அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தி.மு.க. ஆட்சி பதவி ஏற்றவுடன் இரண்டாவது முறையாக பிறப்பித்த உத்தரவை, பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முடக்கிவிட்டனர். அதை நீக்குவதற்கு தி.மு.க. ஆட்சி எந்த முயற்சியும் எடுக்காமல், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி தரும் பள்ளிகளைத் தொடங்கியது. தி.க. தலைவர் கி.வீரமணி, கலைஞரின் இந்த நடவடிக்கை ‘ராஜதந்திரம்’ நிறைந்தது என்று வழக்கம் போல புகழ்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். பயிற்சி முடித்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த சுமார் 300 இளைஞர்களும் எந்தக் கோயிலிலும் அர்ச்சகராகப் பணி புரிய முடியாமல் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.

 

இந்நிலையில் திருவண்ணாமலையிலுள்ள அருணாசல ஈசுவரன் கோயிலில் பிரசாதம் தயாரித்தல்; அபிஷேகம் செய்தல் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரி, இந்து அறநிலையத் துறை பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது. பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற அரசு விளம்பரம் கூறியது. ஆனாலும் அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற பார்ப்பனரல்லாத இளைஞரான அரங்கநாதன் மனு செய்தார். அறநிலையத் துறை அவரது மனுவை ஏற்க மறுத்துவிட்டது. அரங்கநாதன் உயர்நீதிமன்றத்தில் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையையும் அரசு தொடங்கிய அர்ச்சகர் பயிற்சி  வகுப்பை முடித்த கல்வித் தகுதியையும் சுட்டிக் காட்டியிருந்தார். பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற இந்து அறநிலையத் துறை ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசு விதித்துள்ள நிபந்தனையை ரத்து செய்ய முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசு வழக்கறிஞரும் பார்ப்பனர் மட்டுமே அபிஷேகம் செய்தல் மற்றும் பிரசாதத் தயாரிப்பில் ஈடுபட முடியும் என்று வாதிட்டுள்ளார்.

 

நவீன விஞ்ஞானக் கருவிகள், படம் பிடிக்கும் காமிராக்கள், குளிர் சாதனக் கருவிகள், இணையத் தளத் தொடர்புகள் எல்லாம் கோயில் நிர்வாகத்தில் பயன் பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், ‘சாமி’யிடம் நெருங்கு வதற்கு மட்டும் பார்ப்பனரர்களுக்கு மட்டுமே உள்ள பிறவி உரிமைகளை அசைக்க முடியவில்லை. பார்ப்பன ரல்லாதவர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் நுழையக் கூடாத ‘தீண்டப்படாதவர்களாக’ அரசு ஆணைகளும் நீதி மன்றத் தீர்ப்புகளும் கூறும் அவலங்கள் தொடருகின்றன.

 

ஆனால், தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் புரட்சியை முதல்வர் கலைஞர் கருணாநிதி நிறைவேற்றி முடித்துவிட்டதாக பெரியார் நினைவிடத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, கல்வெட்டு வைத்துவிட்டார். இந்த வரலாற்று மோசடியாளர்களை வரலாறு மன்னிக்காது!

Pin It