்காக அந்தத் தவறையே செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். என்ன தான் தீர்வு? சட்டம், பரப்புரை, நீதிக் கதைகள் எல்லாம் பயனற்றுப் போய்விட்டன.

இதற்கெல்லாம் என்ன காரணம்? பணம் பண்ண வேண்டும். எதைச் செய்தாவது சாமர்த்தியம் செய்து சம்பாதிக்க வேண்டும். எவனையாவது மொட்டை அடிக்க வேண்டும் அல்லது அரசுச் சொத்தை, பணத்தை ஏதாவது ஒரு வழியில் சூறையாட வேண்டும். இதற்கு மாற்றே இல்லையா? யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், பணம், சொத்து சேர்க்கலாம் என்ற நிலை உள்ளது. ஏன் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் சேர்த்து எப்படிப்பட்ட இன்பமும் நுகரலாம் என்ற நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது யார் நேர் வழியில் மட்டும் பணம் சேர்ப்பார்கள்?

தவறான வழியில் பணம் சேர்த்து அனுபவிப்பவர்களைப் பார்த்து மற்றவர்களும் ஆயத்தமாகிறார்கள். நம் மத்தியில் தவறுகள், குற்றங்கள் நடைபெறாமல் எப்படி இருக்கும்? எங்கெங்கோ நடைபெறும் தவறுகள் அவரவர் வீட்டு வாசலுக்கும் வராது என்பதற்கு என்ன உத்திரவாதம்? இதற்கு மாற்றே இல்லையா? மாற்று வேண்டாமா, இந்தக் குறைபாடுகளை ஓரளவாவது தடுக்க இளைய சமுதாயமே உனக்குப் பொறுப்பில்லையா? அறிவு,ஆற்றல் இல்லையா? இந்த சேற்றிலேயே, புதை மண்ணிலேயே ஏன் அமிழ்ந்து  போகிறாய்? சிந்தனையை மாற்று இந்த மாற்றத்தை யார் மறுப்பார்கள்? இன்று இதனைச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் அதிகாரிகள் வர்க்கமும், அரசியல்வாதி வர்க்கமும் தான் தடைக்கல்லாய் நிற்கும். ஆனால் இவர்களைச் செய்ய வைக்க வேண்டும். ஆனால் எப்படி? இந்த சுய நலக் கூட்டத்தின் நுகழ்ச்சியை சம்மட்டியால் அடிக்க ஏ! இளைய சமுதாயமே நீ, நீ தான் முன் வர வேண்டும். ஓர் எண்ண ஓட்டத்தை உருவாக்குங்கள்.

ஒவ்வொரு மனிதனும் உழைத்து வாழ வேண்டும். எல்லோரும் உழைக்க வாய்ப்பும் தரப்பட வேண்டும். வாழும் காலத்தில் தம் குடும்பத்திற்கு, உற்றார் உறவினருக்கு உதவட்டும். அதன் பின் தனது சொத்தினை அசையாச் சொத்தினை தம் சந்ததிக்கு எழுதி வைக்கக் கூடாது. அதனை சட்டம் தடுக்க வேண்டும். அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தப் பின் இந்த நாட்டின் நிலைமையை சற்று எண்ணிப் பாருங்கள். தன் பிள்ளைக்கு சொத்துக்களை வைத்துவிட்டுப் போக முடியாது என்ற நிலை வந்தால் தவறுகளைச் செய்து சொத்து சேகரிக்க வேண்டும் என்று யார் நினைப்பார்கள்? தானும், தன் மக்களும் வாழ்க்கைச் சக்கரம் ஓட்டுவதற்கு மட்டுமே பணம், சொத்து சேர்ப்பார்கள் இல்லையா? சரி உழைத்து சம்பாதித்த சொத்தினை என்ன செய்வது என்று எண்ணுகிறீர்கள் அல்லவா? விற்கலாம். வரி செலுத்தியது போக மீதம் உள்ளதை தான் அனுபவிக்கலாம். உற்றார் உறவினருக்கு கொடுத்து மகிழ்ந்து வாழலாம்.

