ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் என்பது நாட்டின் உயர்மட்ட நிறுவனம். இதன் ஆணையர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அப்பதவிக்கு நியமிக்கப்படுகிற நபரைப் பரிந்துரைக்கும் குழுவில் பிரதமர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர்கள் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தப் பதவிக்கு பி.ஜே. தாமஸ் என்ற உயர் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே ஊழல் வழக்கு ஒன்று விசாரணையில்  இருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

1992 ஆம் ஆண்டில் கேரளாவில் கே. கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது வெளிநாடுகளிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டபோது பெரும் ஊழல் நடந்தது. அப்போது உணவுத் துறை செயலாளராக இருந்தவர் இதே பி.ஜே.தாமஸ். இவர் மீதான ஊழல் வழக்கு இன்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதுமட்டுல்ல, இப்போது பரபரப்பாக பேசப்படும் 2ஜி அலைக்கற்றை ஊழல் ஒதுக்கீடுகள் நடந்த போதும் இதே தாமஸ்தான் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் செயலாளராக இருந்தவர். ஆணையர் பதவிக்கு இவர் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க.வைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மன்மோகன்சிங்கும், ப. சிதம்பரமும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

பி.ஜே. தாமஸ் நியமனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அவரது நியமனத்தை ரத்து செய்து மன்மோகன்சிங், ப. சிதம்பரம் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. இந்தப் பிரச்சினையில் சரியான முடிவு எடுக்காமல் தவறு செய்துவிட்டதாக மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். பி.ஜே. தாமஸ் நியமனத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்தபோது அவரைக் காப்பாற்றுவதற்காகவே பிரதமரும், உள்துறை அமைச்சரும் அரும்பாடுபட்டனர். இப்படி ஒரு நெருக்கடிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் தள்ளப்பட்டது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை தேடுவது கடினம் அல்ல.

மத்திய அரசில் நிர்வாக அதிகாரம் இன்று பார்ப்பனர்களிடமும், மலையாளிகளிடமுமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஈழத்தில் இனப் படுகொலையை நடத்திடவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக ஒழிப்பதற்குமான திட்டத்தை மலையாள அதிகாரிகள் குழுவிடம் தான் சோனியா நம்பிக்கையுடன் ஒப்படைத்திருந்தார். இனப் படுகொலைகளை ‘வெற்றிகரமாக’ நடத்தி முடித்து சோனியாவிடம் மலையாள அதிகார வர்க்கம் பாராட்டுகளைப் பெற்ற பிறகு சோனியா, மலையாளிகளையே தனது நம்பகத்துக்குரிய அதிகாரிகளாக பெரும் பதவிகளில் நியமிக்க தொடங்கி விட்டார். அப்படித்தான் மலையாளி பி.ஜே. தாமசுக்கும், இந்த உயர்ப் பதவி அவரது மடியில் வந்து வீழ்ந்தது. சோனியா ஆணையை கைகட்டி நிறைவேற்றியவர்கள் இப்போது உச்சநீதிமன்றம் தலையில் குட்டிய பிறகு நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

Pin It