(அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுரையின் தொடர்ச்சி...)
குப்பை
அடுத்து, குப்பை பிரச்சினை. நகராட்சிப் பணியாளர்கள் சரியாக குப்பை அள்ளுவதே இல்லை. அம்பத்தூர் நகராட்சியில் மனு கொடுத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. காவல் நிலையம் சென்று ஒரு மனு கொடுத்தேன். ‘குப்பைகளுடன் சாலையில் நின்று போராட்டம் நடத்தப் போகிறோம். அனுமதி வேண்டும்’ என்று கேட்டேன். அனுமதி தரவில்லை.
அம்பத்தூர் நகராட்சி வரி வசூலிப்பாளர் வந்தார். ‘வரி தர வேண்டும்’ என்றார்.
ஆறு நாட்களாகக் குவிந்து இருந்த குப்பையைக் காட்டி, ‘இதை அகற்றுங்கள், பணம் தருகிறோம்’ என்றேன். ‘அது வேறு துறை. எனது பணி, பணம் வசூலிப்பது மட்டும்தான்’ என்றார்.
அப்படியானால், நீங்கள் இங்கே வரி வசூலிக்க முடியாது என்று கூறி அவரை வெளியே அனுப்பி, கதவைப் பூட்டி விட்டேன்.
மதிய உணவு நேரம். காவல்துறை ஜீப் வந்தது. ‘சுரேஷ் யார்?’ என்று கேட்டார்கள். ‘அரசுப் பணியாளரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, உங்கள் மீது குற்றச்சாட்டு கொடுத்து இருக்கின்றார்கள். நீங்கள் காவல் நிலையத்துக்கு வாருங்கள்’ என்றார்.
‘நீங்கள் போங்கள். நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, குடியிருப்புவாசிகளுக்குத் தகவல் கொடுத்தேன். காவல் நிலையத்துக்குச் சென்றேன். அங்கே, அரசு அதிகாரிகள் உட்கார்ந்து இருந்தார்கள். என் மீது குற்றச்சாட்டு கொடுத்தவர், என்னைக் காட்டி, ‘இவர்தான் சார் என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார். இவரைச் சிறையில் அடையுங்கள்’ என்றார்.
அப்போது, நான் தனி ஆளாக உட்கார்ந்து இருந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில், எங்கள் குடியிருப்பில் இருந்து, 50 பேர்களுக்கும் மேல் திரண்டு விட்டனர். காவல் நிலையத்துக்குச் செல்வதற்கு முன்பே பலருக்குத் தகவல் கொடுத்து விட்டேன். அம்பத்தூர் நகர்மன்ற உறுப்பினரும் வந்து விட்டார்.
காவல் நிலைய ஆய்வாளர் வந்தார். இருதரப்பிலும் இருந்து இருவரை அழைத்துப் பேசினார்கள்.
குற்றச்சாட்டு கொடுத்தவர் அவரைப் பார்த்து, ‘சார் நாமெல்லாம் அரசு ஊழியர்கள்’ என்றார்.
உடனே ஆய்வாளர் குறுக்கிட்டு, இங்கே உங்களுடைய குற்றச்சாட்டை மட்டும் சொல்லுங்கள் என்றார்.
‘சார், இவர் என் மீது ஆசிட் ஊற்றுவேன்’ என்றார். ‘என்னைக் கொல்லப் போவதாகவும் மிரட்டினார்’ என்றார்.
ஆய்வாளர் என் தரப்பைக் கேட்டார். நான் எங்கள் அலுவலகக் கோப்புகளைக் காட்டினேன். பலமுறை நான் கொடுத்த மனுக்களைக் காட்டினேன். மேலும், ‘உங்களிடமே போராட்டத்துக்கு அனுமதி கேட்டுக் கடிதம் கொடுத்து உள்ளேன்’ என்றார்.
உடனே, அவரது மேசையில் இருந்த கோப்பைப் புரட்டிப் பார்த்து, ‘ஆமாம், உங்கள் பிரச்சினை பொதுப் பிரச்சினைதான். உங்களுக்குள் தனிப்பட்ட விரோதம் இல்லை’ என்றார்.
