பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாதாடியதில் பெருமையடைகிறேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் குறிப்பிட்டார். 20.3.10 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆற்றிய உரை :

தோழர் இராம. இளங்கோவன் வாதாடிய இரு வழக்குகளும் இலவசமாக வாதாடியதாகக் கூறினார். இதே மேடையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கொடியினை அறிமுகம் செய்தபோது, என்னையும் பேச அழைத்திருந்தார்கள். அந்த மேடையிலேயே நான் கூறினேன், எங்களைப் பொருத்தவரை நான் சார்ந்திருக்கின்ற இயக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும், இந்த மண்ணைப் பொருத்தவரை, தமிழகத்தைப் பொருத்த வரை, மார்க்சியம் என்பது பெரியாரிசத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்று என்பதனை நான் தீர்க்கமாக உணர்ந்து கொண்டிருப்பவன்.

நான் சென்னை சட்ட கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கிற காலத்தில் தோழர் தா. பாண்டியன் பல தி.க. கூட்டத்திற்கு அழைத்துப் பேசிய போதெல்லாம் நான் சென்று பார்த்திருக்கிறேன்.

தியாகராய நகர் கூட்டத்திலே அவர் பேசிய போது சொன்னார், இனி தமிழகத்திலே இருக்கக் கூடிய அடக்குமுறைகளை அநீதிகளை, பொய் யுரைகளை, காவியுடைகளை தரித்திருப்போரின் கயமைத்தனத்தினை எதிர்க்கக்கூடிய மிகப் பெரிய இயக்கங்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தி.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக மக்கள் மத்தியிலே புறப்படும் என்று சொன்னார். ஆனால், நடைமுறையிலே அது இன்றைக்கு வரை செயலாக்கப்படவில்லை.

நாம் விரும்புவதெல்லாம் இதுதான். இந்திய மண்ணைப் பொருத்த வரையிலும் “இந்தியா” என்ற ஒரு நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலே உருவாக்கப் பட்டதே தவிர, “இந்தியா என்பது ஒரு நாடு அல்ல தேசம் அல்ல” - என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்தியாவைப் பொருத்தவரை இந்திய மண்ணிலே ஒரு சமத்துவ சமுதாயத்தை நாம் படைக்க வேண்டும் என்று சொன்னால், அது பொதுவுடைமை அமைப்பை இந்த மண்ணிலே படைக்க வேண்டும் என்று சொன்னால், இந்த உலகத்தைப் பற்றிய ஆய்வுகள் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வுகளான, இந்த உலகம் தோன்றிய விதத்தை, ஜீவராசிகள் தோன்றிய விதத்தைப் பற்றி யெல்லாம் ஆய்வு நடத்தியிருக்கக்கூடிய டார்வினியம் ஆகட்டும். டார்வினியத்தை தொடர்ந்து மனிதகுலம் தோன்றி எது மனிதனை மனிதனாக மாற்றியது என்று உழைப்பையும், கருவியையும் சொல்லியிருக்கக் கூடிய, மார்க்சியத்தையும் உலகம் இன்றைக்குக் கற்றிருந்தால்கூட, இந்தியாவைப் பொருத்த வரையில் மேற்கத்திய நாடுகளுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார அமைப்பு என்பது வேறு. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை மார்க்சுடைய வார்த்தையிலேயே இது ஒரு ஆசிய உற்பத்தி முறை (asiatic mode of Production) சமூகம்.

இங்குள்ள உற்பத்தி முறை அங்குள்ள உற்பத்தி முறைக்கு மாறானது என்ற வகையில் இதைப் பற்றி ஆய்வு செய்தார் மார்க்ஸ். அப்படி ஆய்வு செய்த போது, இங்கிருக்கும் சாதியம் - இங்கிருக்கும் ஆதிக்கம் என்பது மிகப் பெரிய கொடுமை என்று கூறினார். இந்தியாவைப் பற்றி காரல் மார்க்ஸ் எழுதியது சின்னஞ்சிறு புத்தகம் தான். ஆனால், இந்தியா பற்றி அவருக்கும் கிடைத்திருக்கும் விவரத்தை வைத்துக் கொண்டு, இங்குள்ள நிலப் பிரபுத்துவ ஆதிக்கத்தையும், விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளையும், பழங்குடி மக்களின் போராட்டங்களையும், அற்புதமாக விவரித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து இங்கே பார்க்கிற போதுதான் இந்தியா என்ற இந்த மண்ணை ஒரு பொதுவுடைமை அமைப்பாக மாற்ற வேண்டு மென்று சொன்னால், மார்க்சியம் - பெரியாரியலை, அம்பேத்கரியலை உள் வாங்கிக் கொண்டுதான் மாற்ற முடியுமே தவிர, நாம் மார்க்சியத்தை நேரடியாகப் பொருத்திப் பார்க்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

