வாக்காளருக்கு விலை; தனி நபர் விமர்சனங்கள்


தமிழ்நாடு தேர்தல் களத்தில் இப்போது விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியிருக்கிறது. தி.மு.க. - அ.தி.மு.க. அணிகளுக்கிடையே மட்டும் கடும் ‘மோதல்’ நடக்கவில்லை. ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும், தேர்தல் ஆணையத்துக்குமிடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மீது முதல்வர் கலைஞர் கருணாநிதி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கூட தேர்தல்கள் நடக்கின்றன. அங்கெல்லாம், ஆளும் கட்சிகளோ, அம்மாநில முதல்வர்களோ தேர்தல் ஆணையத்தை குற்றக் கூண்டில் நிறுத்தவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை என்ற கேள்வி நியாயமாக எழுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து நமக்கும் விமர்சனங்கள் உண்டு. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் காலங்களில் மட்டுமே மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளி லிருந்து சற்று விலகி, நாட்டில் நடக்கும் சமூக அரசியல் பிரச்சினைகளுக்கு காது கொடுக்கிறார்கள். வீதிக்கு வீதி நடக்கும் அரசியல் கூட்டங்களே அதற்குக் காரணம். அத்தகைய பரப்புரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடிவாளம் போடுவது, கட்டுப் பாடுகளை விதிப்பதில் நமக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் தேர்தல் முறை கேடுகளை தடுத்து நிறுத்துவதில் தேர்தல் ஆணையம் நேர்மையாக முனைப்பாக செயல் படுவதை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, தேர்தல் என்றால், வாக்காளர்களுக்கு ‘விலை’ நிர்ணயிக்கும் விற்பனை சந்தையாக மாறி நிற்கிறது என்பது தமிழ்நாட்டையே தலைகுனிய வைக்கும் அரு வெறுக்கத்தக்க உண்மை. தேர்தலில் முறைகேடுகள் என்பது பரவலாக எல்லா ஆட்சி காலத்திலும் நடந்தே வந்துள்ளன. ஆனால் முறைகேடுகளை கோட்பாடுகளாக்கி அதற்கான ‘வழிமுறைகளை’ விதிகளாக்கி அரசு எந்திரத்தைப் பணிய வைத்து, ‘திருமங்கலம் பார்முலா’ என்று பெயரும் சூட்டப் பட்டு, மக்கள் கருத்துக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் முறையை தி.மு.க. தான் அறிமுகப்படுத்தியது என்பதை மறுக்கவே முடியாது; ‘திருமங்கலம் பார்முலா’ என்று பெயர் சூட்டியவரே தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தான். அந்த ‘பார்முலா’வை செயல்படுத்த முடியாமல் தேர்தல் ஆணையம் தடுக்கிறது என்பதே, ஆளும் தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் மீதான ஆத்திரமாக உருவெடுத்திருக்கிறது.  தி.மு.க. தொடங்கி வைத்த இந்த ‘முறைகேடு’ நாளைக்கு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இன்னும் தீவிரமாகவே அமுலாகும். மக்களின் கருத்துகளை ஏலம் கூவி, விலை பேசும் ஒரு தேர்தல் முறையை ‘ஜனநாயகம்’ என்ற அமைப்புக்குள் புகுத்துவது கேவலத்திலும் கேவலம்.
1947 லேயே கட்சி தொடங்கி, 1957 ஆம் ஆண்டி லிருந்து போட்டியிட்டு, 1967-லேயே ஆட்சிக்கு வந்த நீண்ட பாரம்பர்யம் உள்ள கட்சி தி.மு.க. அ.இ. அ.தி.மு.க.வுக்கு அத்தகைய அரசியல் பின்புலமோ, சிறப்போ கிடையாது. மறைந்த மக்கள் செல்வாக்குப் பெற்ற எம்.ஜி.ஆர். என்ற தனி மனிதர் கட்சியாக செயல்பட்டதுதான் அ..அ.தி.மு.க. - இப்போது ஜெயலலிதா என்ற தனி மனிதரின் கட்சியாகவே இருக்கிறது. ஆனால், அறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வெ.கி. சம்பத், என்.வி. நடராசன் போன்ற மூத்த தலைவர்களால் வழி நடத்தப்பட்ட தி.மு.க.வும், இப்போது கலைஞர் கருணாநிதி என்ற தனி மனிதரோடும், அவரது குடும்பத்துக்குள் அடங்கிய கட்சியாகவுமே மாறியிருப்பதை எவர்தான் மறுக்க முடியும்?
