ரிவோல்ட்பக்கங்களிலிருந்து....(8)

 (1928 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை பெரியார் நடத்திய ‘ரிவோல்ட்’ ஆங்கில வார ஏட்டிலிருந்து சில வரலாற்றுத் தகவல்கள்)

 பார்ப்பனரல்லாதார் இயக்கம் - சுயமரியாதை இயக்கத்தின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் வல்லபாய் பட்டேலை தமிழகத்துக்கு அழைத்து சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள் பார்ப்பனர்கள். சுயமரியாதை இயக்கம் பற்றிய தவறான கருத்துகளை பட்டேலின் மூளைக்குள் திணித்து, சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராக அவரை பேச வைத்தார்கள். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ‘உத்தியோக வேட்டை’ கட்சி என்றும், ஆரிய கலாச்சாரத்தின் நல்ல கூறுகளை அழிப்பதற்காக வந்த அமைப்பு என்றும், பார்ப்பனர்கள் சொல்லித் தந்ததை அப்படியே பேசினார். அதற்கு ‘ரிவோல்ட்’  பதிலடி தந்தது.

 ஆரிய கலாச்சாரத்தில் அப்படி என்ன நல்ல கூறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியது ரிவோல்ட். ‘சோட்டா காந்தி’யின் (பட்டேல்) மொட்டைத் தலையில் நீட்டிக் கொண்டிருக்கும் குடுமியா? அவர் முதுகில் போட்டிருக்கும் “புனித” கயிறு பூணூலா? நெற்றியில் அவர் போட்டுள்ள நாமமா? புராணமா? இதிகாசமா? ஸ்மிருதியா? ‘பெருமை மிக்க’ வர்ணாஸ்ரம தர்மமா? ‘தெய்வீக மொழி’ என்று கூறிக் கொள்ளும் சமஸ் கிருதமா? எப்போதோ திராவிட பூமிக்கு வந்து போகும், ஒரு பார்வையாளரான இவருக்கு பார்ப்பன கலாச்சார பண்டிதராக உலவவிட்டது யார்? ஆரியர்கள் என்று கூறிக் கொள்கிற கூட்டம், திராவிடர்களை இழிவுபடுத்துவது தெரியுமா? ஆரியத்தின் வழக்கறிஞராகி, அதைப் பரப்புவதுதான் இவரின் பயண நோக்கமா? திராவிட தேசத்தில் இந்த மனிதர் பார்ப்பனரல்லாதாரை சந்தித்துப் பேசினாரா? அவர்களிமிடமிருந்து நேரடியாக இங்குள்ள சூழ்நிலையை அறிய முற்பட்டாரா? என்ற வினாக்களை தொடுத்தது ரிவோல்ட்.

 கதர் மற்றும் இந்தி பிரச்சார இயக்கத்தை ஆதரித்துப் பேசிய பட்டேலிடம், கதர் இயக்கத்தில் ஊதியம் பெற்று வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதில் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் என்பதையும் பட்டேல் கேட்டுப் பார்த்தால், உண்மை புரியும் என்று ரிவோல்ட் எழுதியது. பட்டேலின் பார்ப்பனக் குரலைக் கண்டித்து (பட்டேல் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட பார்ப்பனரல்லாதவர்) திராவிடன், நாடார்குல மித்திரன், குமரன், தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகள் எழுதியதையும் ‘ரிவோல்ட்’ வெளியிட்டது. ‘விதவைத் திருமணத்துக்காக போராட்டம் நடத்தினால், பசி பறந்து போய் விடுமா?” என்று பட்டேல், விதவை திருமணத்துக்கு ஆதரவாக சுயமரியாதை இயக்கம் குரல் கொடுத்தத்தைக் கண்டித்துப் பேசியதை ‘தமிழ்நாடு’ நாளேடு கண்டித்தது. அதே நேரத்தில் காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிரிகை, பட்டேலின்தமிழகப் பயணத்தைப் புகழ்ந்து எழுதியதற்கும் ‘ரிவோல்ட்’ பதிலடி தந்தது.