அடுத்து அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஏன் குப்பை அள்ளவில்லை?’ என்றார். ‘வண்டி பழுது’ என்றார்கள். அத்துடன் நில்லாமல், ‘இப்போது அது பிரச்சினை இல்லை சார். இப்போது, பிரச்சினை இவர் மிரட்டியதுதான்’ என்றார்.
இதற்குள், குடியிருப்புவாசிகள் 200 பேர்களுக்கும் மேல் சேர்ந்து விட்டார்கள். உடனே ஆய்வாளர், நகராட்சி ஆய்வாளரைத் தொலைபேசியில் அழைத்து, ‘நீங்கள் வாடகை லாரி வைத்தாவது, குப்பையை அள்ளுங்கள். இங்கே 200 பேர் நிற்கின்றார்கள். வேறு ஏதாவது பிரச்சினை வந்தால், நான் உங்களைத்தான் மேல் அதிகாரிகளிடம் சொல்ல வேண்டியது இருக்கும்’ என்றார்.
உடனே நகராட்சி ஆணையர், என்னைக் கேட்காமல் யார் காவல்நிலையத்தில் மனு கொடுத்தது? என்று கேட்டு, மனு கொடுத்தவர்களை அழைத்து விரட்டினார்.
என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தால், கப்பல் பணி போய்விடும் என எனக்கு உள்ளூர அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், கூட்டம் சேரச்சேர எனக்குத் தெம்பு வந்துவிட்டது. உடனே நான், ‘சார் சுத்தமாகக் குப்பையை அள்ளும்வரை, நான் இந்தக் காவல்நிலையத்தை விட்டு வெளியேற மாட்டேன்’ என்றேன். அம்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் வந்து, குப்பையை விரைந்து அள்ளினார்கள்.
தொடக்கத்தில் நான் ஆய்வாளரிடம் சொன்னேன். ‘நீங்கள் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யலாம். ஆனால், தனிப்பட்ட சுரேசுக்கும், இந்த ஊழியருக்கும் பிரச்சினை இல்லை. குற்றச்சாட்டில், அரசுத்துறை நிறுவனக் குடியிருப்பின் செயலாளர் என்றுதான் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்’ என்றேன். எனது வாதம் ஆய்வாளருக்குப் பிடித்து விட்டது.
‘இல்லை சார்.நான் குற்றச்சாட்டு பதிவு செய்ய மாட்டேன். அவர்களை வாபஸ் வாங்கச் செய்துவிடுவேன்’ என்றார்.
இந்தச் சம்பவங்கள் எதுவும் என் மனைவிக்குத் தெரியாது. வீட்டுக்கு வந்தவுடன், என் தந்தையைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடந்த விவரங்களைத் தெரிவித்தேன். ‘நீ இப்படிச் செய்தது எனக்குப் பெருமைதான்’ என்றார்.
பொதுநல சேவை புரிபவர்களுக்கு, பெற்றோர், மனைவி, குழந்தைகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவை.
பணியாளர்கள்:
ஒரு குடியிருப்பில் பணியாளர்களை நியமிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். நிர்வாகத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுப்பதும், பெயரைக் கெடுப்பதும் இவர்கள்தாம்.
எங்கள் குடியிருப்பில் இருந்த பிளம்பரிடம் ஏதாவது ஒரு குறையைச் சொன்னால், உடனே அவர் சொல்லுவார்: ‘உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? நான் கடைக்கால் போட்டதில் இருந்தே இங்கே இருக்கின்றேன் சார். எந்தக் குழாய் எங்கே போகிறது எல்லாம் எனக்குத்தான் தெரியும்’ என்பார்.
அதற்குப் பிறகு, நான் ஒவ்வொரு முறையும் அவனைப் புகழ்ந்துகொண்டே, ‘இந்தக் குழாய் எங்கே போகிறது? எங்கே குழி இருக்கின்றது?’ என்பதையெல்லாம், ஒவ்வொன்றாக ஒரு மாதம் கேட்டுக்கேட்டு, நானே ஒரு வரைபடத்தை வரைந்தேன்.
