இந்தியாவில் ஓர் உண்மையான கூட்டாட்சி அமைக்கப் பாடுபடுவதே மா.பெ.பொ.க.வின் அரசியல் இலக்கு ஆகும்.

இந்த இலக்கை அடைவதற்கான வேலைத் திட்டங்கள்

1.          தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக்குடியிருப்புகள் இருப்பதை அகற்றித் தாழ்த்தப்பட்டோரும் மற்ற பிரிவினரும் கலந்து குடியிருக்கிற தன்மையில் கலப்புக் குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். சாதிக்கு ஒரு சுடுகாடு இருப்பதை ஒழிக்க வேண்டும்.

2.          நில உச்சவரம்புச் சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்து, கிடைக்கும் உபரி நிலம், அரசுப் புறம்போக்கு நிலம் இவற்றை நிலமற்ற ஆதித் திராவிடக் கூலி விவசாயத் தொழிலாளிகளுக்கும், மற்ற வகுப்பிலுள்ள நிலமற்றோருக்கும் கிடைக்கச் செய்யப் போராட வேண்டும்.

3.          இந்தியாவிலுள்ள எல்லா வகுப்பு மக்களுக்கும் கல்வியிலும், வேலையிலும் விகிதாச்சார இடஒதுக்கீடு வர வழிகாண வேண்டும்.

4.          அந்தந்த மாநில எல்லைக்குள் அமைந்து இயங்கும் இந்திய மைய அரசின் அலுவலகங்கள் எல்லா வற்றிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியே அலுவல் மொழியாக ஆக்கப்பட வேண்டும்.

5.          இந்திய ஆட்சிப் பணி அய்.ஏ.எஸ்., (அய்.பி.எஸ்.) என்பது அடியோடு ஒழிக்கப்பட்டு, ஆட்சிப் பணிப் பொறுப்பு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்தியக் காவல்துறைப் பணி, இந்திய நீதித் துறைப் பணி முதலானவையும் ஒழிக்கப்பட்டு மாநிலங்களிடமே இவை ஒப்படைக்கப்பட வேண்டும்.

6.          இந்திய உச்சநீதிமன்றம் என்பது உடைக்கப்பட்டு அந்தந்த மாநிலத்திலேயே உச்ச அதிகாரம் படைத்த நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.

7.          ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியான அரசியல் அமைப்புச் சட்டம், தனிக்குடியுரிமை, தனிக்கொடி, தனிப் பாதுகாப்புப் படை இவற்றை உள்ளடக்கிய தாக-ஒவ்வொரு மாநிலமும் தன்னுரிமை படைத்த தாக உருவாக்கப்பட வேண்டும்.

இன்று நம்மிடையே உள்ள பெரியார் தொண் டர்கள் இப்புரிதல்களுடன் ஒருங்கிணைவதாலும், சம தர்மவாதிகளும், மார்க்சிய-பெரியாரிய அம்பேத்கரியத் தொண்டர்களும் ஒன்றிணைவதாலும் இன்னும் ஒன்றி ரண்டு தலைமுறைக் காலத்தில் இந்தக் குறிக்கோளை நிறைவேற்ற முடியும்.

எது நமக்கு வெற்றி?

1.          எல்லாத் தரப்பு மக்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிந்திக்கும் ஆற்றலைத் தரும் கல்வி ­ஒரே தன்மையிலான கல்வி - இலவசமாகவும், கட்டாயமாகவும் 18 வயது வரை அரசினால் வழங்கப்பட வேண்டும். எல்லா நிலைக் கல்வியிலும், அரசின் அன்றாட நடப்பிலும் இந்து மதம் பிரிக்கப்பட வேண்டும்.

2.          18 வயது நிரம்பிய ஆணுக்கும் பெண்ணுக்கும் ­எல்லாத் தரப்பினர்க்கும் குறைந்த அளவு வாழ்க்கை அனுபவிப்பு வசதிக்கான வேலை உறுதியை ­உத்தரவாதத்தைக் கட்டாயம் அரசு வழங்க வேண்டும்.

3.          எல்லா வகுப்பு மக்களும் - ஆண்களும் பெண்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஆட்சியிலும் அதிகாரத்திலும் சம வாய்ப்பும் பங்கும் பெற உறுதி அளிக்கிற ஓர் அரசு வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வளவு உரிமைகளும் மறுக்கப்பட்ட மக்களை அதிக அளவில் கொண்ட இந்தியாவில் - மேலே கண்ட குறிக்கோள்களைக் கொண்ட ஓர் அரசு நம்மால் அமைக்கப்பட்டாலொழிய ­பெரியாரின் குறிக்கோளை நாம் என்றும் வென்றெடுக்க முடியாது.

கி.பி.2100இல் இது முடிந்தாலும் அது தான் நமக்கு வெற்றியாகும்.

வேண்டும் திடமான மொழி உணர்வு

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழி, தமிழே வழி பாட்டு மொழி, வீட்டுச் சமயச் சடங்குமொழி என்கிற நிலையை எப்பாடுபட்டேனும் நாம் உண்டாக்கித் தீர வேண்டும்.

இவ்வாறு மானிட உரிமை, வாழ்வுரிமை, மொழி உரிமை, கல்வி பெறும் உரிமை, மருத்துவம் பெறும் உரிமை இவையெல்லாம், எல்லா மக்களுக்கும் வந்து சேர இன்றுள்ள அரசியல் சட்டமோ, ஆட்சி முறையோ கிஞ்சிற்றும் பயன்படாது. இவற்றைத் தூக்கி எறிய வேண்டும் என்கிற திடமான உணர்வு நம்மில் ஒவ்வொரு வருக்கும் ஆடவர், மகளிர், இளைஞர், மாணவர் ஆகிய ஒவ்வொருவருக்கும் வந்து தீர வேண்டும்.

அனைவரையும் அறைகூவி அழைக்கிறேன்

தனியுடைமையை ஒழித்து சமதர்ம முறையை ஏற்றுக்கொள்ளும் அரசு-எல்லார்க்கும் கல்வி, வேலை, மருத்துவம் இவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க உறுதி தரும் அரசு என்ற இத்தன்மையுள்ள அரசை அமைப்பதை நோக்கி மக்களை அழைத்துச் செல்வதே பெரியார் கொள்கை என்றேனும் ஒரு நாள் வெற்றி பெற வழியாகும்.

எனவே, பெரியார் நிறுவிய கொள்கைகளை வரித்துக் கொண்ட நாம் - மற்றும் மார்க்சிய லெனினியக் கொள்கை கொண்ட கட்சியினர் அமைப்பினர், ஊரறிந்த பொதுவுடைமைக் கட்சியினர், அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து மார்க்சிய - லெனினிய - பெரியாரிய­ அம்பேத்கரியக் கொள்கைகள் இந்தியாவில் வெற்றி பெற ஏற்றதோர் அரசை அமைக்கப் பாடுபடுவோம் வாரீர் என அன்புடன் அறைகூவி அழைக்கிறேன்.

- வே.ஆனைமுத்து