வீரப்பனுக்கு ரகசியமாக ஆயுதங்கள் எடுத்துச் சென்றதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது கர்நாடக அரசு அடுக்கடுக்காக பொய் வழக்குகளைத் தொடர்ந்து கைது செய்தது. பிணையில் வெளிவர முடியாத பல்வேறு அடக்குமுறை சட்டங்களின் கீழ் பொய் வழக்குகளைத் தொடர்ந்ததால், ஒரு ஆண்டு, 20 நாட்கள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருநாடக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். சிக்மகளூர், பீஜப்பூர், மைசூர், பெல்லாரி சிறைகளுக்கு மாற்றப்பட்டார். தமிழர் உரிமைகளுக்கான கோரிக்கைகளை முன் வைத்து கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது, ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சிகளில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஈடுபட்டார் என்பதாலும், அதிரடிப் படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார் என்பதாலும் கருநாடக அரசு இந்த பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கியது. 

2002 மார்ச் 8 ஆம் தேதி கொளத்தூரிலிருந்து மேட்டூர் நோக்கி காரில் வந்தபோது வழியில் மடக்கி, கர்நாடக அதிரடிப்படை கழகத் தலைவரை கைது செய்தது. வீரப்பனுக்கு வெடி மருந்துகள் கொடுத்தனுப்பியதாகவும், கடைசியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியே வெடி பொருட்களை வீரப்பனிடம் கையளிக்க எடுத்துச் சென்றபோது காட்டுக்குள் பிடிபட்டதாகவும், பொய் வழக்குகள் புனையப்பட்டன. எளிதாக பிணையில் வெளிவர முடியாத கர்நாடக அரசின் வெடிமருந்துகள் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்ததோடு, காலாவதியான தடா சட்டத்தின் கீழும் ஒரு வழக்கைப் பதிவு செய்தனர். ஆனாலும் மாநில காவல்துறை இயக்குனர்,காலாவதியான ‘தடா’வில் வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்து,இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கை நடத்த உத்தரவிட்டார். 

கழகத் தலைவர் சிறையில் இருக்கும்போதே வீரப்பன், கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை கடத்தினார். நாகப்பாவை மீட்பதற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணியை விடுதலை செய்து,தூதராக அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்தார். சிக்கலில் மாட்டிக்கொண்ட கர்நாடக அரசு, கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் தூது சென்று, வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு கேட்டுக் கொண்டது. கருநாடக அரசின் அடக்கு முறைகளை சந்தித்துக் கொண்டிருந்த அந்த நிலையிலும்,மனிதநேயத்துடன், நாகப்பாவை விடுவிக்குமாறு வீரப்பனுக்கு,வானொலி வழியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் விடுத்தார். நாகப்பன் மீட்புக்கு வீரப்பன் விதித்த கெடு முடிந்த நிலையில், தமிழக அதிரடிப்படையே காட்டுக்குள் சென்று,ரகசியமாக நாகப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டு பழியை வீரப்பன் மீது போட்டது. 

கழகத் தலைவர் கர்நாடக சிறையில் இருக்கும்போது அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை கண்டித்து, கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர். மைசூரில் கழகத் தலைவர் விடுதலை கோரி நாகப்பாவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓராண்டு 20 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு 2003 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணி,பிணையில் விடுதலையானார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு எல்லையிலுள்ள கர்நாடகாவின் கொள்ளேகால் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணைக்காக கொள்ளேகால் நீதிமன்றத்திற்கு கழகத் தலைவர் சென்று வந்தார். விரைவு நீதிமன்றம் ஒவ்வொரு பொய் வழக்கிலிருந்தும் கழகத் தலைவரை விடுதலை செய்தது. கடைசியாக கொள்ளேகால் நீதிமன்றத்தில் நடந்த அய்ந்தாவது வழக்கில் கடந்த மே 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 

இப்போது சாம்ராஜ் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் ‘தடா’வில் பதியப்பட்டு, பிறகு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் மாற்றப்பட்ட வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது.

Pin It