ஏனென்றால், எங்களுடைய குடியிருப்பைக் கட்டிய பொதுத்துறை நிறுவனத்தோடு தொடக்கத்திலேயே தகராறு ஆகிவிட்டது. அதனால் அவர்கள், எங்களுக்கு எந்தத் தகவலையும் தரவில்லை. வரைபடத்தையும் தரவில்லை.
சில இடங்களில் சங்கப் பொறுப்பாளர்களின் வீடுகளுக்குக் கூடுதலாகத் தண்ணீரைத் திறந்து விடுகின்ற வழக்கமும் உண்டு. நான் கொடுத்த 20 அம்ச தேர்தல் வாக்குறுதியில், எல்லா வீடுகளுக்கும் சமமாகத் தண்ணீரைப் பகிர்ந்து கொடுப்பதும் ஒன்று. அதற்காகத்தான் இந்த முயற்சி.
சென்னைக் குடிநீரில் இருந்து வரும் தண்ணீர் முதலாவது குழியில் வேகமாக நிரம்பும். அங்கே ஆறு மறைகள் (Volves) இருக்கும். அந்தக் குழி நிரம்பி விட்டால், அதில் சில மறைகளை மூடினால்தான், அடுத்த குழிக்குத் தண்ணீர் சரியாகப் போகும். இதை 15 நாள்கள் தொடர்ந்தாற்போல் கவனித்துக் கொண்டே இருந்து, எந்த வால்வை எப்போது மூட வேண்டும் என்பதை வரையறுத்துக் கொண்டோம்.
இப்போதெல்லாம் கட்டுமான நிறுவனங்கள், வரைபடங்களைக் கையில் கொடுத்து விடுகின்றார்கள். ஒவ்வொரு குடியிருப்பிலும், ஒரு கட்டுமானப் பொறியாளராவது வீடு வாங்கி இருப்பார். சங்கப் பணிகளுக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவரிடம் அந்த வரைபடத்தைக் காண்பித்தால், அவருக்குப் புரிந்து விடும். என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லி விடுவார்.
நீங்கள் ஒரு நிறுவனம் நடத்துகிறீர்கள். ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேறு ஒரு நிறுவனத்தை அணுகுகின்றீர்கள். அவர்கள், அதற்காகப் பணம் வாங்குவார்கள். அந்தப் பொறியாளரை, நீங்கள் அணுகுகின்ற விதமாக அணுக வேண்டும். இல்லாவிட்டால், நாம் ஏன் செய்ய வேண்டும்? என்று நினைப்பார்கள். பொறுப்பில் இருப்பவர்கள், இத்தகைய திறமையாளர்களிடம் நல்ல உறவு வைத்துக் கொள்ள வேண்டும். சங்கப் பணி என்பதாகவே அவர்களை அணுக வேண்டும். அவர்களது திறமையை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல, ஆடிட்டர், தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவன நண்பர்கள் மற்றும் அரசுத்துறையில் உயர்பொறுப்பில் இருப்பவர்களைப் பழகி வைத்துக் கொள்ளவேண்டும். அவர்களது உதவியை, நமது குடியிருப்புக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில குடியிருப்புவாசிகள் செல்வந்தர்களாக இருப்பார்கள். அவர்களை அணுகினால், குடியிருப்பில் சில பணிகளை அவர்களே செய்து தருவார்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான செலவை ஒருவரே ஏற்றுக் கொள்வார். தோட்டத்தில் இருக்கைகள் வாங்கிப் போடுங்கள் என்று கேட்டால், சிலர் வாங்கிப் போடுவார்கள்.
குடிநீர் குழாய் பராமரிப்பாளர் காலையில் வருவார். சங்க அலுவலகத்தில் ஒரு பதிவு ஏடு இருக்கும். மின்சார, குடி நீர் குழாய் மற்றும் கழிவு நீர் குழாய் அடைப்பு குறித்த குறைகளைத் தெரிவித்து குடியிருப்புவாசிகள் எழுதி வைப்பார்கள்.
