மாநிலக் கல்வித்திட்டம், மெட்ரிக் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மற்றும் கீழ்த்திசைக் கல்வி முறை எனும் நான்கு வழிக் கல்வி முறைகளுக்கு விடை கொடுத்துவிட்டு, அனைவருக்கும் பொதுவான சமச்சீர் கல்வித் திட்டத்தை தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியதை புதிதாக வந்துள்ள அ.தி.மு.க. ஆட்சி நிறுத்தி வைத்துள்ளது. இது, சமூகநீதியில் நம்பிக்கையுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம் போன்ற கல்வி முறையில் படிக்கும் மாணவர்களோடு, ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் போட்டியிட முடியாத ‘பேத நிலை’க்கு சமச்சீர் கல்வித் திட்டம் ஒரு மாற்றுத் திட்டமாக முன் வைக்கப்பட்டது. பாடத் திட்டங்களில் மட்டும் சமச்சீர் நிலையைக் கொண்டு வந்து விட்டு, பள்ளிக் கட்டமைப்புகள் சமச்சீரற்ற நிலையில் இருக்கலாமா என்ற நியாயமான கேள்விகளும் எழுந்தன. இதுபோன்ற குறைபாடுகள் எல்லாம் எதிர் காலத்தில் கவனம் செலுத்தி சரி செய்யப்பட வேண்டியவையேயாகும். சமச்சீர் கல்வித் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகள் இடம் பிடித்திருந்ததால் முதலில் அப்பாடங்களை மட்டும் நீக்குவது என்று அமைச்சரவை முடிவெடுத்தது. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அரசுத் திட்டங் களில் எல்லாம் அவரது பெயர்கள் வலிந்து நுழைக்கப் பட்டன. காலம் உள்ளவரை இனி தி.மு.க. ஆட்சி தான் என்ற மனப் போக்கிலேயே செயல்பட்டனர். அதே கண்ணோட்டத்தில் தான் பாடத் திட்டத்திலும் அவரது எழுத்துகள் திணிக்கப்பட்டன.

இப்போது எழுந்துள்ள கேள்வி, சமச்சீர் கல்வித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது நிரந்தரமாகக் கைவிடப்பட்டுள்ளதா என்பதுதான். இது தொடர்பாக தொடரப்பட்ட பொது நலன் வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞரின் வாதங்கள் இத்திட்டத்துக்கே எதிராக அமைந்துள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதே நேரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தம்மை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினரிடமும், தமிழ் வார ஏடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும் இத்திட்டம் கைவிடப்படாது என்று உறுதியளித்துள்ளார். வல்லுனர் குழு ஒன்று அமைத்து கல்வித் தரத்தை உயர்த்தி இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்கிறார் அமைச்சர்.

மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் மீண்டும் தங்கள் வணிகம் தொடருவதற்கு வாய்ப்புக் கிடைத்து விட்டதால் மகிழ்ச்சிக் கூத்தாடி தமிழக அரசை பாராட்டி, பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அரசின் ஆணையால் ரூ.200 கோடிக்கும் அதிகமாக செலவிட்டு அச்சிடப்பட்ட பாட நூல்கள், வீணாவதை உயர்நீதிமன்றமும் கவலையோடு சுட்டிக் காட்டியுள்ள தோடு, அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகளும், தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளன.

பாடத் திட்டத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் கருத்தாக இருக்குமானால், மேலும் மேலும் பாடங்களை சுமையாக்குவது தரத்தை உயர்த்தி விடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு எளிமையாகவும், அவர்கள் விரும்பி கற்கும் வகையிலும் அவர்களின் பொது அறிவுத்திறனை மேலும் வளர்த்தெடுப்பதாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள பள்ளிப் பாடங்களின் சுமைகளால் வகுப்பறைகள் - மாணவர்கள் விரும்பாத சிறைக்கூடங்களாகவே இருக்கின்றன. அதேபோல் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணக் கொள்ளைகளிலும் இந்த ஆட்சி என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. இது தொடர்பாக அரசு அமைத்துள்ள நீதிபதி ரவிராஜன் குழுவுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே உள்ள பிரச்சினையாக மட்டும் இந்த அரசு இதைப் பார்க்கக்கூடாது. இதில் அரசு தலையிடாது என்று தமிழக முதல்வர் கூறியிருக்கும் கருத்தை மாற்றிக் கொண்டு, மக்கள் கண்ணோட்டத்தில் இப் பிரச் சினையை அணுகவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நியாயமாக தமிழ்நாட்டின் சமூகநீதிப் போராட்ட வரலாறு பாடமாக இடம் பெற்றிருக்க வேண்டும். அதைச் செய்ய முன்வராத முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமது எழுத்துகளைக் கொண்டு வருவதிலே ஆர்வம் காட்டினார். புதிய ஆட்சி அதே அரசியல் பார்வையில் சமச்சீர் கல்வியையே நிறுத்தி வைக்கிறது.

கல்வியும் - கல்வித் திட்டமும் சமூக நீதியோடு பிரிக்க முடியாமல் இணைந்து நிற்கின்றன. இதில் கட்சி அரசியல்  கண்ணோட்டத்தை திணிப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதியாகிவிடும்.

Pin It