ஆனால் அரசிடம் தரப்படும் பணம் அதிகாரிகளால் அரசியல்வாதிகளால் சூறையாடப்படும் என்று அச்சம் உள்ளதா? தேவையில்லை. அவர்களுக்கு தம் சந்ததிக்கு எழுதி வைத்துவிட்டுப் போக முடியாது அல்லவா? பணம் மக்கள் நலனுக்குச் செலவிடும்போது அனைவரும் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். அரசு மக்கள் அனைவரின் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். எனவே வாரிசு சொத்துரிமை தடுப்புச் சட்டம் தேவை என உணருங்கள். இதனைச் செய்ய முடியுமா? என்று சிந்திக்கிறீர்களா? முடியும் ஏன் முடியாது? இதனை இரண்டு சாதிகள் மட்டுமே தடுக்கும். ஒன்று அரசு அதிகார வர்க்கம். மற்றொன்று அரசியல்வாதி வர்க்கம். இந்தச் சட்டம் கொண்டுவர வேண்டிய இடத்தில் இருப்பதும் அவர்களே. திண்ணையில் படுத்திருப்பவன் உட்கார மற்றவர்களுக்கு இடம் கொடுக்க முனகுவான். அதைவிட கூடுதலாக இவன் குறுக்கே நிற்பான்.

எனவே இளைய சமுதாயமே நீ! நீதான் முன் வரவேண்டும். முதலில் இதனை ஒரு கருத்தாக்கமாக ஆக்குங்கள். விவாதமாக ஆக்குங்கள். குறைகள் வந்தால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் இதில் தான் வெற்றிகரமான மாற்றம் கிடைக்கும். மனித சமூகம் ‘வாழ வேண்டுமே’ என்று கவலை சுமந்து வாழும் நிலை மாறும். இப்போது மதத்தில், மதச் சட்டத்தில் தலையிடுகிறீர்கள் என்று சிலர் கூப்பாடு போடுவர். மனிதம் சிறந்து வாழ மதம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர மனிதன் மதத்திற்காக வாழ வேண்டியதில்லை. மனிதனுக்கு அனுசரணையாகத்தான் மதம் இருக்க வேண்டும் என உணர்த்துவோம். வல்லரசாக வரவேண்டும் என்பார் சிலர். யாருக்கு லாபம்? மேற்சொன்ன இரண்டு வர்க்கம் தான் மகிழ்ந்து வாழ முடியும். பெரிய நாட்டுப் பெரிய மனிதன் என்று ஒரு சிலர் வெளிநாட்டானின் மாலை, மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு நாட்டை ஒரு வெள்ளைக் காரனுக்குப் பதிலாக பல வெளிநாட்டானுக்கு விற்கிறார்கள். ஆனால் நல்லரசாக இருந்தால் எவனையும் நாம் ஒன்றுபட்டு எதிர்க்கலாம். நலமாக வாழலாம். எனவே உழைக்க நாமும் கொழிக்க அவர்களுமா? எனவே மாற்றிச் சிந்தியுங்கள். “வாரிசு சொத்துரிமை தடுப்புச் சட்டம் தேவை” என முழங்க முன் வாருங்கள் .

“இது ஒரு பக்கா தனி உடைமை உலகம். தகப்பனுக்கும், மகனுக்கும், புருசனுக்கும், பெண்சாதிக்கும் உள்ள சம்பந்தமே தனி உடைமையைக் குறிக்கொண்ட போட்டி வாழ்வே அல்லாமல் வேறு அன்பையும் காதலையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இதற்கு உதாரணம் வேண்டுமானால் பாகம் பிரித்துக் கொண்ட பிறகும், சீவனாம்சம் பெற்றுக் கொண்ட பிறகும் இவர்களது நடவடிக்கைகளைக் கவனித்தால் விளங்கும்.”

- பெரியார், ‘குடிஅரசு’ 17.10.1937

Pin It