1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பெரியார் இயக்க வரலாற்றில் மறக்க முடியாத நாள்! அன்று தான் பெரியார் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தின் சாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை (13(2), 25(1), (2)) பெரியார் தொண்டர்கள் தீயிட்டு பொசுக்கினர். நீதிமன்றத்தில் எதிர் வழக்காடாமல் சிறையேகினர். 6 மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை சிறையில் வாடினர். கொளுத்தியவர்கள் சுமார் 10000 பேர். முன்கூட்டியே கைதானோர் 5000 பேர். மாநில காவல்துறை அதிகாரி தந்த கணக்கின்படி கைது செய்யப்பட்டு, தண்டனை அடைந்தோர் 2718 தோழர்கள். கொளுத்தப்பட்ட சட்டத்தின் சாம்பலை நிரப்பிய கடிதங்கள் தமிழக உள்துறை அமைச்சருக்கு அஞ்சலில் குவிந்தன. மிக மோசமாக சிறையில் நடத்தப்பட்டதால், சிறைச்சாலைக்குள்ளேயே தோழர்கள் இராமசாமி, வெள்ளைச்சாமி, பெரியசாமி, கணேசன், சின்னசாமி ஆகியோர் மரணத்தைத் தழுவினர். விடுதலையான சில நாட்களிலே மரணத்தைத் தழுவிய தோழர்கள் 13 பேர். ஆக, சாதி ஒழிப்புக்காக கருஞ்சட்டைத் தோழர்கள் 18 பேர் களப்பலியானார்கள்.
பெரியார் இயக்கத்தின் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் இந்த முக்கியமான வரலாற்றை இளம் தலைமுறையின் கவனத்துக்குக் கொண்டு வந்தது பெரியார் திராவிடர் கழகம் தான். சீரிய பெரியாரியல்வாதி திருச்சி செல்வேந்திரன் அவர்களால் தொகுக்கப் பெற்ற அந்த ஆவணம் ஒன்றுதான், இப்போது இந்த வரலாற்றை வெளிச்சப்படுத்தும் ஒளி விளக்காகும். பெரியார் சாதி ஒழிப்புக்காக இந்தப் போராட்டத்தை அறிவித்த காலகட்டம் முக்கியமாய் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். 1957 ஆம் ஆண்டு முதுகளத்தூரில் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பெரும் சாதிக் கலவரத்தை நடத்தி முடித்த காலகட்டம்.
இது பற்றி ‘விடுதலை’யில் அதன் ஆசிரியர் குத்தூசி குருசாமி எழுதிய தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “முதுகுளத்தூர் கலவரத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டிலுள்ள ஆதி திராவிடர்கள் அனைவரும் காமராசர் ஆட்சிக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை நஞ்சாக வெறுத்துவிட்டனர். நூற்றுக்கணக்கான ஆதி திராவிட உயிர்கள் பலியாக்கப்பட்டிருப்பதையும் ஆயிரக்கணக்கான குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டதையும் சிறிதும் பொருட்படுத்தாதபடி ஐந்து ‘உயர்சாதி’க்காரர்களை போலீசு சுட்டுக் கொன்றது பற்றி கண்ணீர் வடிப்பதும், திரு.முத்துராமலிங்க தேவரை விடுதலை செய்ய வேண்டுமென்று கடையடைப்பு செய்யவும் இதற்காக சட்டசபையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதும், இதற்காக சட்டசபையை விட்டு வெளியேறுவதும் போன்ற நடத்தைகளால் அரசியல் எதிர்கட்சிகள் என்பவை ஆதி திராவிட சமுதாயத்திற்கு துரோகம் செய்துவிட்டன.
இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காக ஆதி திராவிட சமூகம் இந்த எதிர்கட்சிகள் மீது இன்று ஆத்திரப்பட்டு கொதிப்படைந்து இருக்கிறது. நேற்று சென்னைக் கூட்டத்தில் பேசிய தலைவர் பெரியார் அவர்கள் கூட, “நான் சட்டசபையில் இடம் பெற்றிருக்கக்கூடிய பொல்லாத வேளை ஏற்பட்டிருந்தால், ஏன் முன் கூட்டியே கலகக்காரர்களை சுட்டு வீழ்த்தியாவது ஆதி திராவிட உயிர்களையும், வீடுகளையும் காப்பாற்றியிருக்கக் கூடாது? என்று மந்திரிகளை நோக்கி கேட்டு இருப்பேன்” என்று கூறினார். எனவே சாதி வெறிக்குச் சிறிதுகூட இடமளிக்கக்கூடாது என்பதில் திராவிடர் கழகத்தைப் போன்ற தீவிர லட்சியங்கொண்ட கட்சியே இந்நாட்டிலில்லை.” - ‘விடுதலை’ 7.11.1957 தலையங்கம்.
பெரியார் இயக்கம் பார்ப்பனர்களை மட்டுமல்ல, பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு காரணமான சாதிவெறி சக்திகளையும் எதிர்த்து துணிவுடன் குரல் கொடுத்தது. பெரியார் முன் வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் நோக்கமே சாதி ஒழிப்புதான். சாதியின் பெயரால் நிலைநிறுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும்போதுதான் சாதி ஒழிந்த சமநிலை சாத்தியப்படும் என்ற நோக்கத்துடனேயே பெரியார், வகுப்புரிமைக் குரலை ஒலித்தார். ஆனாலும், சாதி வெறியின் மனித விரோதப் பண்புகள் இன்னும் முழுமையாக மாறிடவில்லை. ஆதிக்கசாதிகள் பார்ப்பனியத்துக்கு உரமூட்டும் அவலங்களின் கோர காட்சிகளை கிராமங்களில் பார்க்க முடிகிறது. தேனீர்க்கடையிலும் சுடுகாட்டிலும் கோவிலுக்குள்ளும் தீண்டாமைப் பாம்பு படமெடுத்தாடுகிறது. கிராமங்களில் இப்போதும் ‘சேரிகள்’ ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டுக் கிடக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு கட்டித் தரும் வீடுகளும் சேரிகளுக்குள் முடங்கிடாமல் ஊருக்கு நடுவில் வர வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். தீண்டாமையை நிலைநிறுத்தி வரும் கிராமங்களே ஒழிய வேண்டும் என்றார்.
தமிழகத்தின் கிராமங்களில் சட்டங்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுக்க அரசியல் கட்சிகள் முன் வரவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இப்போது, இதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதை பாராட்டி வரவேற்க வேண்டும். விரிவான போராட்டங்களை பல்வேறு முனைகளில் முன்னெடுக்கப்படும்போது தான் சாதியத்தின் அடித்தளத்தை அசைக்கவாவது முடியும். மனிதனை மனிதன் இழிவு செய்யும் தீண்டாமை சாதி ஒடுக்குமுறைகளைப் பார்க்க மறுத்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு - ‘தமிழன்; தமிழன்’ என்று கூப்பாடு போடுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும் என்பதையும், நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.
சாதிகளையும் சுமந்து கொண்டு தமிழன் அடையாளத்தையும் போர்த்திக் கொள்வது என்ன பயனைத் தரும்? சாதிகளைக் கடந்த ஓர்மைதான் விடுதலைக்கான உண்மையான அர்த்தத்தை உறுதி செய்யும். தீண்டாமை - சாதி எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தொய்வின்றி இடைவிடாது இந்தப் போராட்டங்கள் நடக்கும்போதுதான் சாதியை எதிர்த்து சமூகத்தில் அசைவுகளை உருவாக்கிட முடியும். இதுவே சாதி ஒழிப்புக்கு சட்டம் எரித்த நாளில் மேற்கொள்ள வேண்டிய உறுதியாக இருக்க வேண்டும்!