நடிகர் நடிகை பட்டாளங்கள் இரு தரப்பிலும் பிரச்சார பீரங்கியாக களம் இறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. களம் இறக்கியுள்ள ஒரு சிரிப்பு நடிகர், தே.மு.தி.க. தலைவரை மட்டுமே தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து பேசுவதை தி.மு.க. அனுமதித்து அதிலே மகிழ்ச்சியடைகிறது. இதற்கு சம போட்டியாக அ.தி.மு.க. தரப்பு மற்றொரு சிரிப்பு நடிகரை அதே தரத்தில் பேச களமிறக்கியுள்ளது. சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவுக்கு “பிராமணர்கள்” ஓட்டுப் போடலாமா என்று திருவரங்கத்தில் தி.மு.க. பேச்சாளர் ஒருவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையிலேயே பேசியுள்ளார். கொலைக் குற்றமே செய்திருந்தாலும் காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்யக் கூடாது என்பது தான் தி.மு.க.வின் கருத்தா, என்பது நமக்குப் புரியவில்லை.
ஆணவத்தையும் அகம்பாவத்தையும் உறுதியின் வெளிப்பாடுகளாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, தி.மு.க. தரப்பை ‘ரவுடிகள்’ என்றும் ‘தாதாக்கள்’ என்றும் தரக்குறைவாக ‘அர்ச்சித்து’ வருகிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் ஏதோதோ உளறுகிறார்; இடதுசாரிகள் மட்டும் இவற்றுக்கு விதிவிலக்காக அரசியல் பேசுகிறார்கள் என்று கூறலாம்!
தி.மு.க. அணியை ஆதரித்து களம் இறங்கியுள்ள தி.க. தலைவர் கி. வீரமணியோ, பன்னாட்டு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அனுமதித்திருப்பது தான் தி.மு.க. ‘சாதனை’ என்கிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும், வளத்தையும், உழைப்பு சக்தியையும் சுரண்டி, பார்ப்பன அதிகார வர்க்கத்தை கொழுக்க வைப்பதே, இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தான் என்ற அடிப்படையான பார்வைகூட அவரிடம் இல்லை. “தி.மு.க. ஆட்சியில் 57 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீடுகளுடன், தொழிற்சாலைகள் 5 ஆண்டுகளில் துவங்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டியுள்ளது. இதனால் தான் குறிப்பிட்ட அளவிற்கு அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது” என்று மக்களுக்கு எதிராக நோக்கியா, டாட்டா, அம்பானி நிறுவனங்களின் பிரதிநிதியாக நின்று பேசுகிறார், ‘தமிழர் தலைவர்’ என்று கூறிக் கொள்ளும் வீரமணி!
வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பல்வேறு வழி களில் பணம் கொண்டு போகப்படுவதும், பிடிபடு வதும் செய்திகளாக வருகின்றன. தலைவர்கள், அமைச்சர்கள் பாதுகாப்புக்காக உடன் செல்லும் காவல்துறை வாகனங்களில் பணம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன.
•    பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங் களுக்கும் சாதகமான பொருளாதாரக் கொள்கைகள்.
•    கிராமங்களில் தலைவிரித்தாடும் சாதி தீண்டாமை ஒடுக்கு முறைகள்.
•    மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்கள்.
•    ஈழத் தமிழர் பிரச்சினை.
•    தமிழகத்தின் தொழில் வளர்ச்சி.
•    தேசிய பாதுகாப்பு சட்டங்களை முறைகேடாகப் பயன்படுத்தி கருத்துரிமைகளை ஒடுக்குதல்.
•    அழிந்து வரும் சிறு தொழில்கள்.
•    வசதி படைத்தோருக்கும் வறுமையில் வாடும் மக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி.
•    மீனவர் மீது தொடரும் தாக்குதல்.
•    அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும், ‘தமிழர் தலைவர்களும்’ நடத்தும் கல்வி வியாபாரங்கள்.
•    பறிபோகும் நதி நீர் உரிமைகள்.
- இப்படி எத்தனையோ, அடிப்படைப் பிரச் சினைகள்-தேர்தல் களத்தில் மறைந்தே போய் விட்டன.
கிரைண்டர், மிக்சி, விசிறி, ஆடு - இவைகள் தான் தேர்தல் பிரச்னைகள். இவர் குடிக்கிறார்; அவர் அடிக்கிறார் என்பதையே தொலைக்காட்சிகள் - திருப்பி திருப்பி ஒளிபரப்புகின்றன.
மேற்கு வங்கம், அசாம், கேரள மாநிலங்களைவிட தமிழக தேர்தல் களம் தலைகுனிந்து கிடக்கிறது.
பெரியார் கூறுகிறார்: “பல கட்சிகள் இருக் கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும், ஒரே நோக்கமும் கொண்டவை களாகவே இருக்கின்றன. மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெருவாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும் தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சட்டத்தையோ - ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியல் பெயரால் கட்சியே இல்லாமல் போய் விட்டது.” 
- பெரியார் (‘விடுதலை’ 15.9.1957)

Pin It