பிளம்பர் வந்து அந்த ஏட்டைப் பார்ப்பார். அந்த வீட்டுக்குச் செல்வார். ‘சார், இது பெரிய பிரச்சினை. சரி செய்ய முடியாது. சுவரை உடைக்க வேண்டும்; தரையை உடைக்க வேண்டும்; அல்லது குழாயை மாற்ற வேண்டும்;வால்வை மாற்ற வேண்டும்’ என்பார். அதற்கு 500 ஆகும் 1000 ஆகும் என்பார். அந்தத் தொகையை வாங்கிக் கொள்வார். ஆனால், அந்த வேலையை அவர் செய்ய மாட்டார். அவருக்கு ஒரு உதவியாளர் வைத்து இருப்பார். இவர் கையில் 100 ரூபாயை வைத்துக் கொண்டு, உதவியாளரிடம் 400 ரூபாயைக் கொடுத்து, பொருள்களை வாங்கி இந்த வேலையைப் பார் என்று சொல்லிவிட்டு, அவர் நேராக டாஸ்மாக் கடையை நோக்கிப் போய்விடுவார். இதை நான் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
ஒருநாள், ஒருவரும் தங்கள் குறைகளை எழுதி வைக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். புகார் இல்லை என்றால், பிளம்பருக்கு வருமானம் இல்லை. அவர்கள், குடியிருப்புவாசிகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருப்பார்கள். இந்தக் குடியிருப்பில் வசதியானவர்கள் யார்? கேட்டவுடன் யார் பணம் தருவார்கள்? என்பதையெல்லாம் தெரிந்து கொள்வார்கள். கையில் சுத்தியலை எடுத்துக் கொண்டு போய், அவர்களது வீடுகளுக்குச் செல்லுகின்ற குழாயை உடைத்துவிட்டு வந்து விடுவார்.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டுக்காரர் பதறிக்கொண்டு ஓடி வருவார். ‘அப்படியா, இதோ வருகிறேன்’ என்று பிளம்பர் ஓடுவார். அன்றைக்கு அவருக்கு வேண்டியது கிடைத்து விடும். இதை நான் கண்டுபிடித்தேன். உடனே அவரைப் பணியில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு உதவியாளராக இருந்தவனையே பிளம்பராகப் பணியில் அமர்த்தினேன்.
பணியாளர்கள் அனைவருமே சங்கப் பொறுப்பில் உள்ளவர்களைப் பகைத்துக் கொள்ளவே மாட்டார்கள். அவர்களிடம் பணிவாகவே நடந்து கொள்வார்கள். ஆனால், குடியிருப்புவாசிகளை மதிக்கவே மாட்டார்கள்.
சில பிளம்பர்கள், ‘நான் அந்த வீட்டுக்குப் போனேன். அவர்கள் கதவைத் திறக்கவே இல்லை’ என்பார்.
குடியிருப்புவாசிகளுக்கும், பணியாளர்களுக்கும் இடையே பிரச்சினைகள் வரும்போது, நாம் தீர விசாரிக்க வேண்டும். என்னுடைய பணியாளர்களிடம் நான் சொல்லுவேன். ‘உனக்கு நான் மட்டும் முதலாளி அல்ல. 176 முதலாளிகள். இங்கே குடியிருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் உனக்குச் சம்பளம் தருகிறோம். எனவே, மற்ற இடங்களில் வேலை பார்ப்பதற்கும் இங்கே வேலை பார்ப்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. நான் என்ன பராமரிப்புத் தொகை தருகின்றேனோ, அதைத்தான் எல்லோருமே தருகின்றார்கள்’ என்பதை எல்லாம் முதலிலேயே சொல்லித்தான் வேலைக்கு ஆள் சேர்ப்பேன்.