ஏனென்று கேட்டால், இங்கே பேசிய தோழர்கள் சொன்னார்கள், நாம் பிரித்துப் பார்க்க முடியாது! அருமைத் தோழர்கள் கொளத்தூர் மணி ஆகட்டும், இராமகிருட்டிணன் ஆகட்டும், அவர்களை நான் பார்க்கிறபோது, நடத்திய போராட்டங்களை நான் சின்ன வயதில் இருந்து பார்க்கிறபோது, இன்றைக்கு வரைக்கும் அவர்களை ஒரு கம்யூனிஸ்ட்டாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே தவிர, அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. காரணம் அவர் களுடைய போராட்டங்களை எங்கள் போராட்டங் களுடன் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

இந்த மண்ணை சரியாகப் புரிந்து கொண்ட காரணத்தினால், எது தேவையோ - அதைச் சொன்ன பெருமை பெரியாருக்கு உண்டு. அவர் ரஷ்யா செல்வதற்கு முன்னால், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழி பெயர்த்திருக்கிறார். அப்படி மொழி பெயர்த்து வெளியிட்ட ஒரே இயக்கம் பெரியாருடையதுதான். இது சாதாரணமான விவரம் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தது மட்டும் அல்ல, பகத்சிங், ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற புத்தகத்தை ஜீவாவை வைத்து மொழி பெயர்க்க வைத்து வெளியிட்டார்.

நம் கைக்குள் உலகம் அடங்கும் காலம் இது! உலகத்தை பகுத்தறிந்து பார்க்கும் காலம் இது. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று சொன்ன பழமொழியை உடைத்து, அணுவைப் பிளந்து நியூட்ரான், புரோட்டான் என்பதெல்லாம் கிடைக்கிறது என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளும் காலம் இது. இன்றைக்குப் பேசுவது மிக எளிதானது. அன்றைக்குப் பெரியார் நடத்திய போராட்டங்கள், சாகசங்கள் வரலாற்றுப் புகழ் மிக்கவை! ஆகவே, பெரியார் இயக்கத்துக்காக வாதாடக் கூடிய இந்த இரண்டு வழக்குகளையும் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதினேன்.

நான் பெரியாரைப் புரிந்து கொள்வதற்கு, பெரியாரை மார்க்சிசயத்துடன் பொருத்தி ஒரு வழக்கிலே நீதிமன்றத்திலே நான் பேசுவதற்கு மிகப் பெரிய வாய்ப்புதான் இந்த வழக்கே தவிர, மற்றபடி நான் மிகப் பெரிய அளவில் எதையும் சாதித்து விடவில்லை.

அன்றாடம், நீங்கள் கூட்டத்தில் பேசக்கூடிய பேச்சுக்களை எல்லாம் தொகுத்து, சட்டத்துடன் சேர்த்து வழக்கில் வாதாடினேனே தவிர, புதிதாக எதையும் நான் சொல்லவில்லை. ஈரோட்டில்கூட கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டம் நடந்ததாக நான் படித்திருக்கிறேன். கர்ப்பக்கிரகத்தில் குத்தூசி குருசாமி போன்றவர்கள் நுழைந்தபோது, ஆலயத்தைப் பூட்டிவிட்டனர். அத்தனைப் பெரிய போராட்டங்களை எல்லாம் இங்கே துவக்கி வைத்திருக்கிறார்கள். சாதாரணமாக அன்றைக்கு இருந்த நீதிபதிகள், யாராவது ‘சூத்திரர்கள்’ சாட்சி அளிக்க வந்தால், அறுபது அடி தள்ளி நிற்க வைத்துத்தான் சாட்சி யத்தைப் பதிவு செய்வார்களாம். அன்றைய நிலை அப்படி இருந்தது.

