தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்துக்குஒரு விளக்கம்

இராஜராஜ சோழன், பார்ப்பனர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தான் என்றும், களப்பிரர்கள், பல்லவர்கள் எனும் திராவிடர்கள்தான் பார்ப்பனியத்தை வளர்த்தார்கள் என்றும், ‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்’, ‘புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு’ பதில் என்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. பார்ப்பன நிலப்பிரபுவத்தின் தூண்களாக விளங்கிய மாமன்னர்களை பொதுவுடைமைப் புரட்சிக்காரர்கள் புகழ் மாலை சூட்டிப் பாராட்டிக் கொள்ளட்டும். நமக்கு கவலை இல்லை. ஆனால் ‘திராவிடர்’ என்று இவர்கள் கூறும் களப்பிரர் ஆட்சிதான் பார்ப்பனர்களை எதிர்த்து நின்றது என்பதற்கு ஒரே ஒரு சான்றை முன் வைக்கிறோம். ஒரு வேளை அந்த பார்ப்பன எதிர்ப்பைத்தான் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையோ? 

கி.பி. 768 ஆம் ஆண்டில் ஒரு நாள் மாட மாமதில்கள் நிறைந்த கூடல் மாநகரில்  சிரிவரன், சிரி மனோகரன், வீரபுரோகன் என்றெல்லாம் புகழ் பெற்ற பாண்டிய மாமன்னன் நேரியன் கோன் நெடுஞ்சடையன் வீதி உலா வந்து கொண்டிருந்த வேளையில் “கொற்றவனே” என விளித்து வீதியில் விழுந்தான் ஒரு பார்ப்பனன். சிண்டும் பூணூலும் மண்ணில் புரள விழுந்தெழுந்து கையேந்தி நின்ற அப்பார்ப்பனனின் பெயர் கொற்கை கிழான் நற்சிங்கன். “என்ன உன் குறை” எனப் பாண்டியன் கேட்ட பொழுது பார்ப்பனன் கீழ்க்கண்டவாறு விடையிறுத்தான். “முன்னாளில் உமது முன்னோரால் பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த விண்ணளாவிய சோலைகள் சூழ்ந்த வேள்விக்குடி என்னும் ஊரை உனது மூதாதையர் எனது மூதாதையர்க்கு வேள்வி நடத்திக் கொடுத்ததற்காகத் தாரை வார்த்துத் தந்திருந்தனர். ஆனால் அந்தத் தானம் களப்பிரர் என்னும் கலியரசரால் நீக்கப்பட்டது. எனக்கு நீ அதை மீட்டுத் தர வேண்டும்.” இதைக் கேட்ட அரசன் அவன் கூறியதை ஏற்றுத் தம் முன்னோர்களால் தரப்பட்டது எனப் பெருமை கொண்டு அந்த வேள்விக்குடியை மீண்டும் அப்பார்ப்பனனுக்கு நீரோட்டித் தானம் வார்த்தான். 

இச்செய்தி வேள்விக்குடி சாசனம் என்று அழைக்கப்படக் கூடிய புகழ் பெற்ற செப்பேட்டில் விரிவாகச் சொல்லப்படு கின்றது. தமிழக வரலாற்று ஆதாரங்களில்  மிக முக்கியமானவை எனக் கருதப்படுவனவற்றுள் ஒன்று. இது சங்க காலத்தைச் சேர்ந்தவனும் புறநானூற்றில் பாடப் பெற்றவனுமான “பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்னும் பாண்டிய மன்னனுக்கு சுருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழான் நற்கொற்றன் என்கிற பார்ப்பனன் வேள்வி முற்றுவித்துக் கொடுத்ததற்காக வேள்விச் சாலை முன்பு நின்று வேள்விக்குடி என்னும் அவ்வூரைத் தாரை வார்த்துக் கொடுத்த செய்தியும் பின்னர் இத்தகைய தானங்கள் எல்லாம் களப்பிரர் என்னும் கலியரசரின் ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டதும் பின்னர் களப்பிரர்கள் வீழ்த்தப்பட்டுப் பாண்டியர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் அத்தானங்கள் அந்தப் பார்ப்பனர்களின் சந்ததியினர்க்கு மீண்டும் தானம் வழங்கியதையும் இச்செப்பேட்டிலிருந்து விரிவாய் அறிகின்றோம். இதிலிருந்து நாம் பெறும் உண்மைகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம். 