பிளம்பரை வேலையில் இருந்து நீக்கியதும், பழைய தலைவர் தொடர்பு கொண்டார். ‘என்ன சார், அவன் எவ்வளவு காலமாக இந்தக் குடியிருப்புக்கு உழைத்து இருக்கிறான் தெரியுமா?’ என்றார்.
நான் சொன்னேன்: ‘சார், நீங்கள் பொறுப்பில் இருந்தபோது, நான் என்றைக்காவது தொடர்புகொண்டு, நீங்கள் எடுத்த முடிவுகளைப் பற்றிக் கேள்வி கேட்டு இருக்கின்றேனா?’ என்று கேட்டேன். ‘இல்லை’ என்றார்.
‘அதைப் போல நீங்களும் நடந்து கொள்ளுங்கள்’ என்றேன்.
ஒரு நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் சுழற்சி முறையில் வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருவரே பொறுப்பில் இருக்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும் ஏதாவது திறமைகள் இருக்கும். புதிதாக வருகின்ற ஒருவர் எடுக்கின்ற நடவடிக்கைகளை, அவ்வாறு செய்யக்கூடாது என்று, முன்பு பொறுப்பில் இருந்தவர்கள் விமர்சிக்கக் கூடாது. ஆனால், சிலர் கூறுகின்ற யோசனைகள் பயன் உள்ளதாக இருக்கும். ‘இப்படிச் செய்தால், பொருள் நட்டம் வரும்’ என்று ஒருவர் கூறினால், அதைப் பற்றிப் புதிய பொறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டும்.
சங்க ஆலோசனைக் குழுவில் நல்ல ஆலோசகர்களைத் தெரிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். எங்கள் குடியிருப்பில் முன்பு பொறுப்பு வகித்தவர்களையே ஆலோசகர்களாக வைத்துக் கொண்டோம். கூட்டங்களுக்கு அவர்களை அழைத்து, கருத்துகளைக் கேட்போம். அதற்குப் பிறகு, புதிய பொறுப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுப்போம். குடியிருப்புச் சங்கங்களைப் பொருத்தவரையில், கூடுமானவரையிலும், எல்லோரையும் சங்கப் பணிகள் தொடர்பாகக் கலந்து ஆலோசித்து வந்தால், பெரிய பிரச்சினைகள் வராது.
குடியிருப்புவாசிகள் இடையே எழும் பிரச்சினைகள்:
பொதுவாக, குடியிருப்புகளை ஐந்து வகைப்படுத்தலாம்:
அடித்தட்டு ஏழைகளின் குடியிருப்புகள்
நடுத்தரக் குடியிருப்புகள்
உயர் நடுத்தரக் குடியிருப்புகள்
நடுத்தர மற்றும் உயர் நடுத்தரக் குடியிருப்புகள்
உயர் குடியிருப்புகள்
பொதுவாக, எல்லாக் குடியிருப்புகளிலும் பிரச்சினைகள் ஒன்றுபோலத்தான் இருக்கும்.
ஒரு குடியிருப்பில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம் இருக்கின்றன. ஆண்களுக்கும், பெண்களுக்குத் தனித்தனி நேரம் ஒதுக்கினார்கள். சில பெண்களே அதை எதிர்த்தார்கள். என்ன ஆணாதிக்க மனப்பான்மை இது? ஆண்,பெண் என்ற பாகுபாடு ஏன்? என்று கேட்டார்கள். இது உயர்குடியிருப்பு.
ஒரு நடுத்தரக் குடியிருப்பில், ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி உடற்பயிற்சிக் கூடம் இருக்கின்றது. இரண்டுக்கும் சேர்த்து பயிற்சியாளராக ஒரு ஆண் இருந்தார். தனியாகப் பயிற்சிக்கு வந்த ஒரு பெண் மீது கை வைத்தார். அந்தப் பெண், தன் கணவரிடம் கூடச் சொல்லப் பயந்து, என்னிடம் கூறினார். உடனே, அந்தப் பயிற்சியாளரைப் பணியில் இருந்து நீக்கினேன். உயர் குடியிருப்பில் பெண்களிடம் கைவைத்தால், பொளேர் என ஒரு அடிகொடுத்து விடுவார்கள். அத்துமீறுகின்ற ஆண்களைக்கூட அடிக்கின்ற துணிச்சல் நடுத்தரக் குடும்பத்துப் பெண்களுக்கு இல்லை.