பெரியார் கொண்டிருக்கிற தத்துவம் என்பது உண்மையிலேயே தமிழ்நாட்டுக்குரிய மார்க்சியம் என்பதை நாம் இன்றைக்கு மறைக்க முடியாது, மறுக்க முடியாது.

பெரியார் இன்றைக்கு சீர்திருத்தக்காரர் அல்ல - பல பேர் சீர்திருத்தவாதி என்று சொல்கிறார்கள். அவர்கள் புரட்சிக்காரர்கள். பெரியார் ஒரு கலகக்காரர் மட்டுமல்ல, சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்திய புரட்சிக்குச் சொந்தக்காரர். ஆக, பெரியாருடைய இயக்கம் என்பதும், அது இன்றைக்குக் கொண்டிருக்கிற நடைமுறை என்பதும் இந்தக் காலகட்டத்திற்கு மிக மிகத் தேவை என்பதை வாழ்க்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், பெரியாரின் தத்துவத்தை, ஒரு குமிழுக்குள் போட்டு அடைக்க முடியாத மாபெரும் சிந்தனையை, பெரியார் பேரைத் தாங்கிக் கொண்டிருப்பவர்களே அடைக்கப் பார்க் கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அறிவுசார் சொத்துக்களுக்கு சட்டம் உண்டு; காப்புரிமைச் சட்டம் உண்டு.

பெரியாரின் சிந்தனைகளை, கொள்கைகளை, எழுதிய எழுத்துக்களை அவர் குடி அரசு இதழில் எழுதிய எழுத்துக்களை எல்லாம் வீரமணி போன்றவர்கள் வியாபாரம் ஆக்குவதற்காக குமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அடைக்க விட மாட்டோம். சொத்தை விற்றாவது அதைக் கொண்டுபோய் மக்களிடம் பரப்புவோம் என்று இருக்கிறதே இந்த இயக்கம், அதுதான் உண்மையான பெரியார் திராவிடர் கழகம்.

ஆகவே, இன்றைக்குப் பெரியார் திராவிடர் கழகத்தோடு இணைந்து ஒரு கம்யூனிஸ்டு என்ற முறையில் நடத்தும் போராட்டங்களில் எல்லாம் நான் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைகிறேன். அன்றைக்குத் தோழர் தா. பாண்டியன் சொன்னதைப்போல் பெரியார் திராவிடர் கழகமும், இந்தியப் பொதுவுடமைக் கட்சியும் இரட்டைக் குழல் துப்பாக்கியாய், அடக்குமுறையை, அநீதியை, சுரண்டலை எதிர்த்துப் போராடும் என்று இந்த மன்றத்தில் நான் பதிவு செய்து கொள்கிறேன்.

இன்றைக்குத் தமிழகத்தில் நடைபெற்றதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் என்ற மாபெரும் மனிதரின் தேவையை உணருகிறார்கள். சீரங்கத்தில் பெரியார் சிலையை யாரோ சில கயவர்கள் உடைத்தபோது அதற்கு ஒரு எதிர் வினையை ஈரோட்டிலும், தமிழகத்திலும் பதிவு செய்த பெருமை பெரியார் திராவிடர் கழகத்திற்கு உண்டு. அது இயற்கையான ஒன்று.

பெரியார் சிலையை உடைத்தது என்பது பெரியார் இயலை, வாழ்க்கையை, தத்துவத்தை, பகுத்தறிவை உடைத்ததற்கு அர்த்தமானது.ஆகவே, அதற்கு ஒரு எதிர்வினை என்பது கட்டாயம் தேவை என்பதை தோழர்கள் உணர்த்தி யுள்ளார்கள். அதில் முக்கியமானது என்னவென்றால், பெரியார் போராடிப் போராடி உருவாக்கி யிருக்கின்ற மாற்றங்களை இந்த மேடையில் தோழர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. மயிலாப்பூர் சீனிவாச அய்யங்கார் வீட்டுக்கு காந்திஜி வரும்போது, அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து போவதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்திற்குப் பிறகுதான் சீனிவாச அய்யங்கார், காந்தியாரை வீட்டுக்குள் அனுப்பியதாக வரலாறு சொல்கிறது.

(தொடரும்)

Pin It