‘ஈழத் தமிழர் இனப்படுகொலைகளை மூடி மறைத்து, இலங்கை அரசுக்கு துணை நின்ற இந்திய அரசே தமிழர்களிடம் மன்னிப்புக் கேள்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, ஏப்.21 அன்று பல்வேறு ஊர்களில் பெரியார் திராவிடர் கழகம், தோழமை அமைப்புகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஏப்.17 ஆம் தேதி கோவையில் நடந்த மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நான்கே நாட்கள் இடைவெளியில் ஏப்.21 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. தோழர்கள் உடனடியாக களத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளனர். அய்.நா. குழு அறிக்கை வந்தவுடன் தமிழகத்தில் தமிழர்களிடம் இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற முதல் எதிர்ப்புக் கிளர்ச்சியை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பொள்ளாச்சியில் : போர்க்குற்றம் புரிந்த இனவெறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி, பொள்ளாச்சி நகர ஒன்றிய கழகம் சார்பாக 21.4.2011 வியாழன் அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் வே.வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், “இவன் போர்க் குற்றவாளி” என்று எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் தொங்கவிடப்பட்ட  ஒருவர் கையில் விலங்குடன் ராஜபக்சே வேடத்திலும், “தமிழர்களே மன்னியுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் தொங்கவிட்டபடி ஒருவர் மன்மோகன் சிங் வேடத்திலும் கூட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தனர். பொது மக்கள் பெருமளவில் நின்று ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர்.

மன்னிப்புக் கேள்! மன்னிப்புக் கேள்! இந்திய அரசே, மன்னிப்புக் கேள்! போர்க் குற்றத்திற்குத் துணைப் போன இந்திய அரசே, தமிழர்களிடம் மன்னிப்புக் கேள்! போன்ற முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. நகர செயலாளர் குகன் மில் செந்தில், ஆதித் தமிழர் பேரவை தி.செ. கோபால், விடுதலை முன்னணி மாரிமுத்து, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ரத்தின சபாபதி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் வழக்கறிஞர் இளங்கோவன், தமிழ்நாடு மாணவர் கழகம் நல்லதம்பி ஆகியோரது தலைமை யில் இயக்கத் தோழர்களும், கழகப் பொறுப் பாளர்கள் சி. விசயராகவன், காசு. நாகராசன், வே. அரிதாசு, அப்பாதுரை, மணிமொழி, ஆனந்த், உத்தர ராசு, த. கண்ணன், இரா. சீனிவாசன், கஸ்தூரி, தோழர்கள் கலை இராசேந்திரன், த. இராசேந்திரன், கு. வெங்கடேசு, யாழ் மணி, கா.க.புதூர் உதயகிரி, முருகானந்தம், இராமகிருட்டிணன், அசோக், பேச்சிமுத்து உள்ளிட்ட ஏராளமான தோழர்கள், மாணவர்கள், சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர் கழக அமைப்பாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

ஈரோட்டில் : 21.4.2011 அன்று இந்திய அரசைக் கண்டித்து மாலை 4.30 மணிக்கு ஈரோட்டில் தலைமை அஞ்சலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் திராவிடர் கழகம் மற்றம் தோழமை அமைப்பு கள் சார்பாக நடை பெற்றது. மாநில செயற் குழு உறுப் பினர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இராம. இளங் கோவன், மாவட்ட தலைவர் நாத்திக சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சி கரமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் பூங்கொடி சாமிநாதன், ராமகிருட்டிணன் (ம.தி.மு.க.), தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் ராசு, வழக்கறிஞர் சிதம்பரன், செழியன் (நாம் தமிழர் கட்சி), கணகுறிச்சி, இராம. இளங்கோவன், இமயவரம்பன் (ஆதித் தமிழர் பேரவை) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அனைத்து தோழர்களும், சமீபத்தில் தீக்குளித்து மாண்ட பொறியாளர் கிருட்டிண மூர்த்திக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மவுன ஊர்வலமாக தலைமை அஞ்சலகம் முன்பாக புறப்பட்டு, பெரியார் சிலை, பன்னீர் செல்வம் பூங்கா, கடைவீதி, மணிக்கூண்டு வழியாக வந்த பெரியார் நினைவுத் தூண் அருகே மவுன ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவரும், சீரிய இன உணர்வாளரும் ஆகிய வழக்கறிஞர் ப.பா. மோகன் உரையாற்றினார். பின்பு இரண்டு நிமிடம் மவுனமாக அனைத்து தோழர்களும் கிருட்டிணமூர்த்திக்கு அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தினர். அத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டது மிகவும் எழுச்சியாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி செயலாளர் அர்ச்சுனன், கோபி நகரச் செயலாளர் செயராமன், ஈரோடு மாநகர பொறுப்பாளர் சிவா, சுப்பிரமணியன், தனராசு, முருகானந்தன், பிரபாகரன், மோகன், பழனிச்சாமி (பவானி), மாதுராசு, சுவாமிநாதன், கைலாசம், ஆர்.என்.புரம் குமார், கோபி ஜெகநாதன், கோபி நகர அமைப்பாளர் குணசேகரன், எலத்தூர் இரவி, நம்பியூர் ஒன்றிய தலைவர் அருளானந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர் புதுரோடு இராசேந்திரன், கோபி ஒன்றிய தலைவர் விசயசங்கர் மற்றும் ம.தி.மு.க., நாம் தமிழர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை ஆகிய அமைப்பைச் சார்ந்த தோழர்களும் பங்கெடுத்து சிறப்பித்தனர்.