1.             சங்க காலத்தின் நடுப்பகுதியிலிருந்து பார்ப்பனர்களுக்கு வேள்வி செய்தமைக்காகத் தானங்கள் வழங்கப்படுகின்றன. 

2.             கி.பி. 3 லிருந்து கி.பி. 6 வரை தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் பெற்ற களப்பிரர்கள் இத்தகைய வேள்விகளையும் பார்ப்பனர்க்கான தானங்களையும் ஒழிக்கின்றனர்.

3.             மீண்டும் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் களப்பிரரை அழித்து ஆட்சிக்கு வருகிற பாண்டிய மன்னர்கள் வேள்விகளையும் தானங்களையும் நிலமான்யங்களையும் ஊக்குவிக்கின்றனர்.

களப்பிரரை அழித்தொழித்த பாண்டிய மன்னர்களைப் பற்றிச் சொல்ல வரும் வேள்விக்குடி சாசனம் அவர்களது பெருமைகளாகக் கீழ்க்கண்டவற்றைச் சொல்லும். 

அ)    பிரவரைப் பாழ்படுத்தி, குறுநாட்டவர் குலங்கெடுத்து செந்நிலங்களைச் செறுவென்றது.

ஆ)    இரணிய கர்ப்பம், துலாபாரம் முதலியன தரணிமிசை பல செய்து அந்தணர்க்கு ஈன்றளித்தது.

இ)    மகீதலம் பொது நீக்கி தானமளித்து அரசாண்டது. 

இதில் “பொது நீக்கி” என்ற தொடரின் உட்பொருளைக் கவனமாக ஆராய்தல் அவசியம். இனக் குழு மக்களிடம் பொதுவாக இருந்த நில உரிமையை அழித்து பார்ப்பன, வேளாள அதிகாரத்துவத்திற்குத் தனிவுடமையாக மாற்றியதையே இது குறிக்கின்றது. ஆம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் பொதுவாக இருந்த நிலவுரிமை அழித்தொழிக்கப்பட்ட காலம் இவர்களுக்குப் பொற்காலம். பார்ப்பன, வேளாளர்களுக்குக் கேடு வந்த களப்பிரர் காலம் இருண்ட காலம். நமக்கு எதிராக இப்படி ஒரு வரலாற்றை எழுதித் தமிழ் வரலாறு எனவும் தமிழ்ப் பண்பாடு எனவும் தமிழ்ப் பாரம்பரியம் எனவும் தமிழ் மதம் எனவும் நம் மீது திணிப்பதை எத்தனை காலத்திற்கு நாம் சகித்திருப்பது?

- பொ. வேல்சாமி எழுதிய “பொற்காலங்களும், இருண்ட காலங்களும்” நூலிலிருந்து

குடுமிகளின் பின் போனான் இராஜஇராஜன் 

பண்டரசர் தமிழ்ப் பெயரே

                கொண்டிருந்தார்!

பாண்டியன் சேரன் சோழன்

                என்றே வாழ்ந்தார்!

வண்டமிழில் பெயர் கொண்டார்

                புலவரெல்லாம்!

வள்ளுவனாய் இளங்கோவாய்

                வாழ்வு கண்டார்!

கொண்டபெயர் வடமொழியாய்

                ராஜராஜன்

குடுமிகளின் பின் போனான்...

                அந்நாள் தொட்டு

கண்டமொழிப் பெயர்களெலாம்

                தமிழன் ஏற்றான்!

கழுதையிலும் இழிவுற்றான்!

                அழிவுற்றானே!

(கோபிப்பாளையம் நல்லாசிரியர் புலவர் மா. அரசு, 10 ஆம் ஆண்டு நினைவாக வெளிவந்த “தமிழ்ப் பெயர்கள் நூலு”க்கு எழுதிய கவிதை.)