21.7.2010 கோவை படிப்பகத்தில் மாலை 6 மணிக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கனடா நாட்டின் தொல் பொருள் ஆராய்ச்சி யாளர் டாம்மெக்கலே கலந்து கொண்ட பெரி யாரியல் பயிலரங்கம் மற்றும் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடை பெற்றது. 

டாம் மெக்கலே தமிழ்நாட்டைச் சார்ந்த நைவால் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்தார். அதில் தந்தை பெரியார் பற்றியும், அவரின் நாத்திகக் கருத்துகளும் இடம் பெற்றிருந்ததையும் படித்த அவர், பெரியாரினால் ஈர்க்கப்பட்டார். ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அவர் மருத்துவர் எழிலன் தொடர்பால் பெரியாரைப் பற்றி மேலும் பல செய்திகளை அறிந்து வியந்து போனார். இதனையடுத்து,தமிழ்நாடு வந்த டாம் மெக்கலே, மருத்துவர் எழிலன்,பெரம்பலூர் இலட்சுமணன் ஆகியோர் உதவியுடன் ஈரோட்டிலுள்ள பெரியார் வீடு, நினைவிடம் போன்றவற்றை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் சட்ட எரிப்புப் போராட்ட பெரியார் தொண்டர்களை சந்தித்துப் பேசி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டார். பின்னர் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் இயங்கும் கலப்புத் திருணமம் புரிந்தோர் சங்கம் (சாதி ஒழிப்புத் திருமணம்),பெரியார் குருதி கொடை இயக்கம் ஆகியவற்றை அறிந்து,பெரியார் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு கோவை படிப்பகத்திற்கு வந்து அனைவரையும் சந்தித்தார். 

டாம் மெக்கலே வருகையொட்டி அவர் தோழர்களை சந்திக்கும் வகையில் குறுகிய நேரத்திலேயே ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறுஞ் செய்தி மூலம் நிறைய செய்திகள் அனுப்பப்பட்டு, நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

இந்தியாவில் நிலவும் சாதி வேறுபாடுகள் தீண்டாமை போன்றவை கண்டிக்கப்பட வேண்டியவை. பெரியாரின் கொள்கையில் இருக்கும் உங்களை சந்தித்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். நான் பெரியாரின் புத்தகங்களை வாங்கி, எங்கள் நாட்டின் நூலகங்களிலும் பொது மக்கள் படிக்கவும், கனடா மொழியில் மொழி பெயர்த்து வெளியிடவும் இருக்கிறேன். இளைஞர்களாகிய நீங்கள் பெரியாரின் பாதையில் தொடர்ந்து செயல்படுங்கள்; போராடுங்கள்; உங்களை போன்றவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார்.

டாம்மெக்கலே உரைக்குப் பின் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தோழர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். பயிலரங்கில் டாம்மெக்கலே உரையும் கேள்வி பதில்களையும் தோழர் பிச்சுமணி மொழி பெயர்த்தார். முடிவில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தலைவர் ந. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.

செய்தி: கோவை நாகராசன்

Pin It