(1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்) 

சுயமரியாதை இயக்கம், அதன் மதமறுப்புக் கொள்கை வழி நின்று சைவத்தையும், சைவ அடியார்களையும், சைவ மதக் கோட்பாடுகளையும், ‘குடிஅரசு’, ‘திராவிடன்’ இதழ்கள் வழியாக கேள்விக்குட்படுத்தி வந்ததை சைவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பார்ப்பனியத்தையும், பார்ப்பனர்களையும், வைணவ மதப்பிரிவையும், வைணவர் களையும் சுயமரியாதை இயக்கம் கண்டித்தபோது, ஆனந்தக் கூத்தாடி, ஆதரித்து வந்த சைவர்கள், சைவத்தை கை வைத்தபோது பதறிப் போனார்கள். சைவத்தை அரசு மதமாக்கி, தீண்டாமை யையும் சேரியையும் நிறுவன மாக்கியவன்தான் இராஜ ராஜசோழன். அதே சுயமரியாதை இயக்கப் பார்வையில் இப்போதும் பெரியார் திராவிடர் கழகம், இந்த சைவ அரசர்களை விமர்சித்தால், “பொதுவுடைமை புரட்சியாளர்கள்” மன்னராட்சிக்கு முட்டுக் கொடுக்க ஓடி வருவதுதான் வேடிக்கை. 

1930 ஆம் ஆண்டு கருந்திட்டைக்குடி எனும் ஊரில் அன்று சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி தலைவர் களில் ஒருவராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம், சுயமரியாதைக்காரர்கள் புராணங்களைப் பொய் என்று பேசு கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்தார்: 

“அது பச்சையான பொய்யாகும். சைவ புராணங்கள் எல்லாம் பொய் என்பதை வைணவப் பண்டிதர்கள்தான் கண்டுபிடித்துக் கூறினார்கள். வைணவப் புராணங்கள் எல்லாம் பொய் என்பதை சைவப் பண்டிதர்கள்தான் கண்டுபிடித்துக் கூறினார்கள். எல்லாப் புராணங்களும் பொய் என்பதை சுயமரியாதைக்காரன் ஒரு வேளை கூறியிருக்கலாம்” என்று கிண்டலாகக் கூறினார். 

சுயமரியாதை இயக்கத்தின் கேள்விகளால் திணறிப் போன சைவர்கள் அதை எதிர்கொள்ளத் தீவிர செயல் திட்டங்களை உருவாக்கி, நாடு முழுதும் சைவப் பரப் புரையாளர்களை அனுப்பி, சுயமரியாதை இயக்கத்தைச் சாடத் தொடங்கினர். இதற்காக திட்டங்களை உருவாக்க தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம், சென்னையில் கூடி விவாதித்து, பிறகு திருநெல்வேலியில் மாநாடு ஒன்றைக் கூட்டியது. 1929 ஆம் ஆண்டு மார்ச் 29, 30, 31 தேதிகளில் அந்த மாநாடு நடந்தது. சுயமரியாதை இயக்கத்தின் பரப்புரைத் தாக்கத்தால் சைவ மதத் தலைவர்களிடையே கடும் குழப்பங்களும் முரண்பாடு களும் தலைதூக்கி நின்றன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், மாநாட்டையும் ஆழமாக, விமர்சிக் கும் கட்டுரைகளை ‘ரிவோல்ட்’ வெளியிட்டது. “எல்லா காலத்துக்கும் எந்த சமூகத்துக்கும் பொருத்தமான உலக முழுமைக்குமான அன்பை வலியுறுத்துவதே சைவம்” என்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ‘ரிவோல்ட்’ கேள்விக்கு உட்படுத்தியது. 

உலகத்துக்கே அன்பை போதிக்கும் சைவம், சமணத் தையும், புத்தத்தையும் அழிப்பதில், முனைப்புக் காட்டியது ஏன்? புராணங்கள் இதைத் தானே கூறுகின்றன. 

இப்படி அழித்ததைக் கொண்டாடுவதற்காகவே சைவ கோயில்களில் திருவிழாக்களையும் கொண்டாடு கிறார்களே! இப்படி சைவத்தைப் போற்றுகிற கூட்டம், உலக மதங்களை வெறுப்பதில் முன்னணியில் நிற்பது தெரியாதா? சைவத்தின் எல்லை, சைவ சாப்பாடு என்பதோடு நின்று போய் விடுகிறது. சைவ மதத்துக்கு மாறி, பிறகு சைவ உணவுக்கு மாறியவர்களுடன் பரம்பரை சைவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதில்லையே! சமபந்தியில் உட்கார மறுக்கிறார்களே. சைவத்தின் ஒரு அடையாளம் சாப்பாடு என்றால், மற்ற அடையாளங்களாக நெற்றியில் விபூதி, தலையில் பின் கொண்டை, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை என்பது தானே! இவைதான் சர்வதேச மதத்துக்கான அடையாளங்களா?” என்று கேட்டது ‘ரிவோல்ட்’! 