அடுத்து, குடியிருப்புவாசிகளிடம் பேசும்போது, எச்சரிக்கையாகப் பேச வேண்டும். நான் முதலில் இருந்த குடியிருப்பில், பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள்தாம். அடுத்துக் குடியேறியது சற்றே உயர் நடுத்தரக் குடியிருப்பு. அங்கே சிலர் கோடிகளில் பணப்பரிமாற்றம் செய்பவர்கள். அவர்கள் பேசுகின்ற விதமே தனியாக இருக்கும். அவர்களுக்கு ஏற்ற வகையில் பேச வேண்டும். அதற்கு உள்ளே போய், நடுத்தரக் குடும்பங்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்ற நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு குடியிருப்பை வாங்குகிறார்கள். அது சிறந்தது.
ஒரு குடியிருப்பு வளாகத்தில் செடி, கொடிகள் இருப்பதும், பூக்கள் பூத்துக் குலுங்குவதும் அழகாக இருக்கும். ஆனால், பூக்களைப் பறிப்பதில் போட்டி வந்து விட்டது. அதிகாலையில் எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு வந்து, ஒட்டுமொத்தமாக ஒருவர் பறித்துக் கொண்டு போய்விடுவார்.
இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது? என்று யோசித்தேன். ‘ஐயா, அது கழிவுத் தண்ணீரில் விளைகின்ற பூ; அதை சாமிக்கு வைக்காதீர்கள்’ என்று சொல்லித் தடுத்தேன்.
மழைநீர் சேகரிப்பு
சென்னையில் அடுக்குமாடிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், எல்லாக் குடியிருப்புகளுக்கும் மாநகராட்சி தண்ணீர் வழங்குவது இல்லை. நிலத்தடி நீரைத்தான் உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்படி உறிஞ்ச உறிஞ்ச, சென்னையை ஒட்டி இருக்கின்ற கடல் நீர்தான், உள்ளே பரவிக்கொண்டு இருக்கின்றது. அதை எப்படிச் சரி செய்ய முடியும்?
நீங்கள் தண்ணீரை எடுத்த இடத்தில், மேலிருந்து தண்ணீரை உள்ளே செலுத்த வேண்டும். அதுதான், மழைநீர் சேகரிப்பு. ஆறு அடிகள் அகலத்துக்குக் குழிகளை வெட்டி, கருங்கற்கள், மணல், செங்கல், மணல், வலை போட்டு வைத்து விட வேண்டும்.
ஒவ்வொரு மழைகாலத்திலும், இந்த அமைப்பைத் திறந்து பார்த்துப் பராமரிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, கண்டிப்பாக நல்ல தண்ணீர் பெருகும். இது எங்கள் அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்த உண்மை.
புதிதாகக் கட்டுகின்ற கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு வசதிகளை, கட்டுமான நிறுவனங்களே செய்து தந்து விடுகின்றன. அப்போது எங்கள் குடியிருப்பில் இந்த வசதி கிடையாது. எனவே, ஒவ்வொரு தொகுப்பிலும் குழி வெட்ட வேண்டும் என்று சொன்னோம். அவ்வாறு செய்வதற்குப் பண உதவியும் செய்தோம்.
குப்பை சேகரிப்பு
குப்பையை வீட்டுக்கு வெளியே வைப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நடைவழியை அடைத்து வைத்து விடுவார்கள். ஒருமுறை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் பேச்சு முற்றி, கைகலப்பில் இறங்கிவிட்டார்கள். முன்பெல்லாம் அடுக்குமாடிகளில், குப்பையைக் கீழே கொண்டுவந்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போக வேண்டும். அதைப் பலர் சரியாகச் செய்யவில்லை.