சென்னையில் : சென்னையில் ஏப்.21 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், வழக்கறிஞர் குமாரதேவன், ஊடகவியலாளர் அய்யநாதன், உடுமலை தமிழ்ச் செல்வன், வழக்கறிஞர் அமர்நாத் ஆகியோரை தொடர்ந்து விடுதலை இராசேந்திரன், அய்.நா. குழுவின் அறிக்கை இந்தியாவின் துரோகங்களை விரிவாக விளக்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் உமாபதி நன்றி கூறினார். இடையில் - மழை வந்த நிலையிலும் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடந்தது.

கரூரில் : கரூரில் இந்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கு.கி. தனபால் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கு. ராசா, மாவட்ட செயலாளர் க. முருகேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி செல்வ. நன்மாறன், நகர ம.தி.மு.க. செயலாளர் பாலமுருகன், பெண்கள் முன்னணி செயலாளர் டானியா, ஆதி தமிழர் பேரவை வீரமுருகு, முல்லையரசு, துரை அமுதன், திருமதி ராணி, தமிழர் தேசிய இயக்கம் சந்திரன், வழக்கறிஞர் இராசேந்திரன், காமராஜ், கழகத் தோழர்கள் குப்புசாமி, முகமது அலி, சரவணன் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இரா. அதியமான் நன்றி கூறினார்.

மதுரையில் : ஈழத் தமிழர் இனப் படுகொலை அய்.நா. மன்றத்திற்கு பொய்யான தகவல் அளித்த இந்திய அரசைக் கண்டித்து ஏப்.21 அன்று மாநகர் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் அ. பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மு. தமிழ்ப் பித்தன், வெண்மணி, அ. முருகேசன், விடுதலை சேகர், ஸ்டாலின் இளங்கோ, கைவண்டிக் கறுப்பு, மா.மாயாண்டி, நசீர், தோழர்கள் தமிழ்க் கூத்தன் (புரட்சிக் கவிஞர் பேரவை), மு. கருப்பையா கதிர் நிலவன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), வழக்கறிஞர் அருணாச்சல், இராசேந்திரன் (தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), வேம்பன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), பொன்மாறன் மற்றும் வழக்கறிஞர்கள் பகத்சிங், பாரதி, பெரியார் வேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில்: ‘இந்திய அரசே தமிழர்களிடம் மன்னிப்புக் கேள்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையில் ஏப்.21 ஆம் தேதி அஞ்சலகம் எதிரில் நாகை மாவட்டக் கழகத் தலைவர் இரஷீத்கான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் இரமேஷ், இளையராசா, நகர கழகப் பொறுப்பாளர்கள் நாஞ்சில் சங்கர், இயற்கை, மு. அன்பரசன், ராஜராஜன், சீர்காழி நகர செயலாளர் ரமேஷ், நகர துணைசெயலாளர் ராஜராஜன், சீர்காழி நகர தலைவர் பிரபாகரன், மாரியப்பன், தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தைச் சார்ந்த இரா. முரளீதரன், தமிழர் உரிமை இயக்கத்தைச் சார்ந்த அன்பு. மகேஷ், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சார்ந்த தனவேந்திரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில்: ஈழப் போரில் ராஜபக்சே போர் குற்றம் புரிந்துள்ளார் என ஐ.நா. ஆய்வுக் குழு அறிவித்துள்ள நிலையில் போர் குற்றத்தை மூடி மறைந்த இந்திய பார்ப்பன அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 21.4.2011 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் கோ. அ.குமார் தலைமை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் சி.ஆ. காசிராசன், ஆழ்வை ஒன்றியத் தலைவர் நாத்திக பா. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் தத்துவ விளக்க அணி தலைவர் அ. வியனரசு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் சுஜித், தூத்துக்குடி மாவட்ட கழக மாவட்ட ணைத் தலைவர் வே. பால்ராசு, மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு ஆகியோர் உரைக்குப் பின் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி விளக்கவுரையாற்றி, ஆர்ப்பாட்ட நிறைவுரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகரத் தலைவர் சா.த. பிரபாகரன் நன்றி கூறினார்.

நிகழ்வில் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால். அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் க. மதன், மாவட்ட அமைப்பாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், அமிர்தராஜ், ரவிசங்கர், வ. அசுரன், தமிழ்ப் புலிகள் மார்க்ஸ்,சோசப், தமிழரசன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சேலத்தில்: சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய அரசே! தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு மன்னிப்பு கேள்! இலங்கை அரசின் போர்க் குற்றங்களை உடனே விசாரிக்க வலியுறுத்து! ஐ.நா.வின் விஜய் நம்பியார் போன்றோரின் துரோகப் போக்குக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்! ஈழத் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரி! ஆகிய முழக்கங்களோடு கண்டன ஆர்ப்பாட்டம், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் இளமாறன், அறிஞர் அம்பேத்கர் அமைப்புச் சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் அரங்க. செல்லதுரை, வழக்கறிஞர் ஆனந்தராஜ், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் மாநில தலைவர் பூமொழி, சேலமே குரல் கொடு அமைப்பின் நிறுவனர் பியூஸ், சேலம் மக்கள் குழு லக்ஷ்மி, பாபிகுன்னு, சிவப்பிரியன் ஆகியோரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Pin It