நெல்லை மாநாட்டில் எல்லோருக்கும் கோயில் நுழைவு வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி யவர்கள் அதே நேரத்தில் தூய்மையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஒரு நிபந்தனையைப் போட்டு மறைமுகமாகத் தீண்டாமையை நியாயப்படுத்தியதை ‘ரிவோல்ட்’ கண்டித்தது. 63 நாயன்மார்களில் ஒருவராக தீண்டப்படாத சாதியைச் சார்ந்த நந்தன் அங்கீகரிக்கப்பட்டதை சைவர்கள் பெருமை பேசு கிறார்கள். நந்தனார் நாயன்மார் ஆனது இருக்கட்டும்; இப்போது வாழும் நந்தனார்கள், விலங்குகளைவிட மோசமாக நடத்தப்படுகின்றார்களே, அவர்களுக்கு சமத்துவத்தை வழங்க சைவம் முன் வருமா? கடவுள் முன்னால் பாகுபாடு காட்டக் கூடாது என்ற ‘நந்தன் தத்துவத்தை’ நடைமுறையில் செயல் படுத்த, சைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? என்று ‘ரிவோல்ட்’ அறைகூவல் விடுத்தது. (10.4.1929) 

சைவத்தில் ஆழமான புலமை பெற்றவரும், சுய மரியாதைக்காரருமான நாகர்கோயில் வழக்கறிஞர் பி.சி. சிதம்பரம்பிள்ளை, சைவம், பார்ப்பனியத்திடம் மண்டி யிட்டுக் கிடப்பதை அடுக்கடுக்கான சான்றுகளுடன் விளக்கி,  நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ‘ரிவோல்ட்’டில் எழுதினார்.

தன்னுடைய வாதங்களுக்கு சான்றாக, சைவ சித்தாந் தத்தில் ஆழமான புலமை கொண்டவரும், நீதிபதியாக இருந்தவருமான கே.சுப்பிரமணியபிள்ளை, முன் வைத்த கருத்துகளைப் பயன்படுத்தினார். கோயில்களை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக அறநிலையத் துறை என்ற அமைப்பு உருவாக்குவதற்கான சட்டம் வந்த போது, நீதிபதி சுப்ரமணிய பிள்ளை தெரிவித்த கருத்து களை சிதம்பரம் பிள்ளை மேற்கொள் காட்டி எழுதினார். 

சைவக் கோயில்களில் பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக முடியாது என்றுதான் சைவ நெறிகள் கூறு கின்றன. ஆனால், “ஸ்மார்த்தர்கள்” (பார்ப்பனர்கள் - ஸ்மார்த்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்) அர்ச்ச கர்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது சைவ நெறிகளுக்கே விரோத மானது. கோயிலுக்கு சென்று வழிபடும் சராசரி சைவரும், வைணவரும் வழிபாட்டின் நோக்கமே புரியாதவர்களாக இருக்கிறார்கள். 

ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள், கோயில் கர்ப்பகிரகத் துக்குள் நுழைவதே அரசனுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்பதால், அவர்கள் கரு வறைக்குள் நுழைவதையே கோயில் வழிபாட்டு முறை களைக் கூறும் ஆகமங்கள் தடை செய்துள்ளன. வெள் ளாளர்களின் உட்சாதிப் பிரிவான ஆதி சைவர்களுக்கு மட்டுமே சைவ கோயில் கருவறைக்குள் பூசை செய்யும் உரிமை உண்டு. ஆனால், பார்ப்பனர்களிடம் ஆதி சைவர்கள் தங்களது உரிமையை அறிவீனத்தின் காரணமாக விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று நீதிபதி சுப்ரமணிய பிள்ளை, ஆகமங்களையே ஆதாரமாகக் காட்டி கூறியிருப்பதை பி.சி. சிதம்பரம் பிள்ளை ‘ரிவோல்ட்’டில் எடுத்துக் காட்டினார். 

சைவக் கோயில்களில் சைவ நெறிமுறைகளுக்கு எதிராக பார்ப்பனர்கள், சமஸ்கிருத வழிபாட்டைப் புகுத்தியதையும், திருச்செந்தூர், ராமேசுவரம் போன்ற சைவக் கோயில்களில் பார்ப்பனர்கள், தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்த மேற்கொண்ட சூழ்ச்சியான நடைமுறைகளையும், ராமேசுவரம் கோயில் நிதியிலிருந்து சைவ நெறிக்கு எதிராக சமஸ்கிருதக் கல்லூரியையே பார்ப்பனர்கள் நிறுவிக் கொண்டதையும், ‘ரிவோல்ட்’ கட்டுரை விளக்கியது. 

ஸ்மார்த்த பார்ப்பனர்கள், சைவக் கோயில்களைக் கைப்பற்றிக் கொண்டு, சைவ நெறிமுறைகளுக்கு மாறாக வழிபாட்டு முறைகளை தலைகீழாக மாற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராட வேண்டிய சைவர்கள். சுயமரியாதை இயக்கத்தை எதிர்ப்பதில், முனைப்புக்காட்டுவது ஏன் என்ற கேள்வியை ‘ரிவோல்ட்’ எழுப்பியது. இதில் முக்கிய கவனத்துக்குரியது, பார்ப்பன - சைவ முரண்பாடுகளை சுயமரியாதை இயக்கம் எப்படி கையாண்டது என்பதுதான். ‘ரிவோல்ட்’டின் கட்டுரைகள் சைவ பார்ப்பனக் கோட்டை களில் வெடிகுண்டுகளாகவே வெடித்திருக் கின்றன. ஒரு பக்கம் சைவக் கருத்தியல் என்ற ஆயுதத்தை பார்ப்பனருக்கு எதிராக பயன்படுத்திய சுயமரியாதை இயக்கம், அத்துடன் நிற்காமல், சுயமரியாதை சைவர்களின் மாநாட்டையும் கூட்டி, மற்றொரு நெருக்கடியை உருவாக்கியது. அது பற்றி அடுத்து எழுதுவோம்.

Pin It