வட இந்தியர்கள், மீந்து போன சப்பாத்திகளை எல்லாம் கொண்டு வந்து போட்டு விட்டார்கள். அதைத் தின்பதற்காக நாய்கள் வந்தன. துப்புரவுப் பணியாளர்களான பெண்களே, வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளைச் சேகரிக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்தினோம்.
முதலில் அதை எல்லோரும் குறை கூறினார்கள். ‘நமது குடியிருப்பில் மின்தூக்கி கிடையாது. மூன்று மாடிகள் ஏறி, ஒவ்வொரு வீடாக எப்படிக் குப்பையைச் சேகரிக்க முடியும்?’ என்று கேட்டார்கள். ஆனால், அந்தத் திட்டம் வெற்றி பெற்றது.
பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று, அழைப்பு மணியை அழுத்தி, ‘குப்பை இருக்கின்றதா?’ என்று கேட்டு வாங்கிச் சேகரித்துக் கொண்டு வந்தார்கள். ஒரே நேரத்தில் எல்லா வீடுகளிலும் குப்பை அகற்றுவது எளிதானது.
மற்றொரு வட இந்தியர், அரிசிப் பொரி வாங்கிக் கொண்டு வந்து, குடியிருப்பு வளாகத்தில் போட்டுக் கொண்டே இருந்தார். அதைத் தின்பதற்காகப் புறாக்கள் வந்தன. அது பெருங்கூட்டமாகிவிட்டது. புறாக்களின் எச்சத்தைக் கழுவி முடியவில்லை. அது மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடுகிறது. அதைத் தவிர்க்கச் செய்தோம்.
குப்பையைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்தேன். கோடைகாலம் என்றால், தர்பூசணி, இளநீர் என்று குப்பைகள் சேர்ந்தன. பால் பாக்கெட், சாம்பார் என எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு விடுவார்கள். குப்பை அள்ளுபவர்கள் அதற்கு உள்ளே கையை விட்டுத்தான் பிரிப்பார்கள்.
மாநகராட்சியில், மட்கும் குப்பை, மட்காத குப்பை என இருவகைப்படுத்துகிறார்கள். நான் கப்பலில் பணி புரிந்தேன். அங்கே சேருகின்ற குப்பைகளை, ஏழு வகையாகப் பிரித்து வைத்து விடுவோம். பச்சை, சிவப்பு, நீலம் என ஒவ்வொரு பக்கெட்டுக்கும் ஒரு நிறம். கண்ணாடிக் குப்பை, காய்கறிக் குப்பை, எலும்புகள், பழைய பேட்டரி, பிளாஸ்டிக் என ஒவ்வொன்றையும் தனித்தனியாகத்தான் போடவேண்டும்.
பன்னாட்டுக் கடல் சட்டப்படி, கப்பலில் இருந்து நீங்கள் குப்பைகளைக் கடலில் கொட்டிவிட முடியாது. பிடிபட்டால், உங்கள் கப்பலின் உரிமத்தையே ரத்து செய்து விடுவார்கள். கரைக்குக் கொண்டு வந்துதான் அகற்ற வேண்டும்.
ஒருமுறை, எங்கள் நகராட்சி ஆணையர் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்குச் சென்று இருந்தேன். அங்கே, எக்ஸ்னோரா நிர்மல் வந்து பேசினார். ‘மட்கும் குப்பையும் காசுதான். மட்காத குப்பையும் காசுதான்’ என்பதை விளக்கினார்.
‘பச்சைக் குப்பைகளைத் தனியாகப் பிரித்து அதைக் கொஞ்சம் உலர்த்திக் காய வைத்து, அதற்கு மேல் மண் தூவ வேண்டும். மறுநாள் மேலும் மண் போட வேண்டும். அதில் புழுக்கள் தோன்றும். பதினைந்து நாள்கள் கழித்து அந்தத் தொட்டியை மூடி விடவேண்டும். அதற்குப் பக்கத்திலேயே மற்றொரு தொட்டியில் குப்பையைப் போட வேண்டும். 15 நாள்கள் கழித்து முதல் தொட்டியைத் திறந்து பார்த்தால், அதில் இருந்த குப்பைகள் பாதியாகக் குறைந்து இருக்கும். அது இயற்கை உரம். கிலோ பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் என்று விற்கலாம்’ என்றார்.