 காந்தியின் 60வது பிறந்த நாளை ‘காந்தி ஜெயந்தி’யாக - தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் கொண்டாட முடிவு செய்ததை ‘ரிவோல்ட்’ கடுமையாக விமர்சித்தது. ஓர் ‘சுயமரியாதைக் காரர்’ என்ற புனைப் பெயரில் இக்கட்டுரை (13, அக்.1929) வெளி வந்துள்ளது.

 “எந்தத் தென்னாட்டுப் பார்ப்பனராவது காந்தியை கடந்த காலத்தில் மதித்து, அன்பு காட்டியது உண்டா? வி.எஸ். சீனிவாச சாஸ்திரி காந்தியை கைது செய்து சிறையில் போட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆலோசனை கூறியவர்! (கோகலேயுடன் இணைந்து, மிதவாத காங்கிரஸ் தலைவராக செயல்பட்ட தமிழ்நாட்டுப் பார்ப்பனர்) காந்தியை கைது செய்யாவிட்டால், நாட்டில் சட்ட மீறல் அதிகரித்து விடும் என்று கூறி, அதற்காகவே பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவுரவ விருதை (Right Honourable) பெற்றவர். காந்தி அரசியலுக்கே தகுதி இல்லாதவர் என்று கூறியவர், சத்தியமூர்த்தி பார்ப்பனர். மற்றொரு காங்கிரஸ் தலைவரான சீனிவாச அய்யங்கார், காந்தியை ஒரு முட்டாள் என்ற கூறியதோடு அவரது இயக்கத்தை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கியவர். சென்னையைத் தாண்டிப் போனாலும், பார்ப்பனர்கள் அனைவருமே காந்தி மீது வெறுப்பைக் கக்கிய “தேச பக்தர்கள்” தான். இவர்கள் எல்லாம் சேர்ந்துதான், காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். புத்தரை நாத்திகர் என்று கூறி, அவரது இயக்கத்தை  வேரும் வேரடி மண்ணோடும் ஒழித்துவிட்டு, புராணங்களில் புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக எழுதிக் கொண்டது போலவே, இப்போது காந்தியையும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்” என்று அக்கட்டுரை சுட்டிக்காட்டியதோடு, காந்தியின் எந்த அறிவுரையையாவது, இந்தப் பார்ப்பனர்கள் ஏற்றது உண்டா, என்று ஒரு நீண்ட பட்டியலே போட்டுக் காட்டியது. 

பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்த வேண்டும் என்றார் காந்தி. தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் பெறுவது முடியாது என்றார். கோயிலுக்குள் “தீண்டப்படாதவர்களை” அனுமதிக்க வேண்டும் என்றார். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார். காங்கிரஸ் கட்சி பள்ளிக்கூட சிறுவர்களின் விளை யாட்டுக் கூடம் போல் இருக்கிறது என்றார். கோயில்கள் விபச்சார விடுதிகளாகிவிட்டன என்றார். ஒத்துழையாமை கொள்கைதான் சுயராஜ்யத்துக்கு ஒரே வழி என்று கூறி, நீதிமன்றங்கள், கல்லூரிகள், கவுன்சில்களைப் புறக் கணிக்க வேண்டும் என்றார். காந்தியின் இந்தக் கருத்து களில் ஏதாவது ஒன்றை பார்ப்பனர்கள் ஏற்றது உண்டா? 

ஆனாலும், இப்போது ஏன் காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்? தமிழ்நாட்டில் வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து பேசியதற்கும், இராமாயணம், பகவத் கீதையை புகழ்ந்து பேசுவதற்கும், கதருக்காக, லட்சக்கணக்கான ரூபாயை தாராளமாக வழங்க முன் வந்ததற்கும் பார்ப்பனர்கள் காந்தி ஜெயந்தியைக் கொண்டாட கிளம்பி விட்டனர். தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை உயர்த்திப் பிடிக்கும் எத்தனையோ பண்டிகைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் இப்போது காந்தி ஜெயந்தியும் சேர்ந்துள்ளது. எனவேதான் இதை ‘மோசடி’ (ஹம்பக்) என்று கூறுகிறோம்” என்று, அந்தக் கட்டுரை அனல் கக்கியது.                     

- (தொடரும்)

Pin It