தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில், தமிழீழத் தேசியக் கொடி தொடர்பிலும், சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பிலும் வெளிப்பட்டுள்ள பிரித்தானியாவின் நிலைப்பாடு புதியதொரு அரசியல் வெளியினைத் திறந்துள்ளதாகத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தடை நீடிப்புக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டவாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்திருந்த சட்டப் போராட்டத்தின் முதல்கள வெற்றியாக, பயங்கரவாதத் தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராகத் தெரிவித்திருந்தது. இத்தீர்ப்பு வெளிவந்த அடுத்த 28 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடைநீக்கம் செய்யும் ஆணையை, உள்துறையமைச்சர் நாடாளுமன்றத்தில் முன்வைப்பது மட்டுமே உரிய அடுத்த நடவடிக்கையாக அமைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்திருந்தது.

தமக்கு 90 நாட்கள் அவகாசம் தருமாறு ஆணையத்திடம் பிரித்தானிய அரச தரப்பு கோரியிருந்தது.இந்நிலையில் விடுதலைப் புலிகள் தொடர்பிலான புதிய ஆதாரங்களுடன் தடையினை நீடிப்பதாக பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

யூலை 2020ல், கிளிநொச்சியில் வெடிமருந்தொன்று தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை, தவறுதலாக அது வெடித்து விட்டதாகவும், இது கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் வெடிமருந்து போல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

டிசம்பர் 2020ல், பேருந்தில் கைது செய்யப்பட்ட தம்பதிகளிடத்தில் கிளைமோர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒருவர் முன்னாள் போராளி என்றும் சொல்லப்பட்டது.

இவ்விரு சம்பவங்களின் அடிப்படையில், விடுதலைப் புலிகளின் இராணுவப்பிரிவு சிறுசிறு குழுக்களாக விடுதலைப் புலிகளின் நோக்கை நிறைவேற்றுவதனை இலக்காகக் கொண்டு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக கருதுகின்றோம் என பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தமிழீழத் தேசிய துக்க நாளான மே18ல் (2020) சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சு, மட்டக்களப்பு மாநாகரசபை மற்றும் இந்தியாவில் கேரளாவில் உள்ள சிறிலங்கா துணைத்தூதரக இணையத்தளங்கள் 'சைபர் தாக்குதலக்கு' இலக்கானதாகவும், இந்த இணையத்தளங்களில் 'தமிழீழத் தேசியக் கொடி' அல்லாது, 'விடுதலைப் புலிகளின் கொடி' தரவேற்றம் செய்யப்பட்டிருந்தாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை இலக்காக கொண்டு தமிழ்மக்களின் அரசியல் போராட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மீதான தடை இடையூறாக இருக்கின்றது என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வாதுரைக்கு பதிலளிக்கும் வகையில் 'சுயநிர்ணய அரசியல் போராட்டங்களுக்கு' தடைவிதிக்கப்படவில்லை என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் 42 நாட்களுக்குள் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்யலாம் என்ற நிலையில், தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டம் தொடர்பில் சட்டவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குவதற்கான சட்டப் போராட்டம் என்பது, சர்வதேசத் தளத்தில் தமிழர்களது அரசியல் போராட்டத்துக்குப் புதிய வெளிகளைத் திறக்கும் என்ற நிலையில், தமிழீழத் தேசியக் கொடி மற்றும் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பிலான பிரித்தானிய உள்துறை அமைச்சின் நிலைப்பாடு, புதியதொரு அரசியல் வெளியினை திறப்பதோடு இதனை கூர்மைப்படுத்தி எமது இலக்கினை அடைய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Pin It