இந்தப் பணி ஊர் கூடித் தேர் இழுப்பது போல. யாரெல்லாம் ஆயத்தமாக இருக்கின்றீர்கள்? என்றார். முதல் ஆளாக, நான் எழுந்து நின்றேன். அந்தத் திட்டத்தை எங்கள் குடியிருப்பில் அதை நடைமுறைப்படுத்தினோம்.
மாநகராட்சித் தொழிலாளிகளை, குப்பைக்காரர் என்று அழைக்கக்கூடாது; Street beautifiers என்றுதான் அழைக்க வேண்டும் என்பார்.
அடுத்தது, சாக்கடை அடைப்பு. இது ஒரு பெரிய பிரச்சினை. ஒவ்வொரு நாளும் காலையில் நானும், மற்றொரு பொறுப்பாளரும் சேர்ந்து, சாக்டைக் குழாயின் மூடிகளைத் திறந்து பார்ப்போம். ஆணுறைகள், (காண்டம்), நேஃப்கின்களைத்தான் துடைத்து எடுக்க வேண்டும். கிராமங்களில் பெண்கள், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்துகின்ற துணியை, யாருக்கும் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்து இருப்பார்கள். நகரப் பெண்களுக்கு அப்படி அல்ல. அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, அப்படியே குப்பைக்கூடைக்கு உள்ளே வைத்து விடலாம். ஆனால், அப்படியே ஃபிளஷ்சில் போட்டு, தண்ணீரைத் திறந்து விட்டு விடுவார்கள். அடுத்து, ஷாம்பு பாக்கெட் ஒரு பெரிய பிரச்சினை.
இவையெல்லாம் சாக்கடைக் குழாய்களை அடைப்பது மட்டும் பிரச்சினை அல்ல. மின் (சப்மெர்சிபிள்) மோட்டாருக்கு உள்ளே புகுந்து விடும். மோட்டார் ரிப்பேராகி விடும். பத்தாயிரம், இருபது ஆயிரம் ரூபாய் செலவு வைத்து விடும்.
இதற்கெல்லாம் தேவை விழிப்பு உணர்வுதான். இந்தப் பிரச்சினை குறித்து, குடியிருப்புவாசிகளிடம் அடிக்கடி விளக்கிச் சொல்ல வேண்டும். குடியிருப்பில் உள்ள பெண்களை எல்லாம் அழைத்து வந்து, அந்தச் சாக்கடைக் குழாயைத் திறந்து காட்டினேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
எங்கள் குடியிருப்பில் இரண்டு இடங்களில் நேப்கின்கள் அடைத்துக் கொண்டன. ஆறு ஆடி ஆழத்தில் பதிக்கப்பட்டு உள்ள குழாயைத் தோண்டி எடுத்துச் சரிசெய்வது பெரும் செலவு. எனவே, புதிதாக இரண்டு குழாய்களை வாங்கி, தரைக்கு மேலேயே பொருத்தினோம்.
கழிவு நீரை மறுசுழற்சி செய்து, தோட்டத்துக்கும், மீண்டும் கழிப்பு அறைகளுக்கும் பயன்படுத்தலாம். அதற்காக, மைக்ரேன் ஃபில்டர் கொண்ட மெம்பரேன்ஸ் பயன்படுத்துகின்றோம். இது மிகவும் விலை அதிகம். ஒரு ஷீட் 5000 ரூபாய் வரை ஆகும். இது இன்னமும் இந்தியாவில் தயாராகவில்லை. கொரியாவில் இருந்துதான் இறக்குமதி செய்கிறார்கள். இதன் வழியாக மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை நாம் குடிக்கலாம். அந்த அளவுக்குச் சுத்தம் செய்து தருகிறது.
(தொடரும்...)
- அருணகிரி (